Blogger Widgets

Total Page visits

Friday, October 11, 2013

200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு : பல மாத யோசனைக்குப் பின் முடிவு

பல மாத யோசனைக்குப் பின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய அணி வீரர் சச்சின். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், முழுமையாக விடைபெறுகிறார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. 1989, நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். 198 டெஸ்டில் 15,837 ரன்கள் (51 சதம்), 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் (49 சதம்) என, மொத்தம் 50,024 ரன்கள் குவித்துள்ளார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2006, டிச., 1ல் பங்கேற்ற போட்டி தான், இவரது முதல் மற்றும் கடைசி "டுவென்டி-20'. இதன் பின், கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து, ஓய்வு அறிவித்தார்.

சதம் இல்லை:

டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். கடைசியாக 2011, ஜன., 2ல், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் சதம் அடித்தார். இதன் பின் இங்கிலாந்து (8), ஆஸ்திரேலியா (8), வெஸ்ட் இண்டீஸ் (3), நியூசிலாந்து (2) என 21 டெஸ்டில் பங்கேற்று, களமிறங்கிய 38 இன்னிங்சில் சதம் அடிக்கவில்லை. 

200வது டெஸ்ட்:

இதனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, சர்வதேச அட்டவணைப்படி இந்திய அணி தென் ஆப்ரிக்கா செல்லும் போது, சச்சின் 200வது டெஸ்டில் பங்கேற்கும் நிலை இருந்தது.

ஆனால், சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டியை, இந்திய மண்ணில் நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடுகள் செய்தது. இதன்படி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது. 

இதற்கான இடங்கள் முடிவாகவில்லை. எனினும், இத்தொடரின் 2வது டெஸ்ட், நவ., 14 முதல் 18 வரை நடக்கவுள்ளது. இது கோல்கட்டா (ஈடன் கார்டன்) அல்லது மும்பையில் (வான்கடே) நடக்கும். 

ஓய்வு அறிவிப்பு:

இதனிடையே, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனை நேற்று தொடர்பு கொண்ட சச்சின், ஓய்வு குறித்த அறிக்கையை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். 
இதில் சச்சின் கூறியிருந்தது: 

இந்தியாவுக்காக வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது கனவு. 24 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும், இந்த கனவுடன் தான் வாழ்ந்தேன். 11வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், இப்போது, கிரிக்கெட் இல்லாத எனது வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே கடினமாக உள்ளது.

பெரிய கவுரவம்:

எனது கிரிக்கெட் வாழ்க்கையில், இந்தியாவுக்காக உலகின் பல இடங்களில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது பெரிய கவுரவம். தற்போது, சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டி விளையாட உள்ளதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அன்று முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்.

சரியான தருணம்:

ஓய்வு பெற இது தான் சரியான தருணம் என மனது கூறியது. இந்த முடிவை எடுக்க அனுமதித்ததற்கும் மற்றும் கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டுகள் பங்கேற்க உதவியதற்கும் பி.சி.சி.ஐ.,க்கு எனது நன்றி. இவ்வளவு காலம் பொறுமையாக இருந்து, என்னை புரிந்து கொண்ட எனது குடும்பத்தினருக்கும் நன்றி. 

ரசிகர்களுக்கு நன்றி:

இவை அனைத்தையும் விட, நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக, இத்தனை நாட்கள் பிரார்த்தனை செய்தும், வாழ்த்தியும் வந்த எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளுக்கும் நன்றி. 

இவ்வாறு அந்த கடிதத்தில் சச்சின் தெரிவித்துள்ளார்.

சச்சினின் சாதனை பயணங்கள்

மும்பையில், 1988ல் நடந்த லார்டு ஹாரிஸ் ஷீல்டு தொடரில் சச்சின், வினோத் காம்ப்ளி ஜோடி 664 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தது. இதன்மூலம் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில், அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றது.

இதன் மூலம், 1989ல் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது உலகில் அதிக டெஸ்ட் போட்டிகளில் (198) பங்கேற்ற வீரர் என்ற பெருமை இவருக்குத் தான். 

இவரை அடுத்து, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் தலா 168 டெஸ்டில் விளையாடினர். அடுத்த 2 இடங்களில் இந்தியாவின் டிராவிட் (164), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (162) உள்ளனர்.

* டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் (15,837) எடுத்த முதல் வீரர் சச்சின் தான். அடுத்த 2 இடங்களில் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13,378), இந்தியாவின் டிராவிட் (13,288) உள்ளனர்.

* டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் (51) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (44), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

* 1989, பாகிஸ்தானுக்கு எதிராக குஜ்ரன்வாலா ஒருநாள் போட்டியில் அறிமுகமான சச்சின், மொத்தம் 463 ஒருநாள் போட்டியில் விளையாடினார். இதன்மூலம் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார். 2, 3வது இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (445), ஜெயவர்தனா (404) உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் சச்சினுக்குத் (18,426 ரன்கள், 49 சதம்) தான் முதலிடம். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13,704, 30 சதம்), இலங்கையின் ஜெயசூர்யா (13,430, 30 சதம்) உள்ளனர்.

* ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் சச்சின். இவர், குவாலியரில், 2010ல் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 147 பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.

* தாகாவில், 2012ல் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்த சச்சின், சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட் 51 + ஒருநாள் 49) "சதத்தில் சதம்' அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 50 ஆயிரம் ரன்களுக்கு மேல் (954 போட்டி, 50,024 ரன்கள்) எடுத்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இந்த இலக்கை எட்டிய 16வது வீரரானார்.

* டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற உள்ள இவர், வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம், 200 டெஸ்டில் விளையாடிய முதல் வீரர் என்ற மேலும் ஒரு புதிய சாதனை படைத்து விடை பெற காத்திருக்கிறார்.

நிறைவேறாத சாதனை

கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்த சச்சினுக்கு, ஒன்று மட்டும் எட்டாக் கனியாக உள்ளது. இவரது அதிகபட்ச டெஸ்ட் ரன் 248 தான் ( எதிரணி-வங்கதேசம், 2004). ஆனால், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா 400 ரன்கள் (எதிர்-இங்கிலாந்து, 2004) எடுத்துள்ளார். வரும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் எழுச்சி காணும் பட்சத்தில், லாராவின் சாதனையை முறியடிக்க முயற்சிக்கலாம்.

* இதேபோல, முதல் தர போட்டியில் அதிக ரன்கள் எடுத்த லாராவின் (501 ரன்கள்) சாதனையும், சச்சினால் முறியடிக்கப்படவில்லை. 

சிறந்த "பேட்ஸ்மேன்'

சச்சின் ஓய்வு குறித்து அறிவித்த பின், "சிறந்த பேட்ஸ்மேன்' யார் என, இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் "தி டெலிகிராப்' பத்திரிகை, இணையதளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியது. நேற்று இரவு 8.30 மணி வரை பதிவான 2108 ஓட்டுக்களில், சச்சின் தான் சிறந்தவர் என, 1,146 (54.36 சதவீதம்) தெரிவித்தனர். 

ஆஸ்திரேலியாவின் பிராட்மேன் (558), வெஸ்ட் இண்டீசின் லாரா (132), ரிச்சர்ட்ஸ் (118) அடுத்த 3 இடங்களை பெற்றனர். ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஆலன் பார்டர், இந்தியாவின் டிராவிட், வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், தென் ஆப்ரிக்காவின் காலிசிற்கு சொற்ப, ஓட்டுக்களே கிடைத்தன.

கடினம் தான்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" சச்சினின் ஓய்வு காரணமாக, இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய துளை விழுந்து விட்டது. இதை சரிசெய்வது சிரமம். கங்குலி, லட்சுமண், டிராவிட் ஓய்வின் போது நடந்தது போலத்தான், சச்சின் இடத்தை நிரப்ப, சிறிது காலம் தேவைப்படும்,'' என்றார். 

சரியான முடிவு

முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில், ""சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்துள்ளார் சச்சின். வெஸ்ட் இண்டீஸ் தொடர் துவங்கும் முன் அறிவித்தது மகிழ்ச்சி. சச்சினின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியை அனைவரும் நேரில் பார்த்து, மரியாதை செலுத்த வேண்டும்,'' என்றார்.

மோசமான நாள்

இலங்கை அணியின் ஓய்வு பெற்ற சுழல் ஜாம்பவான் முரளிதரன் கூறுகையில், ""எந்த அணியை சேர்ந்தவர்களும் முதலில் இவரை அவுட்டாக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், கடைசியில் சச்சின் வென்று விடுவார். இவர் ஓய்வு பெறும் நாள், உலக மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான நாள்,'' என்றார்.

நினைக்க முடியவில்லை

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் கூறுகையில், ""உலகின் சிறந்த வீரர்கள் பட்டியலில் எப்போதும் சச்சினுக்குத் தான் முதலிடம். இந்தியா மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு இடையே நல்ல தூதராக இருந்தார். விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தூண்டுகோலாக இருந்தார். இவர் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. சச்சின் ஓய்வு முடிவுக்கு மதிப்பு தருகிறோம்,'' என்றார்.

"டுவிட்டரில்' வாழ்த்து

சச்சின் ஓய்வு குறித்து உலகின் பல வீரர்கள், "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தி:

கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து):

"சச்சின் தான் கிரிக்கெட் சாம்பியன். இதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை'.

இயான் மார்கன் (இங்கிலாந்து): 

"சச்சின் ஓய்வு பெறப்போகிறார் என்ற செய்தி வருத்தமாக உள்ளது. இவரை நினைத்து இந்தியா பெருமை கொள்ளலாம்'.

இர்பான் பதான் (இந்தியா):

"சச்சினுடன் இணைந்து விளையாட முடியாது என நினைக்கும்போது, வேதனையாக உள்ளது'.

மைக்கேல் வாகன்:

"பெரிய வீரரான சச்சின் ஓய்வு பெறுகிறார். என் ஹீரோவான இவருடன் விளையாடியது மறக்க முடியாது'.

மஞ்ச்ரேக்கர் வாழ்த்து

இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், ""ஜாம்பவனான இவரை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இவரின் எதிர்காலம் நன்கு அமைய வாழ்த்துகிறேன்,'' என்றார். 

அதிர்ச்சி தந்த ஓய்வு:

இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதின் கூறுகையில்,"" சச்சின் விடைபெறுவார் என தெரியும். இப்போது ஓய்வு பெறுகிறார் என்று அறிந்தவுடன் அதிர்ச்சியாக உள்ளது. இவரின் ஆட்டத்தை நினைத்து பெருமை கொள்ளலாம்,'' என்றார். 

ஆஸி.,யுடன் அதிகம்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் மற்றும் அதிக ரன்கள் எடுத்துள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 39 போட்டியில் 11 சதம் உட்பட 3630 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் அடித்த டெஸ்ட் ரன்கள்:

எதிரணி போட்டி 100/50 ரன்கள்

ஆஸ்திரேலியா 39 11/16 3630
இங்கிலாந்து 32 7/13 2535
இலங்கை 25 9/6 1995
தென் ஆப்ரிக்கா 25 7/5 1741
நியூசிலாந்து 24 4/8 1595
வெஸ்ட் இண்டீஸ் 19 3/9 1546
பாகிஸ்தான் 18 2/7 1057
ஜிம்பாப்வே 9 3/3 918
வங்கதேசம் 7 5/0 820
-------------------------------
மொத்தம் 198 51/67 15837
--------------------------------
இலங்கையுடன் அதிகம்

ஒருநாள் போட்டி வரலாற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் (9) அடித்த சச்சின், இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் (3113) எடுத்தார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் அடித்த ஒருநாள் போட்டி ரன்கள்:

எதிரணி போட்டி 100/50 ரன்கள்
இலங்கை 84 8/17 3113
ஆஸ்திரேலியா 71 9/15 3077
பாகிஸ்தான் 69 5/16 2526
தென் ஆப்ரிக்கா 57 5/8 2001
நியூசிலாந்து 42 5/8 1750
வெஸ்ட் இண்டீஸ் 39 4/11 1573
இங்கிலாந்து 37 2/10 1455
ஜிம்பாப்வே 34 5/5 1377
கென்யா 10 4/1 647
வங்கதேசம் 12 1/2 496
நமீபியா 1 1/0 152
யு.ஏ.இ., 2 0/1 81
நெதர்லாந்து 2 0/1 79
பெர்முடா 1 0/1 57
அயர்லாந்து 2 0/0 42
---------------------------------
மொத்தம் 463 49/96 18426
---------------------------------

50 ஆயிரம் ரன்கள்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 50 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களில் சச்சின் எடுத்த ரன்களின் விவரம்:

பிரிவு போட்டி ரன்கள் 100/50
டெஸ்ட் 198 15,837 51/67
ஒருநாள் 463 18,426 49/96
"டுவென்டி-20' 96 2,797 1/16
முதல் தரம் 109 9,391 30/47
"ஏ' தரம் 88 3,573 11/18
---------------------------------
மொத்தம் 954 50,024 142/244

No comments: