இன்று உலகம் சுருங்கி விட்டது. பரந்து விரிந்த உலகம் கையடக்க பேசிக்குள் அடங்கி விடுகிறது. உறவுகளுக்கும் அதே நிலைதான். அம்மா, அப்பாவோடு உறவுகள் நிறைவு பெற்று விடுகின்றன. சித்தப்பா, மாமா ஆகிய உறவுகள் மறைந்து வருகின்றன. தாத்தா பாட்டி கூட முதியோர் இல்லத்தில் தஞ்சமடையும் நிலைமை.
நாம் கீழே விழும்போது நம்மைத் தாங்கிப் பிடித்த உறவுகளின் கரங்கள் இன்று இல்லாததால் நாம் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
முன்பெல்லாம் சொந்த கிராமத்தில் வயதான பெற்றோர் இருக்க, விசேஷங்களுக்கு வெளியூரில் வசிக்கும் மகனோ, மகளோ வந்து பார்த்துச் செல்வர். பெரியவர்களுக்கும் அதில் ஒரு திருப்தி இருக்கும். மகன், பேரன்களுக்கும் சந்தோஷம் காணப்படும்.
சொந்த வீட்டை விட்டு வர பெரியவர்களுக்கு வர மனதிருக்காது. காரணம் பல ஆண்டுகள் சொந்த கிராமத்தில் பழகிய மக்களோடு வசிக்கும் சுகமே தனி என்பது அவர்கள் எண்ணம்.
விடுமுறை காலங்களில் பேரன், பேத்திகளால் வீடு களை கட்டும். சிறுவர்களுக்கென தனி பலகாரங்கள் தினசரி செய்யப்படும். ஆனால் இன்று விடுமுறை என்றால் குழந்தைகளை ஏதாவது ஒரு சிறப்பு வகுப்பில் சேர்த்து விட்டு, விடுமுறை கொண்டாட்டத்துக்குத் தடை போட்டு விடுகிறோம்.
இப்போதும் முதியோர் இல்லங்களில் பூர்வீக வீடு, பழகிய மக்களை மறந்து மனதில் வலிகளோடு பல முதியவர்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.
ஆனால் அவர்களை பிரிந்ததால் பாதிப்பு நமக்குத்தான். அன்று அவர்களின் அனுபவங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்த உதவின. விவசாயம், வணிகம், விளையாட்டு என அனைத்திலும் அவர்களின் அறிவுரைகள் தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்க நமக்குப் பேருதவியாக இருந்தன.
இன்று கூட்டுக் குடித்தன முறை உடைந்து விட்டது. பொருளாதாரப் பிரச்னையை காரணம் காட்டி தனிக்குடித்தனங்களில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். இதனால் தாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர வேண்டிய, குழந்தைகள் காப்பகத்தில் வளர்கின்றனர்.
நவீன தொழில் நுட்பத்தையும், விஞ்ஞான வளர்ச்சியையும் கற்றுத் தரும் பள்ளிகள் பந்த பாசங்களின் முக்கியத்துவம் குறித்து கற்றுத் தர முன்வராததால் இன்றைய தலைமுறையினருக்கு அன்பின் மகத்துவம் புரிவதில்லை. சக நண்பர்களும் அவ்வாறே வளர்வதால் உலகத்தைப் பற்றிய பார்வை இவர்களுக்கு வேறு மாதிரியாக மாறிவிடுகிறது.
புகை பிடிப்பதை கண்டிக்க வேண்டிய பெற்றோர் பணத்தை நோக்கி ஓடுவதால் இளம் வயதினருக்கு புகை நண்பனாகிறது. மருத்துவர்களின் அறிவுரையை இவர்களிடம் கொண்டு செல்ல தகுந்த ஆட்கள் இல்லாததால், தடுமாறுகிறது இளம் தலைமுறை.
கிராமங்களில் புகை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்கள் புகை பிடிக்க வேண்டுமென்றால், பயந்து கொண்டு மறைந்திருந்து பிடிப்பார்கள். ஒருவேளை மாமா, சித்தப்பா அல்லது தூரத்து உறவினர் யாராவது வந்துவிட்டால் அவர்களின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு பயந்து வாழ்ந்தார்கள். எனவேதான் தவறுகள் குறைவாக இருந்தன.
உறவினர்களின் அறிவுரைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே கேட்டு வளர்ந்தவர்கள் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுக்கப்பட்டார்கள். ஆனால் இன்று உறவினர்களின் வட்டத்தை நாம் சுருக்கிக் கொண்டதால், பிள்ளைகளுக்கு எதிரே வருபவர்கள் நமது உறவினர் என்பதுகூட தெரிவதில்லை.
இதனால் தவறுகள் தைரியமாக நடைபெறுகின்றன.
நிலவை காட்டி சோறூட்டிய காலங்கள் மறைந்து விட்டன. நேரமாச்சு என உணவை எடுத்து வைத்துவிட்டு ஓடுகின்ற பெற்றோரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் பிள்ளைகள். ஆயாக்கள் மட்டுமே அவர்களிடம் பேசுகின்றனர்.
உறவுகளைப் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். உறவுகளுக்கும் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். அப்போதுதான் நம்மை வழி நடத்தவும், தவறு செய்யும் போது கண்டிக்கவும் நாலு பேர் உள்ளனர் என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் உண்டாகும்.
சமுதாயத்தில் நான்கு பேர் நான்கு விதமாக பேசும்படியான வாழ்க்கையை நமது பிள்ளை வாழாமல், நல்ல விதமாக வாழ வேண்டுமெனில் உறவினர்களை போற்றுங்கள். அப்போதுதான் நமக்குப் பின் நமது பிள்ளையை தாங்கிப் பிடிப்பதற்கு நான்கு பேர் இருப்பார்கள்.
உறவுகளைத் தொலைத்தவர்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். எனவே உறவுகளை விரும்புவோம்; வாழ்க்கையை நேசிப்போம். உறவுகளோடு சேர்ந்து வாழ்வோம்.
By
No comments:
Post a Comment