Blogger Widgets

Total Page visits

Thursday, October 24, 2013

வணக்கம் சென்னை விமர்சனம்

கைவசம் நிறைய கதைகளை வைத்துக்கொண்டும், மனதில் இயக்குநர் ஆசையை வளர்த்துக் கொண்டும், நான் இயக்குநராக சம்மதித்தால் நீங்கள் கதாநாயகராக நடிக்க தடையேதுமில்லை... என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம், ‘‘ஒரு கல் ஒரு கண்ணாடி’’ ஆரம்பநேரத்தில் அவரது ஆத்துக்காரம்மா கிருத்திகா உதயநிதி சொல்லியிருப்பார் போலும், அதன் விளைவே, ‘‘வணக்கம் சென்னை!’’ ஆனாலும், ஆத்துக்காரம்மா இயக்கத்தில் உதயநிதிக்கு நடிக்கத் தயக்கம், அதனால் ‘மிர்ச்சி’ சிவாவை பிடித்து போட்டு, அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை வளைத்துபோட்டு, தன் புருஷனையும் க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் இழுத்துபோட்டு துணிச்சலாக ‘‘வணக்கம் சென்னை’’ என்றிருக்கும் கிருத்திகா உதயநிதி, வரவேற்பிற்குரிய இயக்குநர்கள் பட்டியலிலும் இடம்பிடித்து விட்டிருக்கிறார் என்றால் மிகையல்ல!

கதைப்படி தேனி, பக்கத்து மிடில்கிளாஸ் கிராமத்து இளைஞர் ‘‘மிர்ச்சி’’ சிவா. சென்னையில் சாப்ட்வேர் உத்தியோகவாசியாகி சென்னைக்கு வருகிறார். அதற்கு ஒரு சில நாட்கள் பின்பு, லண்டனில் செட்டில் ஆன ஹைகிளாஸ் இந்தியர் நிழல்கள் ரவியின் ஒற்றை பெண் வாரிசு பிரியா ஆனந்த், தனது போட்டோகிராபி மோகத்தால் ஒரு ஆறு மாதகாலம் சென்னையில் தங்கி தமிழகத்தை விதவிதமாக போட்டோ எடுத்து, லண்டன் புகைப்பட போட்டியில் வெல்ல சென்னை வருகிறார். வந்த இடத்தில் இருவருக்கும் சந்தானத்தின் ஏமாற்று வேலையால் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் ஒரே வீட்டில் வசிக்க வேண்டிய சூழல்! ஆரம்பத்தில் மோதிக் கொள்ளும் இருவரும் அதன்பின் அவர்களை அறியாமலே காதலில் விழுகின்றனர். ஆனால், பிரியா ஆனந்துக்கோ லண்டனில் ஏற்கனவே ஒரு ஹைகிளாஸ் இளைஞருடன், பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கல்யாணம் நிட்சயிக்கப்பட்டிருக்கிறது! அந்த இளைஞரும் பிரியாவைத் தேடி சென்னை வருகிறார். தடை பல கடந்து சந்தானத்தின் உபத்திரத்தால் ஊருக்காக புருஷன்-பொண்டாட்டியான இவர்கள், உண்மையில் ஜோடி சேர்ந்தார்களா? இல்லையா..? அதற்கு உபத்திர சந்தானத்தின் உதவி என்ன? லண்டன் மாப்பிள்ளை ராகுல் ரவிந்தனின் நிலை என்ன? இதில் ரேணுகா, ஊர்வசி, சங்கீதா, ப்ளாக் பாண்டி, கிரேன் மனோகர் உள்ளிட்டோரின் ‌ரோல் என்ன என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், அதேநேரம் வியிறு குலுங்க வைக்கும் காமெடியாகவும் பதில் அளிக்கிறது ‘‘வணக்கம் சென்னை’’ படத்தின் மீதிக்கதை!

அஜய்யாக சிவா, அஞ்சலியாக பிரியா ஆனந்த் இருவரும் ‘மேட்பார் ஈச் அதர்’ எனும் அளவில் கனகச்சிதமாக பொருந்தி நடித்திருக்கின்றனர். ஆனாலும் பிரியா, புல் பாட்டிலில் பாதியளவு இருக்கும் விஸ்கியை ‘ரா’ வாக அடிப்பதெல்லாம் என்னதான் லண்டன் ரிட்டர்ன் என்றாலும் ரொம்பவே ஓவர்! ‘தில்லு முள்ளு’ ஹவுஸ் ஓனர் நாராயணனாக வரும் சந்தானத்தில் தொடங்கி, க்ளைமாக்ஸில் கெஸ்ட்ரோலில் வரும் உதயநிதி வரை ஒவ்வ‌ொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது ‘‘வணக்கம் சென்னை’’யின் பெரிய ப்ளஸ்!

அனிருத்தின் இ‌ளமை துள்ளும் (வரிகள் புரியவில்லை என்றாலும்...) இசை, ரிச்சர்ட் எம்.நாதனின் ஓவிய ஒளிப்பதிவு, செல்வகுமாரின் கலைநயமிக்க (குறிப்பாக பாடல் காட்சிகளில்...) கலை இயக்கம் உள்ளிட்ட மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், எஸ்.திவ்யநாதனின் வசனம் மற்றும் இணை இயக்கமும் பக்க(கா) பலமாக இருந்து நம்பமுடியாத ஒரு கதையை, நம்புபடியான ஓர் திரைக்கதையாக்கி இயக்க கிருத்திகா உதயநிதிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்பதோடு, அவரை நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்கள் வரிசையிலும் தூக்கி நிறுத்தியிருக்கின்றன!

ஆக மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் ‘‘வணக்கம் சென்னை’’ - ‘‘ஒரு முறை பார்க்கலாம்ணே!’’

No comments: