Blogger Widgets

Total Page visits

Thursday, October 24, 2013

சித்திரையில் நிலாச்சோறு விமர்சனம்

மனநிலை சரியில்லாத தாய்க்கு பிறக்கும் அழகு குழந்தை. அந்த குட்டி தேவதையை அரவணைக்கும் பணக்கார இளைஞன். அவனுக்கு துணையாகவும்,அந்த தேவதைக்கு தாயாகவும் மாறத்துடிக்கும் இளம்பெண்... ‘இவர்கள் அனைவரையும் இசைஞானி நிச்சயம் கரைசேர்த்து விடுவார்’ என்ற நம்பிக்கையில் ‘சித்திரையில் நிலாச்சோறு’ படைத்திருக்கிறார் ஆர்.சுந்தர்ராஜன். நம்பிக்கை ஓரளவு வீண்போகவில்லை!

‘கதைக்காகவும்‌, காட்சி அமைப்புகளுக்காகவும், இயக்குனர் துளிகூட சிரமப்படவில்லை’ என்பது, படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதிக்காட்சி வரை அப்பட்டமாக தெரிகிறது. தெளிவில்லா ஒளிப்பதிவு, கஞ்சா கருப்பின் ‘மொக்கை’ காமெடி, சிரிப்பை வரவழைக்கும் அரசியல்வாதி வில்லன், வீணடிக்கப்பட்டிருக்கும் பூமிகா, ராதாரவி என, நிலாச்சோறு கசக்க எண்ணற்ற காரணங்கள். என்றாலும்... கசப்பிற்கு ஊடே, அவ்வப்போது நிலாச்சோறு ருசிக்கிறது. காரணம்... இளையராஜா மற்றும் ஓவியா (பேபி சாரா).

‘‘எனக்கு எல்லாமே அப்பாதான்னு இருக்கறப்போ, நான் ஏன் சாமியை கும்பிடணும்?’’ என ஆரம்பக்காட்சியில் தந்தையிடம் கேட்கும் நொடியில்... பூவில் இறங்கும் பனித்துளியாய் நம் மனதிற்குள் இறங்குகிறாள் ஓவியா! அதற்குப்பின்... குட்டி நாயோடு கவுரி (வசுந்தரா) கொஞ்சி குலாவுவதைப் பார்த்து, ‘‘அது ரெண்டுல எது நாய்?’’ என மழலை ததும்ப கேட்டு நம் மனம் மயக்குகிறாள். கவுரியை கேலி செய்து தண்டனை பெறும் நேரத்தில்... கவுரியிடமிருந்து எதிர்பாராமல் கிடைத்த முத்தத்தால், தாய்ப்பாசம் உணர்ந்து உருகும் அந்த அழகில்... அழகு ஓவியமாய்... சொக்க வைக்கிறாள்! ‘‘எங்க அம்மா யாருன்னு ஊரே கேட்குது! ஆனா ஒரு நாளும் நான் உன்கிட்டே கேட்டதில்லையேப்பா!’’ என தந்தையிடம் மருகும்போது... தன் தந்தையோடு சேர்த்து, நம் கண்களையும் நனைக்கிறாள்!

‘‘கல்லாலே செஞ்சு வைச்ச சாமியல்ல நீ...’’ பாடல், படத்தில் இருமுறை ஒலிக்கிறது. ஆனாலும், மனம் திருப்தியடைய மறுக்கிறது. இசைஞானி... வழக்கம்போல் ஜெயித்திருக்கிறார்!

ரசிகன் குரல்: ஆர்.சுந்தர்ராஜன் படம்னு நம்பி வந்தேன். ச்சே... ஏமாத்திட்டாரே!

மொத்தத்தில் ‘சித்திரையில் நிலாச்சோறு’ - பழைய சோறு

No comments: