பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும்,
வேலைக்குப் போகும் இளைஞர்களாக இருந்தாலும் சோம்பல், நேர மேலாண்மை,
கட்டுப்பாடு போன்றவற்றில் தளர்ச்சி அதிகமாகவே காணப்படுகிறது. இந்த மூன்றும்
சேர்ந்து இறுதியில் ஒழுக்கச் சீர்கேடுக்கும் அழைத்துச் செல்கிறது.
தனி மனித ஒழுக்கம்
சார்ந்த விஷயமாக இது பார்க்கப்பட்டாலும் இதனால் சமூகத்திற்கும் பாதிப்பு
ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. எனவே தனிமனித நடவடிக்கைகளை
சுறுசுறுப்புள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகும் மாற்ற வேண்டிய பொறுப்பு
அனைவருக்கும் உள்ளது.
மேலும் இளைஞர்கள் சோம்பலினாலும், கட்டுப்பாடின்மையாலும்
தாங்கள் இழந்தவற்றை அறியாதவர்களாக, எதையுமே சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்
நிலையில் இருக்கிறார்கள். இது போன்ற நிலையை மாற்ற வேண்டும்.
நேர மேலாண்மை
பள்ளிக்கூடமும், கல்லூரியும், அலுவலகங்களும் செயல்படுவதற்கு
ஒரு குறிப்பிட்ட கால அளவானது கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த
நேரத்திற்குள்ளாக செல்லவில்லையென்றால் தண்டனைகளும், அபராதங்களும்
விதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்பினை கருதியே சரியான நேரத்திற்கு சென்று
விடுகிறோம்.
அதே போன்று தினமும் தூங்கும் நேரத்தையும், காலையில் எழும்
நேரத்தையும் திட்டமிட்டு அதன்படியே உறங்கி எழுந்தால் அதுதான் வெற்றிக்கான
ஆரம்பம்.
உணவு
சத்தான உணவை தேடித்தேடி உண்ண வேண்டும். ருசியான உணவிற்கு
நாவினை அடிமையாக்காமல் சத்தான உணவிற்கு நாவையும், மனதையும் பழக்கப்படுத்த
வேண்டும்.
திண்பண்டங்கள்
மைதா மாவு கலந்த பப்ஸ், சமோசா, பிஸ்கட், பீசா போன்றவற்றோடு
சிப்சையும் தவிர்க்க ஆரம்பியுங்கள். அதற்கு பதில் அந்த நேரத்தில் பட்டாணி,
கடலை போன்ற உணவுகளை மாற்று உணவாக உண்ண ஆரம்பியுங்கள்.
தீய பழக்கங்கள்
புகைப் பிடித்தல்
கல்லூரி மாணவரிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிக அளவில்
உள்ளது. புகைப் பிடிக்க வேண்டும் என எண்ணும் நேரங்களில் எல்லாம் அதனால்
விளையும் தீமைகளையும், செலவையும் நினைவில் கொண்டு வருவதற்கு முயற்சி
செய்யுங்கள். அந்த நேரத்தில் பபிள்கம் அல்லது இனிப்பு மிட்டாய்களை
சாப்பிடுங்கள். உங்கள் மனநிலை புகையை மறக்க ஆரம்பிக்கும்.
குடிப்பழக்கம்
இளம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் மற்றொரு மோசமான
பழக்கம் மது அருந்தும் பழக்கம். மிகவும் மோசமான, ஒரு கொடிய பழக்கமான இதனை
விளையாட்டாக ஆரம்பித்து பிறகு விட முடியாமல் தவிக்கின்றனர்.
தவிப்பை நீக்கி மகிழ்ச்சி கொள்வதற்கு மது அருந்தும் சூழல்
வரும் போதெல்லாம் இருக்கும் பணத்தைக் கொண்டு நன்றாக சாப்பிடலாம் என மனதை
திசை திருப்புங்கள். தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுங்கள். பொருளாதார
இழப்பையும், உடல் நல பாதிப்பையும் நினைத்துப் பாருங்கள். குடிப்பழக்கம்
உள்ளவர்களைப் பார்த்து "எதிர்காலத்தில் அவர்களை விட நான் நல்ல
உடல்நலத்துடன் வாழ்வேன்" என உங்களுக்குள்ளே தினமும் சொல்லிக் கொள்ளுங்கள்.
சேமியுங்கள்
பணம் எப்பொழுதும் கையிலிருந்தால் அது தன்னை செலவழிக்க
உங்களை தூண்டிக் கொண்டே இருக்கும். அதனால் பணத்தை உங்களுக்கென வங்கிக்
கணக்கை ஆரம்பித்து சேமிப்பு கணக்கில் செலுத்துங்கள். அதே போன்று ஏ.டி.எம்.
அட்டையை எப்பொழுதும் சட்டைப் பையிலேயே வைத்திருக்காதீர்கள்.
ஒரு நாளைக்குத் தேவையான பணத்தை மட்டும் வைத்திருங்கள்.
அப்பொழுதுதான் ஏதாவது செலவு செய்ய வேண்டும் என்றாலும், பணம் இல்லையே என்று
அந்த செலவை தவிர்த்து விடுவீர்கள்.
நல்லதையே நினையுங்கள்
நல்ல நினைவுகளே உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உற்சாகம்
இல்லாத மனதுதான் கவலை கொள்ளும். எதையும் பதட்டத்தோடு அணுகாதீர்கள்.
"நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது, அது நம்மை விட்டு எங்கும் போகாது" என்று
சோர்ந்து போகும் நேரமெல்லாம் நினையுங்கள்.
வெற்றிகரமான நேரங்களில் எல்லாம் "இதை விட மேலான வெற்றிகளை
சந்திக்க வேண்டியிருக்கிறது, இது சாதாரணமானது தான்" என மனதை நிலையாக
வைத்திருங்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் காட்டும் அக்கறையும், ஆர்வத்தோடு
செயல்படுவதும் பெரிய செயல்பாடுகளில் வெற்றிகரமாக நம்மை இயங்க வைக்கும்.
வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும், வெற்றியும் கலந்த ஒன்றாக மாறும்.
No comments:
Post a Comment