சமீபத்தில் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் நமது பள்ளிகளில் மாணவர்களின் செயல் திறன், புரிதல், கற்றதை வெளிப்படுத்தும் திறமை ஆகியவை மோசமாக உள்ளன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
மாணவர்களுக்கு எழுத்துக்கூட்டிக்கூட தமிழில் படிக்க வரவில்லை. ஆங்கிலம் பற்றி கேட்கவே வேண்டாம். நகர்ப்புறத்து இளைஞர்கள் ஓரளவு பரவாயில்லை, ஆனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் மாணவர் திறமை மிகக் குறைவாக இருப்பதாக அந்த ஆய்வு முடிவு கூறுவது கவலைக்குரிய விஷயம்.
புகழ் பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மைக்கேல் க்ராமர், இந்தியாவில் இருக்கும் ஆரம்பப் பள்ளிகளில் உள்ள தரத்தை ஆய்வு செய்தார். உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழுவோடு இந்த ஆய்வு 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில், ஆரம்பப் பள்ளிகளில் சராசரி நான்கு ஆசிரியர்களில் மூன்று பேர் வருவதில்லை. பணிக்கு வரும் இரண்டில் ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துவதில்லை என்ற உண்மையை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
நாட்டில் சுமார் பதினைந்து லட்சம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களில் ஐம்பது சதவீதம் பேர் சரியாக போதிப்பதில்லை என்றால் குழந்தைகளின் எதிர்காலம், அறிவு, வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? பல பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் வேறு ஒருவரை குறைந்தத் தொகைக்கு அமர்த்திவிட்டு தான் சொந்தத் தொழில் செய்யும் நிலையும் இருக்கிறது.
தர்மத்தை போதிக்கும் ஆசிரியர்களே அதர்ம வழியில் சென்றால், சமுதாயம் எந்த நிலையில் இருக்கும்? தர்மம் என்பது தனி மனித உணர்வு மட்டுமல்ல; சமுதாயம் மற்றும் அரசியல் நற்பண்பின் பிரதிபலிப்பு. எந்நிலையிலும் கடமை என்னும் தர்மத்தை புறக்கணிக்கலாகாது.
அலெக்ஸôண்டரின் நல்லாசிரியர் அரிஸ்டாட்டிலின் கூற்றுப்படி, எவ்வாறு ஒரு சங்கீதம் பயிலப்படுகிறதோ அவ்வாறு நல்லொழுக்கமும் தினந்தோறும் நடத்தை மூலம் பயில வேண்டும்.
கல்வியின் நோக்கம் தெரியாததை அறிவது மட்டுமல்ல; எவ்வாறு வாழ்க்கையில் நன்னெறிகளை கடைப்பிடிப்பது அவ்வழியில் நடப்பது என்பதை பயிற்றுவிக்கும் தளம் பள்ளிக்கூடம். "படித்த பண்டிதர்கள் நடமாடுகிறார்கள், ஆனால், நன்னடத்தையுடைய பண்பாளர்கள் இல்லையே' என்ற கவி தாகூரின் அங்கலாய்ப்பு இன்றும் பொருந்தும்.
சமீபத்தில், இங்கிலாந்தில் கல்வியின் தரத்தை உயர்த்த, டாலண்ட் ரேய்டிட் திறனை அதிரடியாக கண்டுபிடி என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பள்ளிகளை, மாணவர் சேர்க்கை, அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிரித்து எவ்வாறு சில பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன, பின் தங்கும் பள்ளிகளின் பின்னடைவுக்கு காரணம் என்ன, எவ்வகையில் தரவுயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
முக்கியமாக கணிதம், ஆங்கிலம் இவ்விரண்டில் எவ்வளவு மதிப்பெண் மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதின் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, பின்னடைவடையும் பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அப்பள்ளிகளை முன்னேற்றம் அடையச்செய்வது அடிப்படை செயலாக்கமாக வைத்தது நல்ல பலனை அளித்துள்ளது.
பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் சமுதாயச் சூழல், பெற்றோர்களின் வருமானம், அவர்களது படிப்பறிவு மாணவர்களின் செயலாற்றலில் வெளிப்படும். உதாரணமாக, பொருளாதாரம் குறைந்த இடம், கல்வி பயிலும் முதல் தலைமுறை இவற்றை கருத்தில் கொண்டு பள்ளியின் தரத்தை நிர்ணயித்து, அதற்கு ஏற்றவாறு வசதிகள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பெறும் மதிப்பெண், நூறு சதவீதம் தேர்ச்சி இதை மட்டும் கணக்கில் கொண்டு ஆசிரியர்களை பாராட்டுவதும் சாடுவதும் தவறான அணுகுமுறை. ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.
அந்தப் பள்ளியில் மாணவர்கள் சரியாக வருவதில்லை. பல ஆசிரியர்கள் முயன்றும் மாணவர்களை வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை.
ஆனால், பல ஆசிரியர்கள் செய்ய முடியாததை ஓர் ஆசிரியர் செய்து வெற்றி கண்டார். படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றது மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பணியிலும் முத்திரை பதித்தனர்.
வெற்றிக்குக் காரணமாக இருந்த நல்லாசிரியரை கேட்டபோது, அவர் "நான் ஒன்றும் விசேஷமாக செய்யவில்லை. பின் தங்கிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தேன். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தேன். அன்பும் பரிவும் காட்டினேன். வழி நடத்தினேன்' என்றாராம்.
இதுதான் கற்றலில் இனிமையை புகட்டும் சூக்ஷமம். பள்ளியில் சேரும் எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்தான். அவர்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் ஆசிரியர் வழிநடத்துவதில்தான் என்பது உண்மை.
கட்டாய அடிப்படைக் கல்வி, அடிப்படை உரிமையாக அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு சட்டமும் இயற்றப்பட்டுவிட்டது. கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், ஏனோ அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்.
சம்பத்தப்பட்ட துறையிலிருந்து மானியம் பெறுவதில் தாமதம், வசதி படைத்தவரின் எதிர்ப்பு போன்ற பிரச்னைகள். சில ஐரோப்பிய நாடுகளில் பின் தங்கிய வகுப்பினருக்கு கல்வி மானியம் கடவு சீட்டுகளாக கொடுக்கப்படுகின்றன. அதை வைத்து எந்தப் பள்ளியிலும் சேரலாம்.
கல்வி நிர்வாகம் கடவுசீட்டை வங்கியில் கொடுத்து கல்வி கட்டணத்தை பெறலாம். இம்முறையில் கல்விக்காக நிர்வாகமோ பெற்றோரோ யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. கையூட்டு பிரச்னையும் இருக்காது.
கிராமங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் வயிற்றுக்கு உணவு கிடைக்கிறது. செவிக்கு உணவு கிடைப்பதில்லை என்ற நிலை மாற வேண்டும். கட்டாயக் கல்வி கட்டாந்தரை கல்வியாகக் கூடாது. பள்ளிகளில் உள்ள கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
பள்ளித் தேர்வுகளில் மாணவிகள் மாணவர்களைவிட பிரகாசிக்கிறார்கள், ஆனால், பல கிராமங்களில் மாணவி பூப்பெய்தினால் மஞ்சள் நீராட்டு, பள்ளிக்கு கால்பூட்டு. எப்போது மாறும்? இடைநிலையில் நீங்குபவர்கள் எண்ணிக்கை எடுத்தால் சிறுமிகளே அதிகம். அதிலும் பழங்குடியினர், முஸ்லிம் பெண் கல்வி இன்னும் குறைவு.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பிரச்னைகள் பல. "பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதன்றி கற்பதை விட பிச்சை நன்றே என்றாகி விட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு விசேஷ பள்ளிகள் குறைவு. இருப்பவையும் அருகில் இல்லை.
பார்வை, பேச்சு, கேட்புத்திறன் குறையுள்ள மாணவர்களையும் சாதாரண பள்ளிகளில் சேர்க்க வகை செய்ய வேண்டும். அமெரிக்காவில் டஸ்கீ என்ற பள்ளியில் வாரம் ஒரு நாள் சாதாரண மாணவர்களுக்கும் செயற்கை ஊனம் செய்து ஊனத்தின் வலியை உணரச் செய்வார்களாம். நலிவுற்றவர்களுக்கு உதவும் மனப்பக்குவம், மனித நேயம் வளர்க்க இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.
ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர், "பி.ஏ., எம்.ஏ. படித்த பட்டதாரிகளிடம் ஏதாவது வேலை செய்யக்கூடிய செயல் திறன் இல்லை' என்ற முக்கிய கருத்தினை பகிர்ந்து கொண்டார். புத்தகக் கல்வி மட்டும் போதாது, புதியதை பயின்று புத்தாக்கம் அவசியம் என்பதை பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.
கல்லூரிகளை எடுத்துக்கொண்டால் தரமான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை. வேலைக்கு உத்தரவாதம் என்று மாணவர்களை மயக்கி பாட திட்டத்தை சிறிது மாற்றி பட்டப்படிப்பு என்ற சம்பிரதாய கல்வியால் யாருக்கு லாபம்?
கல்லூரிக்கு படிக்க வருகிறார்களா, அடிக்கப் பழக வருகிரார்களா என்ற சந்தேகம் எழுகிறது. நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் காம்பஸ் வையலன்ஸ் என்ற வன்முறை கலாசாரம் எப்போது ஒழியுமோ? கல்லூரி தேர்தல் அரசியல் தேர்தல் போல் நடக்கிறது. காலத்தின் அருமை தெரியாமல் இளமைப் பருவம் வீணாகிறது.
ஆப்பிள் கணினி நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறுவார்: "ஒரு திட்ட நிறைவேற்றலுக்கு எல்லா மூலதனத்தைவிட மிக முக்கியமான மூலதனம் நேரமும் காலமும். நேரத்தை எவ்வாறு பயனுள்ளவாறு செலவு செய்கிறோமோ, அதில்தான் நமது வளர்ச்சி அமையும்.'
நமது நாடு தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைந்து உலகில் வல்லரசாக வளர வேண்டும் என்றால், மனித வளமேம்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியம். தரமான கல்வி, அடிப்படை கல்வி அடித்தட்டு மக்கள் வரை செல்ல வேண்டும். உலகில் முப்பது சதவீத படிப்பறிவில்லாத மக்கள் இந்தியர்கள் என்பது பெருமைக்குரிய குறியீடல்ல. பதினைந்து சதவீதம் மாணவர்கள்தான் மேல்நிலைப் பள்ளி செல்கிறார்கள். அதில் ஏழு சதவீதம் பட்டப்படிப்பு முடிக்கிறார்கள். உலக மேற்படிப்பு தர வரிசையில் நமது நாட்டு கல்விக்கூடங்கள் இடம் பெறவில்லை.
நமது இளைய தலைமுறைக்கு நாம் கொடுக்கவேண்டியது பொன் அல்ல; மண் அல்ல; கல்வி செல்வம் ஒன்று தான்.
"கல்லா வறியர்க்கு கைப்பொருள் கல்வியே; இல்லை என்பது கல்வி இல்லாமையே; உடையவர் என்பவர் கல்வி உடையவரே' என்ற பாரதிதாசன் பொன்மொழிக்கேற்ப காலத்தின் அருமை கருதி தரமானக் கல்வி விரைந்தளிக்க முனைந்து செயல்படுவோம்.
By
No comments:
Post a Comment