Blogger Widgets

Total Page visits

Thursday, October 24, 2013

தவறுகளைத் திருத்தி நல்வழி காட்ட இயலாமல் தவிக்கும் நவீனமய சமுதாயங்கள்

ஒழுக்க நெறியை வலியுறுத்திய காரணத்திற்காக, தமிழ் நாட்டில் தூத்துக்குடியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் முதல்வரை மூன்று மாணவர்கள் கொடுமையாகத் தாக்கிக் கொன்ற சம்பவம் நமது நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது. இப்போது உள்ளது போல நவீனமயமாகாது சிறிது பாரம்பரியத்தையும் கடைப்பிடித்துக்கொண்டு நமது நாடு வாழ்ந்து கொண்டிருந்த பல ஆண்டுகள் முன்பாக, இது போன்ற தகாத சம்பவங்கள் நடக்கும் என்பதை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. நவீனமயம் என்றாலே மக்களை அவர்களது பண்டைய பழக்க வழக்கங்களைத் தூக்கி எறியச் செய்துவிட்டு, அவர்களை நாகரீகமாக்குதல் என்றதொரு அகங்காரம் கூடிய பிரமை வளர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் நன்கு மேம்பாடு அடைந்திருக்கும் நாடுகளான அமெரிக்கா உட்பட, பல சமுதாயங்களிலும் இத்தகைய தகாத சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தொன்றுதொட்டு இருந்து வந்த சமூகக் கட்டுப்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, என்றும் ஒருவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனது குடும்பச் சூழ்நிலையும் அவனுக்கு உதவாதவாறு ஓர் ஓரத்திற்கு ஒதுக்கப்பட்டு, ஆட்சி, சட்டம், பொதுவுலகத் தொடர்பு சாதனங்கள், மற்றும் பெருமையுடன் உயர்த்திப் பேசப்படும் ஒரு தனி மனிதனின் உரிமை இவைகளே தற்காலத்திய ஆட்சி அங்கங்களில் முக்கியத்துவம் வகிக்கின்றன. மிக்க வலிவுடன் இருப்பதாகக் கருதப்படும் இந்த நவீன சமூக அமைப்புகள் எல்லாம் ஏன் சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை எல்லாம் தடுக்கவோ, திருத்தி நல்வழி காட்டவோ இயலவில்லை?

முதலில் பொதுவுலகத் தொடர்பு சாதனங்களான பத்திரிகைகளையும், தொலைக் காட்சிகளையும் எடுத்துக் கொள்ளலாம். நடக்கும் தவறுகளை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டினால் அவைகளைத் திருத்தி விடலாம் என்று அவை நினைக்கின்றன. திருத்துவது அவ்வளவு எளிது என்றால் ஆண்-பெண் சம உரிமை, மேன்மையான சட்ட- ஒழுங்கு பராமரிப்பு, விரைவான நீதி மன்ற உத்திரவுகள் என்று நிலவும் மேலை நாடுகளில், ஓர் உதாரணத்திற்கு, மனிதாபிமானமற்ற பாலியல் பலாத்காரம் போன்ற கீழ்மையான செயல்களை ஒழிக்க முடியாது போயிருந்தாலும் ஓரளவிற்காவது கட்டுப்படுத்தியிருக்க வேண்டுமே! அங்கு நடக்கும் பாலியல் பலாத்காரம் பற்றிய புள்ளி விவரங்கள் கேட்போர் எவரையும் பதைபதைக்கச் செய்யும். சென்ற குளிர்காலத்தில் டெல்லியில் நடந்த கொடூரமான கூட்டுக் பாலியல் பலாத்காரச் சம்பவத்திற்குப் பின், இவ்வாறான பலாத்காரங்களும், கொலைகளும் மிகுந்த இந்திய நாடு எப்படி ஆன்மிகத்தில் திளைத்த ஒரு நாடு என்று சொல்லிக்கொள்ள முடியும் என்று மேலை நாடுகளின் ஊடகங்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அதற்குச் சரியான பதில் ஓர் இந்தியரிடம் இருந்து வரவில்லை. எமர் ஓடூல் என்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளர் “தி கார்டியன்” என்ற தினசரிப் பத்திரிகையின் 1 ஜனவரி 2013 இதழில், டெல்லியில் ஆண்டிற்கு 625 பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றால், டெல்லியின் மக்கட்தொகையில் மூன்றரை மடங்கே அதிகம் உள்ள ஒட்டுமொத்த இங்கிலாந்திலும் அவ்வாறு நடக்கும் சம்பவங்கள் ஆண்டிற்கு 9500 ஆக இருக்கின்றனவே என்று பதிலடி கொடுத்தார். அதற்குப் பத்து நாட்கள் கழித்து “தி இன்டிபென்டன்ட்” என்ற இன்னுமொரு ஆங்கிலேய தினசரி, தனது 10 ஜனவரி 2013 இதழில், இங்கிலாந்தில் ஆண்டிற்கு 1,00,000 பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அவைகளில் 1000 பேர்களே தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்றும் சொல்லி, அவ்வளவு குறைவான எண்ணிக்கையில் உள்ள தண்டனைகளைப் பற்றி வேதனைப்படுவதாகவும் எழுதியது. அமெரிக்காவின் நிலைமையும் இதே போன்றதுதான். அமெரிக்க அரசின் நீதித்துறை அந்நாட்டில் 2006-ம் ஆண்டில் 3,00,000 பெண்மணிகள் கற்பழிக்கப்பட்டதாகப் புள்ளி விவரம் தருகிறது. இது தவிர, நவீனமயத்தின் சிகரமான அமெரிக்காவில், அதே ஆண்டில் 92,000 ஆண்களைப் பெண்கள் கற்பழித்தார்களாம்! இதில் கூடவா அவர்கள் ஆண்-பெண் சம உரிமையைக் கோருவார்கள்? இணையதளம் www.ojp.usdoj.gov/nij கொடுக்கும் தகவல்படி 1.77 கோடி பெண்களும், 280 லட்சம் ஆண்களும் வாழ்வில் ஒருமுறையாவது கற்பழிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் குறைந்த பட்சமாக பெண்கள் ஆண்களைக் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்வதில்லை என்றாவது சொல்லிக் கொள்ளலாம்.

இரண்டு நாட்டு மக்கள் தொகையின் விகிதாச்சாரப்படி, இங்கிலாந்தின் கணக்குப்படி பார்த்தால் இந்தியாவில் ஆண்டிற்கு 24 லட்சம் பாலியல் பலாத்காரங்களும், அமெரிக்காவின் கணக்குப்படி குறைந்த பட்சமாக 16 லட்சம் பாலியல் பலாத்காரங்களும் நடந்திருக்க வேண்டும். இந்திய மையப் புள்ளிவிவரக் கணக்குப்படி இந்தியாவில் 2008-ம் ஆண்டில் 20,771 பாலியல் பலாத்காரங்கள் நடந்திருக்கின்றன. இந்த ஒப்பீடுகளில் இருந்து தெரியவரும் விவரங்கள் அனைவருக்கும் நன்கு புரியக்கூடியவையே. மேலை நாட்டில் இருக்கும் வலிமையான ஊடகங்களும் தங்களது சமுதாய அவலங்கள் எனக் கருதப்படும் பாலியல் பலாத்காரக் குற்றங்களைக் குறைப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் தோல்விகளையே சந்தித்திருக்கின்றன. தற்காலத்திய அரசுகளும் குற்றங்களைக் குறைக்கும் அளவு வேண்டிய தண்டனைகளை வழங்கவில்லை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் நவீன சமுதாயம் என்பதை விரும்பி அதை ஏற்றோர்களையே அந்தச் சமுதாயம் கைகழுவி விட்டிருக்கிறது.

நவீனமயம் என்றாலே இந்தியர்களில் பொதுவாகப் பலரும் காண்போரைக் கவரும் வண்ணம் உடை உடுத்துவது, மேலை நாட்டு வழக்கங்களை மேற்கொள்ளுவது, நகரத்தில் உள்ளவர்கள் போல வாழ்வது, ஆங்கிலத்தில் உரையாடுவது என்றே நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அது அவைகளையும் கடந்து இருப்பது. அது மற்ற நாட்டினரின் சித்தாந்தங்களை ஊடுருவும் ஒரு மேலை நாட்டினரின் பழக்கம். அது தங்களுக்கு அன்னியமானவர்களின் தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களைப் புறக்கணிக்க வைத்த பின்னரே தங்களது பொருளாதாரக் கொள்கையை அரங்கேற வைப்பது.

1951-ல் ஐக்கிய நாடுகள் அவையின் சமூக மற்றும் பொருளாதாரத் துறை, வளர்ந்து வரும் நாடுகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தியது: “விரைவான பொருளாதார முன்னேற்றம் காணவேண்டும் என்றால்…. அதற்குப் பண்டைய வழிமுறைகளைக் கைவிட வேண்டும் என்பதே அதற்குக் கொடுக்கப்படும் விலையாகும்…. பழைய சமூக ஏற்பாடுகள் அனைத்துமே சிதிலம் ஆகவேண்டும்…. சாதி, சமூகம், இனம் என்ற கட்டுப்பாடுகள் அனைத்துமே வெடித்துச் சிதற வேண்டும்… எவர் அதையெல்லாம் செய்ய மறுக்கின்றார்களோ அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே நிற்கக் கடமைப்பட்டவர்கள்”.

“மேலை நாட்டு சமூகவியல் நவீனமயம்” என்று குறிப்பிடத் தக்க அந்தச் சித்தாந்தம் மற்ற நாடுகள் அனைத்துமே மேலை நாடுகளின் அடிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது. ஆனால் 2008-ம் ஆண்டிற்குப் பின் அந்த நிலை அடியோடு மாறியிருக்கிறது. இப்போது அந்தச் சித்தாந்தம் தங்களுக்கு இருந்தது போல மற்ற நாடுகளுக்கு அவ்வளவாகப் பொருந்தாது என்பதை மேலை நாடுகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்தச் சித்தாந்தத்தால் மற்ற நாடுகளுக்கு விளைந்த சிந்தனைச் சிதறலை வெகு சீக்கிரமாக மாற்ற இயலாது. பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் அத்தியாசத் தேவை என்று சொல்லி திணிக்கப்பட்ட அந்த நவீனமயம் தற்போது ஒரு பழக்கம் அல்லது வழிமுறை என்றளவிற்கு வந்துவிட்டது.

ஒரு வழிமுறையைப் பின்பற்றி வரும் நிபந்தனையற்ற தனி மனிதத் தன்மை என்றதொரு கொள்கையின் அடிப்படையில் தற்காலத்திய மேலை நாட்டு வழிகள் அமைந்திருக்கின்றன. மேக்ஸ் வெபர், கார்ல் மார்க்ஸ் போன்ற சித்தாந்தவாதிகளால் எடுத்துரைக்கப்பட்ட அந்தக் கொள்கை நமது இந்திய சிந்தனையாளர்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. தனி மனிதன் ஒரு குடும்பத்திலும், சமூகத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதால் அவைகளுடன் அவன் ஒன்றி இணைந்தவன் என்ற கருத்தை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

நவீனமய வயப்பட்ட சிந்தனைகள் ஒரு குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஒரு தனி மனிதன் ஆற்ற வேண்டிய கடமைகளை விட அவனது உரிமைகளையே வலியுறுத்தும். சிந்திக்கும் மனிதன் மற்றும் சிறப்பான வணிகம் என்ற அடிப்படைகளின் மேல் நவீன பொருளாதாரச் சிந்தனைகள் எழுப்பப்பட்டுள்ளன. சமூகம் என்றதொரு அமைப்பே இல்லை என்பது புகழ் வாய்ந்த தர்க்கவாதியான கார்ல் பொப்பர் என்பவரது வாதம். இங்கிலாந்தின் பிரதமராய் இருந்த மார்க்கரெட் தாச்சர், கார்ல் சொல்வது சரியே என்றார். இவைகளிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் நவீனமயம் எனும் கொள்கை ஒரு தனி மனிதனை உயர்த்தி, அவனது குடும்பத்தை எவ்வகையிலும் உதவாதபடிச் செய்தும், அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கு எந்த அந்தஸ்து கொடுக்காமலும் அவர்களைத் தாழ்த்துகிறது என்பதே.

அதனால் கடந்த நூற்றாண்டு காலகட்டத்தில் நடந்த விளைவுகள் இவைதான்: அமெரிக்காவில் மட்டுமே நடந்த முதல் திருமணங்களில் 55 விழுக்காடுகளும், இரண்டாம் திருமணங்களில் 67 விழுக்காடுகளும், மூன்றாம் திருமணங்களில் 74 விழுக்காடுகளும் திருமண முறிவுகளில்தான் கொண்டுவிட்டிருக்கின்றன. பாதிக்கும் மேலான குடும்பங்களில் தாயோ, தந்தையோ சேர்ந்து வாழ்வதில்லை என்பதால் அரசாங்கமே முதியோர்களையும், ஊனமுற்றோர்களையும், வேலையற்றோர்களையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கிறது. பரவலாக இருக்க வேண்டிய குடும்பங்களின் பொறுப்புகளை இவ்வாறு தேசியமயமாக்கித் தன் தலையில் ஏற்றுக்கொண்டு, நிதி நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியாது அரசாங்கம் ஓட்டாண்டியாகிக்  கொண்டிருக்கிறது.

உறவுகள் என்ற புனிதமான அடிப்படையில் வளர்ந்து வந்த பண்டைய சமூகம், மற்றும் குடும்பங்கள் உள்ளிட்ட கலாச்சாரம் பெற்றோர்கள், உற்றோர்கள், மூத்தோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்மணிகளுக்கு உரிய மரியாதையைக் கற்றுக் கொடுத்ததனால், சமூகம் வெறுக்கும் அவல வழிகள் எதனிலும் ஒருவன் போகாதவாறு காப்பாற்றப்பட்டான். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெண்டிர்கள் அனைவருமே மனித வடிவில் நம்மிடையே நடமாடும் தெய்வங்கள் என்றே இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் உள்ள இலக்கியங்களில் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றனர். அத்தகைய சமூக அமைப்புகள் போற்றும் மரியாதை என்பதே நவீனமய சிந்தனையாளர்களுக்கு எட்டிக்காய் போன்று வெறுக்கத் தக்கது. அமெரிக்க மாநிலமான டெக்ஸாஸில் ஆஸ்டின் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் பேராசிரியரான பால் உட்ரப் எழுதியுள்ள “மரியாதை: ஒரு மறக்கப்பட்டுள்ள நல்ல அம்சத்தை மீண்டும் காணல்” (Reverence: Renewing a Forgotten Virtue) என்ற நூலில், தற்போது வாழ்வில் காணப்பட முடியாத ஒரு அம்சம் “மரியாதையே” என்று சொல்லி, மரியாதையற்ற ஒரு வாழ்க்கை சுயநலம் மிக்கதாயும், காட்டுமிராண்டித்தனம் ஆனதாகவும் இருக்கும் என்று முடிக்கிறார்.

மரியாதை தருவதும், பெறுவதும் உறவுகள் சம்பந்தப்பட்டவை. அதற்கு ஓர் ஒப்பந்தம் எழுதிக் கேட்டுப் பெற முடியாது. பாரம்பரிய உறவுகள் உலர்ந்து போய்விட்ட நவீனமயமான தற்காலத்திய சமூகத்தில், முன்பு உள்ளார்ந்த உணர்வுகள் இருந்த இடத்தில் அரசும், சட்ட மற்றும் நீதி மன்றங்களும் கூறுகின்றபடி வரைமுறை செய்யப்பட்ட ஒப்பந்தங்களே வாழ்வை நிறைவு செய்கின்றன. அவை பெற்றோர்களையும், அவர்களது குழந்தைகளையுமே உறவினர்களாக இருக்க விடாது, அதனால் அவர்களுக்கு இடையே நிலவ வேண்டிய கடமை உணர்வுகளை மதிக்க விடாது, தத்தம் உரிமைகளையே பெரிதாக மதிக்கும் தனி மனிதர்களாக ஆக்கி விடுகின்றன. இவ்வாறு பண்டைய வாழ்வு முறையில் இருந்த உறவுகளின் அடிப்படையில் வந்த ஒழுக்க நெறிகளை வலியுறுத்தித் தவறுகளைத் தடுக்கும் அதனுடைய வலிமையை, நவீன சமுதாயம் வெகுவாக இழக்கச் செய்துவிட்டது.

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை, கல்வி கற்றுக் கொடுப்பதிலும் கற்பதிலும் உள்ளதொரு பயபக்தி, இவை இரண்டுமே பண்டைய கல்வி முறையின் அடித்தளங்கள். ஆனால் இன்றோ அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் அனைவருமே தங்கள் ஆசிரியர்களை அவரது பெயரைச் சொல்லித்தான் கூப்பிடுகின்றனர்.

பெற்றோர்களின் சொற்களுக்கு முதன்மை அளித்து, குழந்தைகள் அவர்களுக்கு அடி பணிவதே பெரியவர்களுக்குத் தரப்படும் மரியாதையின் அடித்தளம். பள்ளிக்கூடத்து ஒழுக்க விதிகளை ஆசிரியர்கள் அமல்படுத்துவதற்காக அவர்களைத் தண்டிப்பதும், தவறான வழிகளில் செல்லும் குழந்தைகளைப் பெற்றோர்கள் தண்டிப்பதைத் தடுப்பதும் நடைமுறையானால், பள்ளிகளும், குடும்பங்களும் தங்களது அதிகாரத்தைச் செலுத்தி தவறிழைப்பவர்களைத் தடுக்கவோ, திருத்தவோ இயலாது போகிறது. இந்திய பாரம்பரியப்படி பெண் குழந்தைகள் மரியாதைக்கு உரியவர்களாகப் போற்றப்படுகின்றனர்; ஆண்கள் தவிர்க்கப்பட்டு பெண்கள் மட்டுமே அதற்கு உரியவர்கள் ஆகிறார்கள். நவராத்திரி சமயத்தில் செய்யப்படும் கன்யா பூஜை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.

1901-ல் நமது பாரம்பரியப்படி பெண்களுக்கு உரிய மரியாதை தரப்பட்டிருந்த சமயம், இந்தியாவின் மக்கட்தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் 1000-க்கு 972 என்று இருந்தது. அந்தப் பாரம்பரியம் போய் நவீனமயம் வாழ்வின் அம்சமாக வளர்ந்ததும், 2001 ஆண்டில் அது 972-ல் இருந்து 927 ஆகக் குறைந்து போயிற்று. இன்னமும் பாரம்பரியம் மங்காத கிராமப் பகுதிகளில் அது சிறிது மிகுந்தும், நவீனமயம் அதிகமாகக் காணப்படும் நகரப் பகுதிகளில் அதைவிடக் குறைந்தும் இருக்கின்றன. ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கும் உரிமை கேட்பது எந்த விதத்திலும் தவறு இல்லை என்றாலும், அதை அவரவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதைக்குப் பதிலாக எடுத்துப் போராடுவது ஒரு மன்னிக்க முடியாத விஷயம்.

வயதில் மூத்தோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தரப்படும் மரியாதையும், அதன் பயனாய் அவர்களுக்குக் கிடைக்கும் உரிமையான தவறிழைத்தோர்களைக் கண்டித்தும், தண்டித்தும் தவறான வழிகளில் இருந்து அவர்களைத் திருப்பும் வலிமை, ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவரும் இருக்கும் சமூகத்திற்கே மிக்க நன்மை விளைவித்திருக்கிறது. ஆனால் நவீனமயமான சமுதாயமோ பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவ்வாறு திருத்தும் வலிமை பெற்றவர்கள் என்பதை நம்புவதில்லை. மரியாதை தரப்படும் சமூகத்தில் தவறுகள் நடப்பதைத் தடுப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை  சட்டங்கள் மூலம் சரி செய்ய இயலாது. ஆனால் சமூகக் கோட்பாடுகள் மூலமாகவும், குடும்பப் பொறுப்புணர்வுகள் வழியாகவும் தவறுகளைத் தடுப்பதும், திருத்துவதும், நல்வழி காட்டுவதும் நிச்சயம் முடியும். அதனால் அந்த அமைப்புகள் இரண்டும் பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நவீனமய சிந்தனைகளோ அவையிரண்டையும் பலமிழக்கச் செய்கின்றன.

பின்னுரை: எல்லாம் முடிந்த நிலையில் இன்று நிற்கும் அமெரிக்கா, சமூகம் வெறுக்கும் தவறுகளைத் தண்டிப்பதற்காக தற்போது அங்கே நிலுவையில் உள்ள நவீனவயப்பட்ட சட்ட திட்டங்களுக்கு ஒரு மாற்றாக, பண்டைய வழிகளில் தவறுகளைத் தடுக்கவும், திருத்தவும் இருந்த வழிமுறைகளை ஆய்ந்து கண்டறிவதற்காகச் சட்டங்களைப் பொருத்த, சமூகவியலில் ஆராய்ச்சியை முடுக்கி விட்டிருக்கிறது.

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் 15 அக்டோபர் 2013 அன்று வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம்) தமிழாக்கம்: எஸ். ராமன்

No comments: