Blogger Widgets

Total Page visits

Sunday, October 19, 2014

தேவை - முதியோர் சத்துணவு மையம்

உத்தரப் பிரதேசத்திலுள்ள பிருந்தாவன் கோயிலுக்கு வெளிமாநில விதவைகள் வர வேண்டாம் என்று ஹேமாமாலினி சொன்னதற்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தாகிவிட்டன.
ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு, பத்திரிகைகளில் தலையங்கம் தீட்டப்பட்டு, மேடைகளில் திட்டப்பட்டு அந்த விஷயம் முடிந்தாகிவிட்டது.
வராதீர்கள் என்று சொல்ல ஹேமாமாலினிக்கு உரிமையில்லைதான். இருப்பினும், அவரும் ஒரு பெண் என்பதாலும், அது அவரது தனிப்பட்ட கருத்து என்ற வகையிலும் எடுத்துக்கொண்டு, அவர் ஏன் இவ்வாறு சொல்ல நேர்ந்தது என்பதை யோசித்தால், இந்தப் பிரச்னையை புரிந்துகொள்ளவாது அது உதவியாக இருக்கும்.
பிருந்தாவன் "விதவைகள் நகரம்' என்று அழைக்கப்படுகிறது என்பதனை இந்தப் பிரச்னை பெரிதாகும்வரை பலர் அறிந்திருக்கவில்லை. உயர்சாதி இந்துக் குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்ட விதவைகள் இங்கு வந்து வசிக்கிறார்கள்.
பிருந்தாவன் கோயில் வழிபாட்டில் கலந்துகொண்டு, அவர்கள் கொடுக்கும் அரிசி மற்றும் சில்லறைப் பணத்தை வைத்துத் தங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
சிலர் கூடுதல் தேவைக்குப் பிச்சையெடுக்கிறார்கள். ஹேமாமாலினியின் பேச்சுக்குப் பிறகுதான் நாட்டுக்கு இவர்களது அவலநிலை தெரியவந்தது.
பிருந்தாவன் கோயில் சார்ந்த விதவைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது. இவர்கள் வாழிடம் இல்லாமல் தெருவோரத்திலும், கோயிலை அண்டியும் வாழ்கிறார்கள்.
சில அறநிலைகள் சார்பில் விதவைகள் இல்லம் கட்டப்பட்டு இருந்த போதிலும், அவற்றால் பெரும்பயன் இல்லை. இதற்காக மாநில அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் அவை போதுமானதாக இல்லை.
இங்கு வரும் விதவைகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில்தான், ஹேமாமாலினி தனது கருத்தைத் தெரிவித்தார். மேற்கு வங்கம், பிகார் மற்றும் வெகுதொலைவிலிருந்து இந்த நகருக்கு வர வேண்டாம். அந்தந்த பகுதிகளில் உள்ள கோயிலில் அடைக்கலம் தேடுங்கள் என்று சொன்னார்.
விதவைகள் தங்கள் வாழிடங்களைவிட்டு வெளியேறி, பிருந்தாவன் நகருக்கு வருவதால் புதுப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதாகிறது என்பதோடு, அரசு தரும் உதவிகளையும் அவர்கள் இழக்க நேர்கிறது.
இந்த விதவைகள் தங்கள் ஊரிலேயே இருந்திருந்தால், அன்ன யோஜனா திட்டத்தில் பொதுவிநியோகத்தின் மூலம் கிடைக்கக்கூடிய இலவச அரிசி, முதியோர், ஆதரவரற்ற பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை இழக்கும் நிலை ஏற்படாது.
இந்த உதவித்தொகை, அரிசி பெறுவதற்கு குடும்ப அட்டையும் வருவாய்த்துறை சான்றும் இன்றியமையாதது. இவர்கள் தங்கள் பெயரை வேறு ஊரில் உள்ள ஒரு முகவரிக்கு மாற்றுவதே பெரும்பாடு.
இன்னொரு மாநிலத்துக்கு மாற்றுவது என்பது குதிரைக் கொம்பு.
இந்த விதவைகள் தங்கள் இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு இந்த உதவிகளைப் பெற்றால், அவர்கள் வாழ்க்கைக்குப் போதிய உணவு உறுதியாகக் கிடைக்கும்.
ஆனால், இந்த அரிசியையும் உதவித்தொகையையும் உடனுறை உறவுகள் பறித்துக்கொள்வதால் அவர்கள் வெளியேறுவது தவிர்க்க முடியாததாகிறது.
இந்தச் சிக்கல் வெறும் பிருந்தாவன் சார்ந்தது மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் அன்னதானம் போடும் கோவில் வாசலில் அன்றாடம் ஒரு வேளை உணவுக்காக காத்திருப்பவர்களில் இத்தகைய விதவைகள் கணிசமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழக அரசு முன்னோடித் திட்டமாக செய்ய வேண்டியது, முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைப் போல, முதலமைச்சர் முதியோர் சத்துணவுத் திட்டத்தை தொடங்குவது.
முதியோர் உதவித் தொகை பெறும் அனைவரையும் இத்திட்டத்தில் இணைத்து, அவர்களுக்கு மதிய உணவு, இருவாரங்
களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை, மாத்திரை, வேட்டி, சேலைகள், போர்வைகள் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
முதியோர் இல்லங்களை உருவாக்குவதைக் காட்டிலும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், முதியோர் தங்கள் உறவுகளோடு வசிக்கவும், அவர்களுக்கு ஒரு சுமையாக இல்லாமல் இயங்குவதற்குமான இலகுவான சூழலை உருவாக்க முடியும்.
இவர்கள் தங்கள் மதிய உணவை, குழந்தைகள் சத்துணவு மையத்திலேயே பகிர்ந்து கொண்டால், குழந்தைகளோடு பழகவும், குறைந்தது அரைமணி நேரம் குழந்தைகளுடன்
பொழுதைக் கழிக்கவுமான சூழல் உருவாகும். அது முதியோரின் மன இறுக்கத்துக்கு அருமருந்தாக அமையும்.

By இரா. சோமசுந்தரம்,தினமணி 

No comments: