Blogger Widgets

Total Page visits

Monday, October 28, 2013

கணினியின் வேலைநிறுத்தம்

அண்மையில் பத்திரிகைகளில் அடிபட்ட வணிகச் செய்தி பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஐ.ஓ.பி. வங்கியில் தொடர்ந்து ஐந்து நாள் முடங்கி பிறகு சீரான கணினிச் சேவையைத்தான் குறிப்பிடுகிறேன்.

வங்கியில் செர்வர் செயல்பாட்டில் பழுது ஏற்பட்டு அவ்வப்போது சில மணி நேரம், எந்தவிதப் பரிவர்த்தனையும் செய்ய இயலாமல் போன அனுபவம் உண்டு. அப்போது கூட, ஏதாவது ஒரு முக்கிய கணினி மூலம் எவ்வளவு இருப்புத் தொகை, கிளியரிங்கில் போடப்பட்ட காசோலை "பாஸ்' ஆகி விட்டதா போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இது போல் ஆதார வங்கி செயல்பாட்டில் (Core Banking Services) பழுது நேருவது அதிசயமாகத்தான் உள்ளது.

எனக்கு ஏற்பட்ட சிக்கல் மிகச் சிறியது, சினேகிதர் கொடுத்த ஐ.ஓ.பி. காசோலையை எங்கள் வங்கியில் போட்டு எடுக்கத் தாமதாயிற்று. புரசைவாக்கத்தில் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள் என்றும், சனிக்கிழமை இருப்பைக் கவனித்து ஒரு சில வாடிக்கையாளர்கள் தொகை எடுக்க ""அனுமதி''க்கப்பட்டார்களென்றும் ஏடுகள் தெரிவித்தன. இதுபோன்ற "கணினி வேலைநிறுத்தம்' பல ஐயங்களை எழுப்பியுள்ளது.

ஒரு முக்கிய மங்களகரமான நிகழ்ச்சிக்கு முன் பணம் கொடுக்க இயலாத நிலைமை; குறிப்பிட்ட தேதி முன்னால் பெருந்தொகை தந்தால்தான், குறிப்பிட்ட பொருளை டிஸ்கவுண்டில் கொடுக்க இயலும் என்கிற நிலை; ஏற்றுமதி இறக்குமதி பரிமாற்றம் இயக்க முடியாத தன்மை - போன்ற பல விதங்களில் வாடிக்கையாளர்கள் தவித்திருப்பார்கள். ஐ.ஓ.பி. மட்டுமன்றி பிற வங்கி வாடிக்கையாளர்களும் அல்லலுக்கு ஆளாகியிருப்பார்கள். இதற்கான பண நஷ்டம்; மன உளைச்சல் இவற்றுக்கு வங்கி ஈடு செய்யுமா - ஓரளவாவது - என்பது ஒரு கேள்விக்குறி.

கணினி வரவால், வாடிக்கையாளருக்கு பல வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஏடிஎம் வசதி, ஒரே வங்கியின் பிற கிளைகளின் இருப்பை ஒரு கிளையில் எடுக்கும் செளகரியம், இல்லத்திலிருந்தே கணினி மூலம் பரிமாற்றம் - போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். அதேசமயம், எல்லாவற்றுக்கும் கட்டணம் உண்டு என்பதையும் ஞாபகமூட்ட வேண்டும். இருப்புத் தொகை குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் போனால் கட்டணம்; பணமிருந்தும் வேறு காரணிகளால் காசோலை திரும்பினால் கட்டணம்; நடப்புக் கணக்கில் ஆறு மாசத்துக்கொரு முறை கட்டணம்; காசோலையைத் தபாலில் அனுப்ப "சார்ஜ்' - என்று பட்டியில் நீளுகிறது.

நியாயமாக எழுகிற கேள்வி இதுதான்:- கணினி சேவைகளுக்குக் கட்டணம் வசூல் செய்யும்போது, கணினி தொடர்ந்து சில நாட்கள் பழுதுபட்டு சேவை தர இயலாவிட்டால், அதற்கு வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு தர வேண்டியதுதானே?

மற்றொரு சந்தேகம்: இன்று ஐ.ஓ.பி.யில் நடந்த கோளாறு நாளையே ஏன் பிற வங்கிகளிலும் ஏற்படக் கூடாது? பொதுவாகவே, சில வங்கிகளில் கணினி பற்றிய விஷய ஞானம் அறிந்தவர்கள் மிகக் குறைவு. மேலும், வங்கிகளில் பிற நிறுவனங்கள் போல், கணினி சேவையை இயக்குவது கடினம், டெபாஸிட் வாடிக்கையாளர்; கடன் பெறுகிற வாடிக்கையாளர் - இவர்களிடையே பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வட்டி விகிதம் தனி. ஏதாவது கணினி பதிவில் தவறு ஏற்பட்டால் அனுபவமிக்க ஊழியர்கள் ஏதோ விருப்ப வகைகளை (Options) மாற்றி மாற்றிப் போட்டுச் சரி செய்கிறார்கள். ஏன்- பாஸ் புத்தகம் பதிவு செய்கிற கருவியில் கோளாறு நேர்ந்தால் சரி செய்ய ஆட்கள் இல்லை!

தற்சமயம், காப்பீட்டில் "நிகழ்ச்சி காப்பீடு' (Event Insurance) என்ற ஒரு புதிய பிரிவு நுழைந்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் உறுதியானவுடன், இடைப்பட்ட காலத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதை ஈடு கட்டுவது போல, (மரணம்; விபத்து; எதிர்பாரா நிகழ்வுகள்) இதுபோல, ஐ.ஓ.பி.யில் நிகழ்ந்தது போல், எதிர்காலத்தில் நேர்ந்தால் அத்தகைய நஷ்டத்துக்கு ஈடு செய்யும் வகையில் ஏதாவது நிதி ஒதுக்கலாம்.

வருங்காலத்தில் வங்கியில் கணினி சேவை பல்கிப் பெருகி, விரிந்து கொண்டே போவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது. அந்தச் சேவை சிக்கல் ஆகாமலிருக்க, வங்கித் தலைவர்கள் சேர்ந்து ஒரு தீர்வு காண வேண்டும்.

No comments: