Blogger Widgets

Total Page visits

Sunday, October 19, 2014

தவறாகவே நினைக்கிறோம்!

பல சந்தர்ப்பங்களில் நமது அபிப்ராயங்களும் தீர்மானங்களும் தப்பாகி விடுகின்றன என்று சில ஆய்வர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கெவின் லீவிஸ் என்ற சமூக அறிவியல் நிபுணர் பல பல்கலைக்கழகங்களின் ஆய்வர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி நமது பொதுவான பல கருத்துகள் தவறானவை எனத் தெரிவதாகக் கூறுகிறார்.
வெளியில் போய் உத்தியோகம் பார்க்கிற பெண்களால் தமது பிள்ளைகளைச் சரியாக வளர்த்து ஆளாக்க முடியாது என்பது பரவலான ஒரு கருத்து. லாம்பார்டி, ரிபெக்கா கோலி என்ற ஆய்வர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறு வேலை பார்க்கிற பெண்களின் பிள்ளைகள் சராசரியைவிட அதிகமான அளவில் புத்திசாலியாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் தம்பதிகளில் கணவனைவிட மனைவியின் சம்பாத்தியம் அதிகமாயிருக்கும் குடும்பங்களில் பிள்ளைகளின் புரிதல் திறன்களும், நன்னடைத்தையில் பற்றுதலும் கூடுதலாக இருக்கிறதாம். தாய் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளின் நலன்கள் பாதிக்கப்படுவதில்லை.
பணியாற்றும் பெண்களுக்கு வீட்டை விடக் குறைந்த இறுக்கமும் சுமையும் உள்ள இடமாகவே அலுவலகம் தெரிகிறது. பெரும்பாலான பெண்களின் உடலில் மன இறுக்கத்தை உண்டாக்குகிற கார்ட்டிசால் என்ற ஹார்மோனின் அளவு அவர்கள் தம் வீடுகளில் இருக்கிற நேரங்களைவிட அலுவலகங்களிலிருக்கிறபோது குறைந்து காணப்பட்டது.
வீட்டிலிருக்கும்போது கணவனுக்கும் குழந்தைகளுக்கும் பணிவிடை செய்வது அலுவலகத்தில் செய்யும் பணியைவிட அதிகச் சிரமம் தருவதாக 60 சதவீதப் பெண்கள் நினைக்கிறார்கள். அத்தகைய நினைப்பே வீட்டிலிருக்கும்போது கார்ட்டிசால் ஹார்மோன் அளவு அதிகமாவதற்குக் காரணமாயிருக்கலாம்.
அதேசமயத்தில் பிள்ளைகளேயில்லாத வீடுகளில் இருக்கும் பெண்களைவிடக் குழந்தைகள் சூழ வாழும் வீடுகளிலுள்ள பெண்கள் குறைந்த மன இறுக்கம் கொண்டவர்களாயிருக்கிறார்கள். இது அமெரிக்காவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்த ஒரு விஷயம். நம் நாட்டுக்கு இது பொருந்துமா என்று தெரியவில்லை.
தாம் பயணிக்கும் பாதைகளின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரம் செய்வதையும், தாம் பேசுவதைக் கேட்கப் பெரும் கூட்டம் வருவதையும் கண்டு பல அரசியல்வாதிகள் தாம் மக்களின் ஒட்டுமொத்தமான அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளதாக எண்ணு வதுண்டு.
அதேபோலப் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்தும் போராளிகளும் எல்லா மக்களும் தம்மை ஆதரிப்பதாக மார் தட்டிக் கொள்வதுண்டு. அத்தகைய பயங்கரவாதிகளை எதிர்த்துச் சண்டையிட வேண்டியிருக்கிற அரசுப் படையினரும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் வென்றெடுத்து விட்டதாகச் சொல்லிக் கொள்வதுண்டு.
ஆனால் அவ்வாறான கூற்றுகள் அபத்தமானவை என்று ராபேல் கோஹன் என்பவரின் ஆய்வுகள் காட்டுகின்றன.
வெகுஜனக் கருத்துகள், தேர்தலிலோ, போர்க்களத்திலோ ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை முன்கூட்டியே கணிக்க உதவுவதில்லை. வெகுஜனக் கருத்துகள் அவ்வளவு எளிதாகவும் விரைவாகவும் மாறி விடுவதில்லை. அப்படி ஏதேனும் மாற்றம் ஏற்படுவது கூடச் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றபடி ஒரு தரப்பினரின் வெற்றி தோல்விகளின் விளைவாக அமையுமே தவிர அவற்றுக்குக் காரணமாக அமைவதில்லை.
அழகான குழந்தைகளைக் கண்டால் எல்லாருக்கும் அவர்களைப் பிடித்துப் போய்விடும் என்றுள்ள ஒரு பொதுவான கருத்தும் தப்பு என்று ராபர்ட் ஃபிஷர், யூ மா என்ற ஆய்வர்கள் கூறுகிறார்கள்.
சிறுவர் சிறுமியர் சிக்கல்களுக்குள்ளாகிறபோது உறவினரல்லாத வெளி நபர்கள் எந்த அளவுக்கு அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்தபோது அழகில்லாதவர்கள் அழகானவர்களைவிட அதிக அளவில் மற்றவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறுவதாகத் தெரிய வருகிறது.
அழகானவர்கள் உலகியல் ரீதியில் அதிகத் திறமையுடன் இயங்க வல்லவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. எனவே பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டால் தவிர, மக்கள் அழகானவர்களுக்கு உதவ முன்வர மாட்டார்கள்.
சிறுவர் சிறுமியருக்குச் சேவை செய்கிற தொண்டு அமைப்புகளும் மருத்துவச் சேவை அமைப்புகளும் நன்கொடை கோரி வெளியிடும் விளம்பரங்களில் அழகிய தோற்றமுள்ள குழந்தைகளின் படங்களை இடம்பெறச் செய்தால் பெறப்படும் நன்கொடையின் அளவு குறைந்து விடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
அதீதமான திறமை கொண்ட நபர்கள் அடங்கிய குழுக்கள் வெற்றிகரமான செயல்பாடுள்ளவை என்று ஒரு பரவலான எண்ணமுண்டு. ரோடரிக் ஸ்வாப் என்பவரின் தலைமையிலான ஓர் ஆய்வர் குழு அந்த எண்ணம் தப்பு என்று கண்டுபிடித்திருக்கிறது.
பல சந்தர்ப்பங்களில் அதீதமான செயல்திறன்கள் குறைவான செயல்திறன்களுக்குச் சமமான அளவில் மோசமான பலன்களை உண்டாக்குகின்றன என அவர்களது ஆய்வுகள் அறிவிக்கின்றன.
கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தபோது அதீதமான திறமை ஓரளவுக்குத்தான் பலன் தருகிறது என்று தெரிய வருகிறது. அதீதமான திறமையுள்ளவர்கள் ஓரளவுக்கு மேல் அணியின் மற்ற வீரர்களுடன் ஒத்துழைத்து விளையாடுவதில்லை. பந்துகளை மற்றவர்கள் தமக்குக் கடத்துவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
பந்தைத் தம் வசத்தில் அதிக நேரம் வைத்துக் கொள்ளும் போக்கு அவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. கிரிக்கெட், பேஸ் பால், டென்னிஸ் போன்ற சில விளையாட்டுகளில் தனிநபரின் திறமை வெற்றிக்கு வழிகோலுவதைப் போல மற்ற குழு விளையாட்டுகளில் அதீதமான திறமைசாலிகளால் அனுகூலம் ஏற்படுவதாகச் சொல்ல முடியவில்லை.
விளையாட்டுகளினால் சமூக நிலைப்பாடுகளில் எந்தவிதமான விளைவும் ஏற்படாது என்ற கருத்தும் தவறானதாம். ஃபீபி கிளார்க், அயன் அய்ரீ என்ற ஆய்வர்கள் செய்த ஆய்வுகள், பெண்கள் அதிக அளவில் விளையாட்டுகளில் பங்கெடுக்கும் சமூகங்களில் கணிசமான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளன.
அமெரிக்காவின் மாகாண அளவில் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையில் பத்து சதவீத உயர்வு ஏற்பட்டபோது பெண்களின் சமநோக்குப் பண்பில் 5-6 சதவீத உயர்வு தென்பட்டது.
மணமானவர்களில் அது ஐந்து சதவீதமாகவும், மணமாகாத அல்லது கணவனில்லாத தாய்மார்களில் அது ஆறு சதவீதமாகவும் இருந்தது.
விளையாட்டுகள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்பதால் பெண்களின் மனதில் விடுதலை உணர்வு ஓங்குகிறது. திருமண பந்தம், குடும்பப் பொறுப்பு போன்ற கட்டமைப்புகளின் பிடி தளர்கிறது. அவற்றால் நன்மையும் உண்டு, தீமையுமுண்டு என ஆய்வர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு நீதி போதனைக் கதைகளைச் சொன்னால் அவர்களிடம் நல்லொழுக்கமும் நன்னடத்தையும் மேம்படும் என்று பலரும் நம்புவது தப்பு என்கிறார்கள் காங் லீ, விக்டோரியா தல்வர் ஆகியோரின் ஆய்வுக் குழுவினர். மிக அரிதான சமயங்களில் மட்டுமே அந்த உத்தி உதவுகிறது.
அரிச்சந்திரன் போன்றவர்களின் கதைகளை மூன்று முதல் ஏழு வரையான வயதுள்ள குழந்தைகளுக்குப் போதித்த பிறகும் அவர்கள் பொய் சொல்கிற அளவு குறையவில்லை. ஆனாலும் உண்மையை ஒப்புக்கொள்ளும் விழுக்காடு அதிகமாகியிருக்கிறது.
பொய் சொல்ல மறுத்து அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்களை விலாவாரியாக விவரித்து விட்டுக் கதை முடிவில் அவன் சுகமடைந்ததை ஓரிரு வரிகளில் சொல்லி முடித்து விடுகிற கதையாடல் உத்திகள் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் சங்கடம் வரும் என்ற கருத்தையே பெரும்பாலான குழந்தைகளின் மனதில் விதைப்பதாகத் தோன்றுகிறது. உண்மையை ஒப்புக் கொள்வதால் ஏற்படுகிற நன்மைகளை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிற வகையில் கதையாடல் அமைய வேண்டும்.
அலெக்ஸ் ரூதர் போர்ட், டியன் ஹார்மன் ஆகியோர் செய்துள்ள ஆய்வுகளின் முடிவுகள், அரசியல்வாதிகளும் ஆன்மிகவாதிகளும் எல்லா இன, மத, சாதி மக்களும் ஒரேயிடத்தில் கூடி வாழ்ந்தால் அமைதி நிலவும் என்று கூறுவது தப்பு எனக் காட்டுகின்றன.
அவர்கள் வெவ்வேறு இனத்தினர் அடுத்தடுத்து வாழும் நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகள் உறுதியாக வரையறுக்கப்பட்ட பூகோள மற்றும் அரசியல் எல்லைகளே அமைதி நிலவ இன்றியமையாதவை என்ற முடிவுக்கு வருகின்றன.
உதாரணமாக ஸ்விட்சர்லாந்தில் பல இனத்தினர் வசிக்கிறார்கள். எனினும் மலைகளும் ஏரிகளும் ஒவ்வொரு இனத்தினரின் பிரதேச எல்லைகளைப் பிரித்துக் காட்டுகின்றன. அவை மோதல் வாய்ப்புகளைத் தவிர்க்க உதவுகின்றன.
யூகோஸ்லாவியா பல குட்டி நாடுகளாகச் சிதறுண்டபோது பல இடங்களில் இனக் கலவரங்கள் ஏற்பட்டன. எனினும் இன மற்றும் பிரதேச எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்ட இடங்களில் அமைதி நிலவியது.
அடுத்த வீட்டுக்காரருடன் சுமுகமான உறவு தேவை; அதற்கு தடுப்புச் சுவர் தவிர்க்கமுடியாத தேவை!

By கே.என். ராமசந்திரன்,தினமணி 

No comments: