Blogger Widgets

Total Page visits

Monday, October 20, 2014

சிந்திக்க வேண்டிய தருணம்!

இன்றைய தனியார்மய சூழலில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்குவது கல்வியும் சுகாதாரமும்தான் என்பது வேதனைக்குரிய ஒன்று. இலவசக் கல்வியும், இட ஒதுக்கீடும் எல்லா தரப்பு மக்களையும் பள்ளிக்கூடக் கூரைக்குள் ஒதுங்கச் செய்திருக்கின்றன என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், தரமான கல்விக்கு உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறி. அதேபோல, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சாமானியனுக்கும் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு வழிகோலி இருக்கிறதே தவிர, பரவலாகத் தரமான மருத்துவம் அரசு மருத்துவமனைகள் மூலம் அடித்தட்டு மக்களுக்குத் தரப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
 கல்விச் சூழலைப் பொருத்தவரை, நாடு தழுவிய அளவில் கல்வித் தரம் மட்டுமல்ல, ஆசிரியர்களின் தரமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதுதான் நிஜ நிலைமை. புற்றீசல்போல, உயர்கல்விச்சாலைகள் எழுப்பப்படுவது என்னவோ உண்மை என்றாலும் கல்வியின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிட்டிருக்கும் அவலம் கல்வியாளர்களை மட்டுமல்ல, நாளைய தலைமுறையின்மீது அக்கறை உள்ள அனைவரையும் கவலைப்பட வைக்கிறது.
 நல்ல கல்விக்கு உத்தரவாதம் நல்லாசிரியர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், காளான்கள்போல ஆங்காங்கே தோன்றியிருக்கும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்களும், தொலைதூரக் கல்வி மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படும் அவலமும் தரமான ஆசிரியர்களை உருவாக்குகின்றனவா என்பது சந்தேகமே. உலகத்தரமான கல்வி பற்றி மட்டுமே சிந்திக்கும் நாம் உலகத்தரமான ஆசிரியர்களை உருவாக்குவதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பதன் விளைவுதான், தேசிய அளவில் கல்வி தரம் தாழ்ந்திருப்பதற்கு அடிப்படைக் காரணம்.
 தரமான ஆசிரியர்கள் இல்லை என்பது இருக்கட்டும். சமீபத்தில் வெளியாகி இருக்கும் 2012-13 ஆண்டுக்கான மத்திய அரசின் "அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்' வெளியிட்டிருக்கும் அறிக்கை, இந்தியாவிலுள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் இருக்கிறார்களே தவிர, ஆசிரியர்களே இல்லை என்கிற அதிர்ச்சி தரும் தகவலைத் தருகிறது. இந்த அறிக்கையின்படி பார்த்தால், ஏனைய பல மாநிலங்களைவிடத் தமிழகத்தின் நிலைமை எவ்வளவோ மேல் என்றாலும்கூட, தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பார்த்தால் வருத்தம் மேலிடுகிறது.
 விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்கிற திடுக்கிடும் தகவலைத் தருகிறது அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வெளியிட்டிருக்கும் அறிக்கை. அதுமட்டுமல்ல, தமிழகத்திலுள்ள 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 195 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல்படுகின்றன. திருவண்ணாமலை (159), சிவகங்கை (134), வேலூர் (127), விழுப்புரம் (113), தர்மபுரி (131) என்று ஓராசிரியர் பள்ளிகளின் பட்டியல் தொடர்கிறது.
  ஓராசிரியர் பள்ளிகளாக ஆரம்பப் பள்ளிகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், ஒன்பது முதல் பிளஸ் டூ வரை உள்ள இடைநிலைக் கல்விச் சாலைகளில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுவது என்பதுதான்  வேதனையளிக்கிறது. 83,641 மாணவர்கள் ஓராசிரியர் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை எப்படி ஜீரணித்துக் கொள்வது?
 அடுத்தபடியாக, தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகள் இரண்டே இரண்டு ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றன. இது ஏதோ அரசுப் பள்ளிகளின் அவலம் என்று கருதிவிட வேண்டாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தாலும்கூட, மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக்கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் இருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
 பல பள்ளிக்கூடங்களில் நூறு மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்கிற நிலைமை காணப்படுகிறது. இந்தப் பட்டியலில் 387 பள்ளிகள் இருப்பதாகவும், ஏறத்தாழ நான்கரை லட்சம் மாணவர்கள் நூற்றுக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
 ஆசிரியர் பற்றாக்குறை பெரிய அளவில் காணப்படுகிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதற்காக, தரமற்ற ஆசிரியர்களை எந்தவிதத் தகுதித் தேர்வும் இல்லாமல் நியமனம் செய்துவிடுவதா என்றால், அதைவிட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் படித்தாலும்கூடத் தவறில்லை. தரமற்ற ஆசிரியர்களால் தவறாக அவர்கள் வழிகாட்டப்படுவது விபரீதத்தில் முடியும்.
 எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் தரமான ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், தங்கள் குழந்தைகள் தரமான ஆசிரியர்களாக வேண்டும், நல்லதொரு வருங்கால சமுதாயம் அமைக்க உதவ வேண்டும் என்று விரும்புவதில்லையே, ஏன்? வேறு எந்தத் துறையினரையும்விட ஆசிரியர்கள் ஊதியத்திலோ, அந்தஸ்திலோ குறைந்தவர்களாக இல்லையே, பிறகும் ஏன் ஆசிரியர்களாக யாரும் விருப்பம் காட்டுவதில்லை?
  தாய் தந்தையர்க்கு அடுத்த நிலையில் வைத்து தெய்வமாகப் போற்றத்தக்க பணி ஆசிரியர்களுடையது. அடுத்த தலைமுறையைச் செதுக்கும் சமூக அந்தஸ்தும், மரியாதையும் உள்ள பணி அவர்களுடையது. இப்போது கௌரவமாக வாழ்க்கை நடத்துவதற்குப் போதிய ஊதியமும் கிடைக்கிறது. திறமைசாலியான நல்லாசிரியர்களைத்தான் காணோம். ஏன்?

தினமணி

No comments: