Blogger Widgets

Total Page visits

Thursday, October 10, 2013

மாணவர் உடல்நலம் காப்போம்

இன்றைய மாணவர்களே நாளை நாட்டை வழிநடத்தப் போகிறவர்கள். எனவே, அவர்களுடைய நலனைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பள்ளிப் பருவமானது வாழ்க்கையில் முக்கியமான பருவம். ஒருவர் தனது அடிப்படைக் கல்வியைப் பெறும் இடம் அது. பணம் உள்பட பல்வேறு செல்வங்களைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது கல்விச் செல்வம்தான். அந்தக் கல்வியை தங்களுடைய பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர் என்ன பாடுபடுகின்றனர் என்பது சொல்லி மாளாது.

சிலர் தங்களுடைய வருமானத்தைவிட அதிக அளவு பணத்தைச் செலவழித்து தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கின்றனர். அதற்காகக் கடன் வாங்குகின்றனர். எத்தனையோ பெற்றோர் தங்கள் நகை, சொத்துகளை விற்றுகூட பிள்ளைகளுக்குக் கல்வி அளிக்கின்றனர்.

அத்தகைய கல்வியைப் பயிலும் மாணவர்களின் உடல் நலத்தைப் பேணுவதில் முக்கிய கவனத்தை பெற்றோர் செலுத்த வேண்டும். வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்கின்றனர்.

ஆனால், சாதாரண, நடுத்தர, ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக்குறிதான். வீட்டுக்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளையே நாடிச் செல்கின்றனர். பலர் கிராமப்புறங்களில் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெறும் நிலைமைகூட உள்ளது. சிகிச்சை பெற பொருளாதார நிலைமை இடம் கொடுக்காத நிலையில் கை வைத்தியம், பாட்டி வைத்தியம் என வீட்டிலேயே மாணவர்களுக்கான சிகிச்சைகளை அவர்களது பெற்றோர் அளிக்கின்றனர். அதனால், அவர்களுடைய உடல் உபாதைகள், கோளாறுகள் குணமடையாததோடு மேலும் அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு விலையில்லாத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி செயல்படுத்தி வருகிறது. இது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அவர்களுடைய உடல் நலத்தைக் காப்பதற்கான திட்டம் இதுவரை ஏதுமில்லை.

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பொது மருத்துவப் பரிசோதனை என்ற திட்டம் இருந்தாலும், அது ஏதோ கடமைக்கு பெயரளவில் மட்டுமே இருப்பதாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்தோர் கூறுகின்றனர். மாணவர்களுக்கு தற்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மருத்துவப் பரிசோதனையைக் காட்டிலும், சற்று விரிவான பரிசோதனையை மாணவர்களுக்குச் செய்ய வேண்டியது தற்போது மிகவும் அவசியமாகிறது.

அனைத்து மாணவர்களும் தங்கள் சொந்த செலவில் பரிசோதனையைச் செய்து கொள்ள முடியாது. எனவே, கல்வித் துறை இதில் கவனம் செலுத்த வேண்டும்.

கண் மருத்துவச் சிகிச்சை நிபுணர் ஒருவர், அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, "மாணவர்கள் 100 பேரில் 6 பேருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது' எனத் தெரிவித்திருந்தார். கண் பார்வை குறைபாடு இருந்தால் மாணவர்களால் கல்வியில் கவனத்தைச் செலுத்த முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோளாறுகளுக்காக மாணவர்கள் தனித்தனியாகச் சிகிச்சை பெற மருத்துவமனைகளை நாடமுடியாது. அதற்கு அவர்களுடைய குடும்ப நிதிநிலைமையும் இடம்தராது.

பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு இலவசங்களை வழங்கி வரும் அரசு அவர்களுடைய உடல்நலத்தைக் காப்பதற்கும் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதற்கென தனிச் சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனையை நடத்த வேண்டும்.

சிலருக்கு ஏதேனும் கோளாறு இருந்தால் அரசு மருத்துவமனைகளில் இலவசச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற இலவசத் திட்டங்களைக் காட்டிலும் மாணவர்களின் உடல் நலத்தைக் காப்பதற்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையே முக்கியமானது.

மாணவர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பது என்பது நாட்டின் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு வழியென்றே கூறலாம். மாணவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் அவர்களால் எந்தப் பிரச்னையும் இன்றி கல்வி கற்கலாம். அவர்களது பெற்றோரும் நிம்மதியாக இருப்பர்.

No comments: