Blogger Widgets

Total Page visits

Friday, October 31, 2014

முதியோர் போற்றுதும்!

இந்தியாவில் அதிகம் பேசப்படாமல் ஒரு மிகப் பெரிய சமூக அவலம் அரங்கேறி வருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முப்பது வயதுக்கும் குறைவான இளைய தலைமுறையினர் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதேநேரத்தில், ஏறத்தாழ 81 லட்சத்திற்கும் அதிகமான முதியோர்கள் பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் கவலைப்பட்டாக வேண்டும்.
சமீபத்தில் வெளியான முதியோர்கள் பற்றிய அறிக்கை ஒன்றின்படி, குடும்பத்துடன் வாழும் முதியோர்களில் 40 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு விதத்தில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுவதாகவும், அவமானப்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. இவற்றில் ஆறில் ஒரு சம்பவம்தான் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கே தெரிகிறது.
அதேபோல, நகர்ப்புறத்தில் வாழும் முதியோர்களில் ஆறு பேரில் ஒருவர் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்கப் பெறாதவர். மூன்றில் ஒருவர், முறையான மருத்துவ வசதியோ, தேவையான மருந்துகளோ பெற வழியில்லாதவர். இரண்டு பேரில் ஒருவர் குடும்பத்தினராலும், சமுதாயத்தாலும் கெளரவமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படாதவர்.
கூட்டுக் குடும்ப முறை சிதைந்துவிட்டிருப்பதும், நகர்ப்புற வாழ்க்கை முறை அதிகரித்திருப்பதும், இளைய சமுதாயத்தை பந்த பாசங்கள், உறவு முறை போன்றவற்றிலிருந்து அகற்றி விட்டிருக்கிறது என்றால், முதியோர்களை அன்பு, ஆதரவு, மரியாதை போன்றவற்றைப் பெறுவதிலிருந்து அகற்றி நிறுத்தி விட்டிருக்கிறது.
சிறு குடும்ப முறையும், கணவன் - மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலைமையும், முதியோரை வேண்டத்தகாத உறவாக மாற்றி விட்டிருக்கிறது.
கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு மட்டுமல்லாமல், வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடியேறும் போக்கு அதிகரித்து விட்டிருப்பது, கிராமப்புற முதியோர்களையும் பரவலாகப் பாதித்திருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்கள் என்பதும், அதிலும் கணவனை இழந்து தனியாக வாழ்பவர்கள் என்பதும் முதுமையின் அவலத்தை மேலும் கடுமையாக்குகிறது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்கிற வேறுபாடு இல்லாமல், எழுபதைக் கடந்த முதியோர்கள் பலருக்கும் நேரிடும் சோதனை, அரசின் உதவிகளைப் பெற முடியாமல் இருப்பதுதான். உதவி இல்லாமல் நடமாடவோ செயல்படவோ முடியாத நிலையில், அரசு அவர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத் தொகையைப் பெறக்கூட முடியாமல் தவிக்கும் முதியோர் ஏராளம். அப்படியே கிடைத்தாலும், அவர்களுக்கு மத்திய - மாநில அரசுகளால் அளிக்கப்படும் ஓய்வூதியத் தொகை மிகவும் சொற்பம். மருத்துவச் செலவும், மருந்து விலையும் அதிகரித்துவிட்ட நிலையில், தரப்படும் ஓய்வூதியம் அவர்களுக்குப் பெரிய அளவில் பயனளிப்பதாக இல்லை.
பத்தில் ஆறு முதியோர்கள் பிள்ளைகளால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலைமை இந்தியாவில் காணப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தங்குவதற்கு வேறு புகலிடம் இல்லாத முதியவர்களைப் பராமரிக்க நிறுவப்பட்டிருக்கும் முதியோர் இல்லங்களாகட்டும், சிறப்பாகச் செயல்படுபவையாக இருக்கின்றனவா என்றால் இல்லை. தனியார் முதியோர் இல்லங்களின் தரம் சிறப்பாக இருந்தாலும், அதில் புகலிடம் பெறும் வசதி படைத்தவர்களின் எண்ணிக்கை குறைவு.
மேலைநாடுகளைப் போல, இந்தியாவில் 18 வயதானால் குழந்தைகளை அவர்களது சொந்தக்காலில் நின்று கொள்ளும்படி இந்தியப் பெற்றோர் புறக்கணிப்பதில்லை. அதற்குப் பரிசாக முதுமையில் அவர்கள் எதிர்கொள்ளும் வேதனைகள் அளப்பரியவை.
பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நன்னடத்தைச் சட்டம் 2007, முதியவர்களின் தன்மானத்திற்கும், சமாதானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன்தான் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகளும், உறவினர்களும் மூத்த குடிமக்களைப் பேணுவதும், பராமரிப்பதும் சட்டப்படியான கடமையாக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தால் மட்டுமே முதியோரின் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது.
மாறி வரும் சமூகச் சூழலில், போதிய மருத்துவ வசதியும், தரமான தங்கும் வசதியும் கொண்ட முதியோர் இல்லம் ஒவ்வொரு பேரூராட்சியிலும் அமைக்கப்பட வேண்டும். அரசு உதவியுடன் நடத்தப்படும் இந்த முதியோர் இல்லங்களை, அந்தப் பேரூராட்சியில் இயங்கும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றவை தத்தெடுத்து ஆதரிப்பதுதான் பெருகி வரும் முதியோர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும். தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டிய பிரச்னை, முதியோர் நல்வாழ்வு!

No comments: