Blogger Widgets

Total Page visits

Monday, October 28, 2013

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

சமச்சீர் கல்விப் பாடத்திட்டம்,முப்பருவக் கல்வி முறை,தொடர் மற்றும் ஒருங்கிணைந்த முறையிலமைந்திட்ட தரப்புள்ளிகள் அடிப்படையிலான எளிய மதிப்பீடு என மாணவர் மைய கல்விக்கு அரசு வித்திட்டு நடைமுறைப்படுத்தியுள்ளபோதும்கூட மாணவ மனநிலையானது மாற்றம் பெறாதது பெருங்கேள்விக்குறியாகும். உண்மையில் ஒன்பதாம் வகுப்பு முடிய புதிய மதிப்பீட்டு முறையில் எழுத்துத் தேர்வென்பது அறுபது விழுக்காட்டிற்கே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.

மீதமுள்ள நாற்பது விழுக்காட்டு மதிப்பெண்ணானது மாணவர்களது ஆர்வம்,ஈடுபாடு,கற்றல் சார்ந்த செயல்திறன்கள்,செயல்திட்டங்கள்,எளிய சிறுதேர்வுகள் போன்றவற்றிற்கு வழங்கப்படுவதும் அதில் தொண்ணூறு விழுக்காட்டு அடைவைக் கற்றலில் பின்தங்கியோரும் அடையத்தக்க வகையில் பாடநூல் வல்லுநர்களால் எளிமையாக உருவாக்கப்பட்டு உறுதிசெய்துள்ளதும் நடைமுறைகளாக உள்ளன.

இருவகையிலான மதிப்பீட்டு முறைகளிலும் பெறப்படும் மதிப்பெண்கள் தரப்புள்ளிகளாகக் கணக்கிடப்பட்டுப் பல்வேறு தர நிலைகளாகக் கொள்ளப்படுவதன் வாயிலாக,மாணவரிடையே நிலவும் மதிப்பெண் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் போட்டி,பொறாமை நிலைகளிலிருந்து ஓரளவிற்கு விடுபட்டுச் சுமுகச் சூழல் உருவாவதற்கு வழிகோலும் வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் கல்வி என்கிற சிக்கலான,தொலைநோக்கு நிலையை நாட்டிலுள்ளோர் எய்திட கல்வியின் அனைத்துப் படிநிலைகளிலும் காணப்பட்ட இறுக்கம்,செறிவுத்தன்மை,விடாப்பிடியான போக்குகள்,ஆசிரியர் மைய நோக்குகள் போன்றவை பல்வேறு முயற்சிகளுக்குப்பின் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

எந்த வகையான தேர்வாக இருப்பினும் கேள்விக்கான விடைகளை மறைவாகப் பார்த்து எழுதுதல் என்பது தீயொழுக்கமாகக் கருதப்படுகிறது.இத்தகு குற்ற நடவடிக்கைக்குப் பொதுவாக எல்லா காலங்களிலும் கடுந்தண்டனைகள் அளிப்பதென்பது பள்ளிகளில் நடைமுறையில் இல்லை.பெருந்தன்மையுடன் எச்சரிக்கப்பட்டும் மன்னிக்கப்பட்டும் விடுவதாகவே இருக்கின்றது.

  மேலும்,அரசுப் பொதுத்தேர்வுகள் நீங்கலாக ஏனைய தேர்வுகள் அனைத்தும் பள்ளிச் செல்லும் அனைவரும் தேர்ச்சி என்கிற உயரிய இலக்குடன் இலகுவாக மதிப்பிடப்பட்டு வரும் சூழலில் இவ்வித நடவடிக்கையென்பது தேவையற்ற ஒன்று.நியாயமற்ற,சட்டத்திற்கு புறம்பான,எல்லா வகையான தேர்வுகளிலும் மலிந்து காணப்படும் பிட் கலாச்சாரமானது இனியாவது மாணவச் சமுதாயத்தினரிடமிருந்து விலகி ஒழிதல் நல்லது.

தவிர,பதின்பருவ வயது என்பது உடலியல்,உளவியல் ரீதியாகப் பல்வேறு வளர்சிதை மாற்றங்கள்,மனக்குழப்பங்கள்,உளச்சிக்கல்கள்,ஆளுமைப்பண்பு மற்றும் வளர்ச்சி நிலைகள் போன்றவற்றிற்கு அடிப்படையாக அமைவதாகும்.இது இருபாலருக்கும் பொது.அதுமட்டுமின்றி,கூர்மையான கத்தி போன்றது இப்பருவம்.

ஆண்,பெண் இருபாலருக்குமே இப்பருவத்தின்போது தக்க நெறிப்படுத்துதல், வழிக்காட்டுதல், ஆற்றுப்படுத்துதல், அறிவுறுத்துதல் ஆகியன இன்றியமையாதத் தேவைகளாக உள்ளன. அறிவியல் பூர்வமான ஆலோசனைகளுக்கும் தீர்வுகளுக்கும் வீடு, பள்ளி, சமுதாயம் ஆகியவை வடிகால்களாகத் திகழுதல் என்பது தலையாயது.

எந்தவொரு நிலையிலும் இத்தகையோரிடமிருந்து தேவையற்ற அச்சுறுத்தல்,அருவருக்க வைத்தல்,தாழ்வு மனப்பான்மைக்கான உரமிடுதல் போன்றவை கூடாது. மேலும், இத்தகைய இளந்தலைமுறையினரின் உடல் ,உள்ளம், சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அரும்பணிகளுக்கு மக்கள் ஊடகங்களாக விளங்கும் அச்சு இதழ்கள், தொலைக்காட்சிகள்,திரைப்படங்கள், இணைய தளங்கள் முதலிவை ஆக்கமும் ஊக்கமும் வழங்குதல் நன்மைப் பயக்கும்.அவற்றின் சமூகக் கடனும்கூட.இவற்றால் முறையான தணிக்கையின்றிப் பரப்பப்படும் பலவித விரும்பத்தகாத செய்திகள் மற்றும் காட்சிகள்,கூடா ஒழுக்கங்கள்,பண்பாட்டுச் சீரழிப்பு மற்றும் பேரழிப்பிற்கான வழிமுறைகள்,நுகர்வுக் கலாச்சாரப் போக்குகள்,நஞ்சாய்ப் பரவிவரும் உலகமய கருத்துகள் போன்றவை இத்தகையோரின் தனிநபர் மற்றும் சமூக நெறிபிறழ் நடத்தைகளுக்கு இவையே முக்கியக் காரணிகளாகச் சுட்டப்படுகின்றன.செவ்வியல்,வாழ்வியல் விழுமியங்களுக்கு இவை அடிகோலுதல் அவசர,அவசியமாகும்.ஏனெனில்,இம்மக்கள் ஊடகங்கள்தாம் பதின்பருவ வயதினரின் நெஞ்சங்களில் ஏனையோரைவிடவும் நீங்கா இடம்பெற்று ஆட்சி புரிகின்றன.

அதுபோல,எளிதில் கிடைக்கத்தக்க,நுகரத்தக்க வழியில் மலிந்து காணப்படும் புகையிலை, மதுபானப் பொருட்கள்,ஆபாச வீடியோ காட்சிகள்,பள்ளிச் சீருடையில் திரையரங்கிற்கு வரும் நிகழ்வுகள், செல்பேசி மற்றும் இணைய தளங்கள் மூலமாக நடைபெறும் தேவையற்ற, தீங்கு தரத்தக்க வீண் அரட்டைகள் மற்றும் பகிர்வுகள் முதலானவற்றிற்கு பெயரளவில் இல்லாமல் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதென்பது சாலச்சிறந்தது. இதற்கு கடை நிர்வாகிகளும் பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு நல்குதல் அவசியம். இவர்களுடைய கண்மூடித்தனமான பணத்தாசையும் பிள்ளைப்பாசமும் அக்கறையின்மையும் காரணமாக வளரிளம் குடிமக்களின் ஒழுக்கம்,நம்பிக்கை, வாழ்வாதாரங்கள் சிதைவுக்கு உள்ளாகின்றன.

குடும்பத்திலும் சமுதாயத்திலும் இவ்வயதினருக்குத் தேவைப்படுவது நிரந்தர தனிமையோ, தனிமைப்படுத்துதலோ அல்ல. பாதுகாப்பான நல்ல அரவணைப்பு. அதுமட்டுமின்றிப் போதிய அக்கறையுடனான கண்காணிப்பு. இவற்றை உறுதி செய்வதும் தக்க ஆவனச் செய்வதும் இன்றியமையாதக் கடமைகள் எனலாம்.

இதுதவிர, குடும்பமானது தனி மனித நல்லொழுக்கப் பண்புகள், நீதிநெறிகள், தலைசிறந்த பண்பாட்டுச் செய்திகள் ஆகியவற்றைத் தொடக்கக்காலம் முதல் புகட்டிடும் முதல் பள்ளிக்கூடமாக இருத்தல் வேண்டும்.அங்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடிக்கட்டிப் பறந்திடுதல் நல்லது.அன்பும் பாசமும் எப்போதும் இயல்பாகத் தவழ்ந்திடுதல் என்பது இயற்கை.எனினும்,குடும்பப் பின்னணி,பொருளாதார நிலை,சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டியதன் தேவை ஆகியவற்றைக் கலந்துரையாடி நம்பிக்கை விதைத்து நல்லதொரு குடிமைப்பண்பை வளர்க்கும் களஞ்சியமாகவும் விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்ப்பதன் வாயிலாக வீட்டையும் நாட்டையும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.இதற்கு அரணாகப் பள்ளியும் சமூகமும் விளங்கிடுதல் நலம்.


No comments: