நாம் கொட்டுகிற குப்பைகளும் கழிவுப் பொருள்களும் ஒருநாள் தெருக்களை அடைத்துக் கொள்கின்றன. வழக்கமாக வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்ன காரணத்தாலோ அன்று வராமல் இருந்துவிடுகிறார்கள். தெருவில் வசிக்கும் அத்தனை பேரும் உடனடியாக நகராட்சியை முற்றுகையிட்டு ஒரு கை பார்த்து விடுகிறோம்.
நகரங்களில் புதிது புதிதாக வீடுகள் முளைத்து விடுகின்றன. வீடுகட்டத் தேவையான மணல், செங்கல், ஜல்லிக் கற்கள் சுமந்து செல்லும் வாகனங்கள் தெருக்களை உண்டா இல்லையா எனப் பார்த்துவிடுகின்றன. கனரக வாகனங்களை (சுமைகளுடன்) தாங்கும் சக்தி இழந்துள்ள தெருக்களின் ஓரங்கள், கழிவுநீர்க் கால்வாய்களின் சுவர்கள் சரிந்து விழவும் கழிவுநீர் தெருக்களில் பாய்ந்து பள்ளங்களில் தேங்குகின்றன. நாற்றமெடுக்கும் கழிவுநீரில் கொசுக்களின் பெருக்கத்தால் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த நிர்வாகத்துக்கு அறிவிக்கும் முறையில் வீதிக்கு வந்து போராடுகிறோம். நகராட்சியின் அன்றைய அலுவல்கள் அவ்வளவுதான்.
பொது இடங்கள், ஏரிகள், குளங்களையெல்லாம் மேடாக்கி, வீடுகள் கட்டிக் குடியிருப்புகளாக மாற்றுவது நாம்தான். மழைக்காலத்தில் அவ்வளவு நீரையும் வீணாகக் கடலில் கலக்கச் செய்கிற நாம்தான், குடிநீர்ப் பஞ்சம் எனக் கூப்பாடு போட்டு தண்ணீருக்காக அரசிடம் போராட்டம் நடத்துகிறோம்.
பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் இவற்றின் பயன்பாட்டருமை தெரிந்தும் தெரியாததுபோல நடிக்கிறோம். பற்றாக்குறையால், வெளிநாடுகளிடம் கையேந்திக் கெஞ்சிக் கூத்தாடும் அவலம் நமது அரசுக்கு. அரசிடமும் சிக்கன நடவடிக்கையில்லை. நாமும் சிக்கனம் பற்றிக் கற்றுக் கொள்ளவில்லை. அரசைத் திட்டித்தீர்க்கும் நமக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடுகிறோம்.
தொடர் வண்டிகள், பேருந்துகளில் பயணம் செய்யும் நாம், உணவு வேளைகளிலும், இடைவேளை நேரங்களிலும் பல்வேறு உணவுகளை உண்ணுகிறோம். ரொட்டிகள், பழங்கள், நிலக்கடலை, வடை மற்றும் இனிப்புப் பண்டங்கள் பலவற்றையும் உண்டபிறகு அவற்றின் உறைகள், பழத்தோல்கள், உண்ணப் பயன்படுத்திய தாள்கள் என அனைத்தையும் நம் இருக்கைகளின் அடியிலேயே எறிந்து விடுகிறோம். இருக்கைகள் அசுத்தமாக உள்ளன. கரப்பான் பூச்சிகள், எலிகளின் தொல்லைகள் என ரயில்வே நிர்வாகத்தையும் அரசையும் குறைகூறும் அருகதை நமக்கில்லை என்பதை மறந்து கூச்சல் போடுகிறோம்.
வீடுகளில் உண்ணும் விருந்துணவைப் பயணங்களிலும் உண்டால்தான் நமக்குத் திருப்தி. உணவை இருக்கை முழுக்கப் பரப்பி, பிறருக்கும் எழுந்திருக்கும் கட்டாயத்தை உண்டுபண்ணும் சாப்பாட்டுப் பிரியர்கள் நாம்.
ஒருவேளை உணவைக்கூட எளிய உணவாக உண்ண விரும்பாத சாப்பாட்டுப் பிரியர்களான நமக்கிணையாக எவரையும் கூறமுடியாது. உணவுப் போட்டி வைத்தால், கோப்பையைக் கைப்பற்றுவது நம்மவர்களாகத்தான் இருப்பார்கள். பழம், ரொட்டிகளுடன் மட்டும் பயணிக்கும் வெளிநாட்டவர்கள் நமது பயண உணவைக் கண்டு மயக்கம் அடையாமல் இருக்கமாட்டார்கள்.
பொருள்களைச் சிந்தாமல் சிதறாமல் உண்பதும், கழிவுகளை அவற்றுக்கென்றுள்ள தொட்டிகளில் போடுவது என்பதும் நாம் அறியாதவை. சட்டம் ஒழுங்கை மீறி நடப்பதில், நமக்கு தனி சுகம்.
நமது துப்புரவுப் பணியாளர்களான கரப்பான் பூச்சிகள், எலிகள், காக்கைக் குருவிகள் நாம் விட்டெறியும், சிதறும் அசுத்தங்களையல்லவா தின்று நமது வாழிடங்களைத் தூய்மையாக்குகின்றன. நமது இருப்பிடங்களை எலிகள் பூச்சிகளின் வாழிடங்களாக மாற்றுவது நாம் தானே? மற்றவர்களை நாம் குறை கூறுவது சரியா?
போராடும் சங்கங்கள், கட்சிகள், பொதுநல இயக்கங்கள் இவையெல்லாம் முன்னோடிகளாக வாழ்ந்து காட்டலாம் அல்லவா? அரசுக்கு மட்டும்தான் பொறுப்புண்டா? பொது மக்களாகிய நமக்கு பொறுப்புணர்ச்சி இல்லையா? ஒரு வகையில் அரசு என்பதும் நாம் தானே.
சட்டதிட்டங்களை மீறுவது; தர்ம நியாயங்களைத் தூக்கி வீசியெறிவது; சுயநலத்துக்காகப் பிறருக்குத் தீங்கிழைப்பதைச் சாதனையாகவும் சாகசமாகவும் நினைப்பது; தட்டிக்கேட்கும் பெரியவர்களை, அப்பாவிகளைக் கிண்டல் செய்து மனம் நோகத் திட்டுவது; தர்ம அடி கொடுப்பது - இவை தாமே நமது கைவந்த கலைகள்.
அரசைக் குறை கூறும் முன், நாம் நமது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment