Blogger Widgets

Total Page visits

Thursday, October 24, 2013

பாதை மாறிய பயணம்

நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்' என்றார் வீரத்துறவி விவேகானந்தர்; "ஒளி படைத்த கண்ணினாய் வா வா' என்றழைத்தார் தேசியக்கவி பாரதியார்; "வருங்காலத்தில் அதிக இளைஞர்களைக் கொண்ட தேசமாக இந்தியா இருக்கப் போகிறது, அதனால் உலக அரங்கில் ஆற்றல், அறிவுத்திறன், உழைப்பு என எல்லா வகையிலும் வலிமையுடையதாக இந்தியா திகழப் போகிறது' என்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

ஆனால், தற்போதைய நாட்டு நடப்பைப் பார்த்தால் இவை எல்லாம் உண்மையாகுமா அல்லது கனவு மேகமாய் கலைந்துபோகுமா என்ற கேள்வியும் ஏக்கமும் அச்சமும் ஆதங்கமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!

நாட்டில் நடைபெறும் ஊழல்கள், குற்றங்கள், போராட்டங்கள், அப்பாவிகளைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் என எதையெடுத்தாலும், அதில் இளைஞர்களது பங்களிப்பு கணிசமாகவே காணப்படுகின்றது.

சட்டம் படித்து, சம்பாதித்து, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வாய்ப்பிருந்தும் அதனைப் புறக்கணித்து விட்டு, நாட்டு விடுதலைக்காக தனது இளமைக் காலத்தைஅர்ப்பணித்ததாலேயே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தியானார்.

நேதாஜி, ஜவாஹர்லால் நேரு, வீரசாவர்க்கர், பகத்சிங் போன்ற பலரும் இளûமைப் பருவத்தில் வசதியாக வாழ வழியிருந்தும் தேச விடுதலை வேள்வியில் தமது தேகத்தை வருத்திக் கொண்டதாலேயே சரித்திரத்தில் இடம் பிடித்தனர்.

அன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் தியாக சிந்தனை தோன்ற முக்கிய காரணங்களாக இருந்தவை நமது கலை, பண்பாட்டு இலக்கியங்களே. "ஹரிச்சந்திரா' நாடகம்தானே காந்தியின் உள்ளத்தில் வாய்மையின் வலிமையைப் பதியவைத்தது.

ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பிறகு நமது அடிப்படை மாண்புகளை நாம் இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லத் தவறி விட்டோம். பொருள் தேடுதலை முக்கியப்படுத்தி விட்டது மூத்த தலைமுறை.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதை முன்னிலைப்படுத்தியவர்கள், "ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு' என்பதை நினைவூட்ட ஏனோ மறந்துவிட்டனர்.

பொருள் தேடலில் புதிய சுகத்தைக் கண்ட நமது இளந்தலைமுறையினர், வாழ்க்கைக்கான அறத்தேடலை அறியவில்லை. பொருள் வந்த நேரத்தில் போக வாழ்க்கைக்கான நவீன பொருளை வாங்கிக் குவித்தனர். அதனால் திசைமாறி பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.

நவீனம், முற்போக்கு எனும் பெயரில் நமது பண்பாடு, கலாசாரங்கள் பரிகசிக்கப்படுகின்றன. விளைவு? அடிமண்ணில் பிடிவேர் இல்லாத மரம்போல நமது பிள்ளைகள் வளரும் துரதிருஷ்ட நிலை!

புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையைப் போல நாம் நமது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறோம். ஆனால், ஆங்கில மொழியோ அவர்களை அன்னிய மனிதர்களாக்கிவிட்டது.

குடும்ப உறவுகளற்ற அந்த கலாசாரத்தில் மூழ்கும் நமது இளந்தலைமுறையோ, முதியோராகும் தமது பெற்றோரை அநாதைகளாக்கி விடுகிறார்கள், எதிர்காலம் தங்களை அநாதையாக்கப்போவதை அறியாமல்!

அடுத்தவரிடம் அவசியமான சிறு உதவி கேட்பதைக் கூட கேவலமாகக் கருதினர் நம் முன்னோர். ஆனால், இன்று அரசு தரும் இலவசப் பொருள்களுக்காக அடிக்கடி இளைஞர்களது போராட்டம்! சமூக நலனுக்காக தன்னையே பலிகடாவாக்கியது அன்றைய சுதந்திரப் போராட்ட இளந்தலைமுறை.

ஆனால், இப்போதோ, தனது சுயநலத்துக்காக சமூகத்தையே பாடாய்ப்படுத்தி, பலி கொடுக்கத் துணிந்தவர்களாகி விட்டனரே இளம் தலைமுறையினர்.
சுயமரியாதை பேசியவர்கள் கூட பணம், பதவிக்காக சுயநல மரியாதையாளராக மாறிவிட்டனர். "தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு' எனப் பாடிய கவிஞர் இன்றிருந்தால், தமிழ் இளைஞர் தனித்துவத்தை இழந்தது கண்டு வருந்தி கண்ணீர் வடித்திருப்பாரல்லவா?

வேகக் கட்டுப்பாடற்ற வாகனம் போலவே மனக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை! புல்லுக்குள் புதைந்து போகும் நெல்மணி போல ஆடம்பரத்தில் மறைந்த அறவழி! பாதை மாறிய கால்கள் ஊர்போய் சேராது என்பதை நினைவுட்டும் இன்றைய இளைஞர்களின் பயணம்! ஊதாரிப் பிள்ளைகளால் உறுபசியும் ஓவாப் பிணியும் சேர்ந்த தாய் துன்புறுவது போன்ற நிலையில் நம் பாரத நாடு!
முப்பது கோடி முகமிருந்த தேசத்தில் நூறே நூறு இளைஞர்களை வைத்து தேசத்தின் போக்கையே மாற்ற அன்று உறுதி பூண்டார் சுவாமி விவேகானந்தர். ஆனால், இன்று நூற்றியிருபது கோடிக்கும் மேலான முகமுள்ளன நம் தேசத்தில். ஆனால், இன்று பல துறைகளில் தேசம் பள்ளமான பாதையை நோக்கியல்லவா பயணித்துக் கொண்டிருக்கிறது!


இளம் தலைமுறையினர் தர்மத்தை மறந்தவர்களாக இருக்கலாமா? கடமை மறந்தவர்களை காலம் நிந்திக்கும். "பாரத நாடு பழம்பெரும் நாடு, நாமதன் புதல்வர்' என்ற நினைவுடன் அறவழியில் நடந்து நாட்டையும் அறப்பாதையில் அழைத்துச் செல்ல வேண்டாமா?

இதுவரை நடந்தது போகட்டும். "இனியொரு விதி செய்வோம்', சுயநலத்தை சுட்டெரிப்போம், பொதுநலம் பேணுவோம். ஆப்ப்பாட்டம் விட்டொழித்து அமைதி வழி நின்று தாய் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்!

No comments: