பிளிப்கார்ட் இணைய வர்த்தகம் சில நாள்களுக்கு முன்பு தீபாவளி தள்ளுபடி விற்பனையை அறிவித்து, ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இது ஓர் இணைய வர்த்தக சாதனைதான் என்றாலும், இணைய வர்த்தகத்தின் வளர்ச்சி பொதுவணிகத்தை சிதைத்து அரசுக்கும் மிகப்பெரிய வரி இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைத்தால் அச்சம் மேலிடுகிறது.
"இணைய' வர்த்தகத்தைக் கண்டித்து அக்டோபர் 31-ஆம் தேதி நாடு முழுவதும் தர்னா நடத்தப்போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனம், பொருள்களின் விலையை உயர்த்திப் பிறகு விலைத் தள்ளுபடியைச் செய்ததாகவும், பலர் வாங்க விரும்பிய பொருள்கள் இருப்பு இல்லை என்று கூறியதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து அரசு ஆலோசிக்கும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி கூறியுள்ளார்.
பல்வகை வணிக இலச்சினைப் பொருள்கள் விற்பனையில் 51% அன்னிய நேரடி முதலீட்டை 2012 செப்டம்பரில் மத்திய அரசு அனுமதித்தது. அடுத்த வாரத்திலேயே இந்த அனுமதி, இணைய வர்த்தக நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று விளக்கம் தெரிவித்தது. அரசின் உத்தரவை இணைய வணிக நிறுவனமாகிய பிளிப்கார்ட் பொருள்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பில் பிளிப்கார்ட் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகின. அப்போதே இந்தப் பிரச்னையில் அரசு கவனம் செலுத்தி, இவர்களது வணிக முறையை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். வணிகர்களும் இந்தப் பிரச்னையை தொடர்ந்து பேசியிருக்க வேண்டும்.
இணைய வணிகத்தில் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு நேரிடையாகப் பொருள்களை அனுப்பிவைத்து, இடைத்தரகர்களாக அதில் லாபம் ஈட்டும் முறைதான் அதிகம். இதன் மூலம், அரசுக்கு விற்பனை வரி இழப்பு ஏற்படுகிறது. அதுபற்றி யாரும் தீவிர சிந்தனையைச் செலுத்தவில்லை.
இணைய வர்த்தகச் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனம் போன்று, பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் பல இருக்கின்றன. இதே தீபாவளி கொண்டாட்டம் எல்லா இணைய வர்த்தக நிறுவனங்களிலும் இருக்கின்றன. இணையம் மிகப்பரவலாக இருப்பதாலும், அதன் மூலமாகப் பணத்தைக் கொடுக்க முடிகிறது என்பதாலும் இணைய வர்த்தகம் கட்டுப்பாடு இல்லாமல் விரிந்து கிடக்கிறது. முதலில் புத்தகம் போன்ற பொருள்களில் தொடங்கி இ-வணிகம் தற்போது மளிகைப் பொருள்கள்வரை வந்துவிட்டது.
இந்தியாவை, 45,000 கோடி டாலர் வர்த்தகச் சந்தை என்று மேலைநாடுகள் தீர்மானித்திருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து இறங்கினாலும் இவர்களும் மனிதர்களின் இலவசம் மற்றும் தள்ளுபடி பலவீனங்களில்தான் பிழைப்பு நடத்துகிறார்கள்.
குறைந்த லாபத்தில் அதிக நுகர்வோருக்கு விற்பதன் மூலம் லாபத்தை ஈட்டுவதுதான் தள்ளுபடி வர்த்தகத்தின் நோக்கம். ஒரு பொருளை விற்பதன் மூலம் 100 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றால், விலையில் 50 ரூபாய் குறைத்து இரண்டு நுகர்வோருக்கு விற்பதன் மூலம் அதே ரூ.100 லாபம் பெற முடியும். விலையைக் குறைத்தார் என்ற நல்லெண்ணத்தை நுகர்வோர் மனதில் விதைக்க முடியும்.
ஆனால், நுகர்வோர் எண்ணிக்கை 100 ஆகப் பெருகும்போது, நுகர்வோரைச் சமாளிக்க கூடுதல் வேலைக்காரர்கள், பேக்கிங் செலவுகள், எல்லாமும் சேரும்போது, லாபம் கிடைப்பதில்லை. ஆகவே, பொருள்களின் விலையை ஏற்றி, அதில் தள்ளுபடி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதே சிக்கலைத்தான் தற்போது பிளிப்கார்ட் சந்தித்துள்ளது. ஆடித் தள்ளுபடி முதல் அனைத்து தள்ளுபடிகளும் கட்டுப்படியாகும்வரைதான்.
இ-வணிகத்தைப் பொருத்தவரை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு செய்ய வேண்டியதைவிட வியாபாரிகள் செய்ய வேண்டியதுதான் நிறைய இருக்கிறது. அவரவர் தங்கள் கடைகளிலேயே
ஒவ்வொரு பொருளின் அதிகபட்ச சில்லறை விலையில் 10-15 விழுக்காடு குறைத்து விற்பனை செய்வதும், தரமான தயாரிப்புப் பொருள்களை மட்டுமே விற்பதுமான நேர்மை - அந்தப் பகுதி மக்களை மீண்டும் அவர்களிடமே கொண்டு சேர்க்கும்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நுகர்வோரின் எண்ணிக்கையும் அவர்களது பணபலமும் மட்டுமே தெரியும். ஆனால், உள்ளூர் வணிகருக்கு அவருடைய நுகர்வோரின் முகமும், அவரவர் வாழ்க்கை நிலையும் தெரியும். வணிகத்தைத் தாண்டிய மனித உறவுகளை சிறு வணிகர்கள் ஒரு பாதுகாப்பு வளையமாக உருவாக்கிக்கொண்டால் பெருநிறுவனங்களால் அந்த வளையத்தை உடைப்பது இயலாது.
No comments:
Post a Comment