Blogger Widgets

Total Page visits

Tuesday, October 7, 2014

வேலைக்குத் தயாராவது எப்படி?

அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னால், தொழில் துறை மந்த நிலை உச்சத்தில் இருந்தபோது நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9% என்று அளவிடப்பட்டது. இந்த 9% பேரும் தொழில்துறை மந்தநிலையால் மட்டும் வேலை பெற முடியாமல் தவிக்கவில்லை. அப்போதும் கிடைத்துக்கொண்டிருந்த வேலைகளைச் செய்யும் திறன் அவர்களிடம் இல்லை. இது வேலை தேடும் அனைவரின் உள்மனதுக்கும் தெரியும்.

இதை ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வித் துறைச் செயலர் டோனி வேக்னர் அழகாகக் கூறுவார், “உனக்கு என்ன தெரியும் என்று உலகம் கவலைப்படுவதில்லை, உனக்குத் தெரிந்தவற்றை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்றுதான் உலகம் பார்க்கிறது” என்று.

இப்போது புதுப்புதுத் தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தும் புதுப்புது வேலைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வரலாறு, இலக்கியம், தத்துவம் போன்ற கலைப் பாடங்களில் பட்டங்களை வைத்துக்கொண்டு அந்த வேலைகளைச் செய்ய முடியாது.

எனவே, வேலைகளைத் தரக் காத்தி ருக்கும் நிறுவன உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள், தங்களுடைய தேவைக்கேற்ப ஆள்களைத் தேர்வு செய்ய, வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் திறமைகள் உங்களுக்கு எப்படி வந்தது என்று அவர்கள் கவலைப்படு வதில்லை. வீட்டில் படித்தீர்களா, ஆன்-லைனில் படித்தீர்களா, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலா அல்லது யேல் பல்கலைக்கழகத்திலா என்றெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்க ளுடைய வேலைகளை நீங்கள் செய்வதன் மூலம், அவர்களுக்கு உங்களால் வருமானம் பெருகுமா என்பதை மட்டுமே பார்க்கிறார்கள்.

திறமைகளை அடைவது எப்படி?

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன என்று அறிய ஹயர்ஆர்ட் (www.hireart.com) எலியோனோரா ஷரேப் (27), நிக் செட்லட் (28) ஆகியோருடன் பேசினேன். எலியோனோரா, மெக்கின்ஸி நிறுவனத்திலும் நிக் செட்லெட் கோல்ட்மேன் சேஷ் நிறுவனத்திலும் அனுபவம் பெற்றவர்கள்.

“வேலைக்கு ஆள் தேடுவோருக்கும் வேலை தேடுவோருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க இவர்கள் தனி நிறுவனத்தைத் தொடங்கினர். இரு தரப்பாரும் தொடர்பில்லாமல் துண்டு துண்டாகப் பிரிந்து நிற்பதால், இணைப்புப் பாலமாக நாங்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது.

“வேலை தேடும் பலர், வேலை தரும் நிர்வாகிகள் விரும்புவது என்னவென்று தெரியாமல் இருப்பது மட்டுமல்ல, அந்தத் திறமைகளை எப்படி அடைவது என்பதும் தெரியாமல் இருக்கிறார்கள். வேலை தருவோரும் சரி, இப்போதைய படிப்பு எப்படிப்பட்டது, அதை முடித்து வருவோரிடம் என்னென்ன திறமைகள் இருக்கும் என்பது தெரியாமலேயே எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த முதலாளியும் தன்னிடம் புதிதாக வேலைக்குச் சேருபவருக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இல்லை. வரும்போதே எல்லாம் தெரிந்த வித்தகராக இருக்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள்.

“இப்போதைய பொருளாதாரச் சூழலில் வேலைக்குச் சேரும்போதே, அந்த வேலைக்குத் தகுதியானவர்தான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைமையே நிலவுகிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் எங்கள் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

“சிஸ்கோ, சேப்வே, ஏர்பிஎன்பி போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய அளவில் குடும்பங்களே நடத்தும் நிறுவனங்களும் தங்களிடமிருக்கும் வேலைவாய்ப்பு என்ன என்பதை எங்களுக்குத் தெரிவிக்கிறார்கள். நாங்கள் உடனே அந்த வேலைக்குத் தேவைப்படும் தகுதிகள் என்ன என்று வரைமுறை செய்து அதற்கேற்ப எழுத்துத் தேர்வுகளுக்கும் காணொளித் தேர்வுகளுக்கும் களம் அமைக்கிறோம். பிறகு, வேலை தேடும் இளைஞர்களுக்கு அந்தத் தேர்வுகளை நடத்தி, அவர்களுடைய குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம். வேலைக்குத் தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் உத்திகளையும் இதர பயிற்சிகளையும் அளிக்கிறோம். நல்ல முறையில் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுகிறவர்களை அந்தந்த நிறுவனங்களின் நேர்காணலுக்கு அனுப்புகிறோம்.

500-ல் ஒன்று

“எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 50 ஆயிரம் பேர் பதிவுசெய்துகொண்டனர். ஒரு வேலைக்கு 500 பேர் என்று பத்து விதமான வேலைகளுக்கு அவர்க ளைத் தயார்செய்தோம். வேலை தேடுவோர் நிறுவனங்களுக்கு அவர்கள் தங்களைப்பற்றிய சுயவிவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களையும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களில் இவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த சுயவிவரக் குறிப்புகள் அனைத்துமே குப்பைகள் என்றே பல நிறுவனங்களில் உள்ள மனித ஆற்றல் துறை ஊழியர்கள் கருதுகின்றனர். 500 நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பினால், ஏதாவது ஒரு நிறுவனம்தான் அதற்குப் பதில் தருகிறது என்றார் அனுபவம் மிக்க விண்ணப்பதாரர். இது உண்மையாகவும் இருக்கலாம். பல நிறுவனங்களின் வேலைக்குத் தாங்கள் பொருத்தமானவர்களாக இருக்க மாட்டோம் என்று விண்ணப்பதாரர்களே முடிவுசெய்து அசுவாரசிய மாக விண்ணப்பங்களை அனுப்புவதும் நடக்கிறது.”

பயிற்சியும் முயற்சியும்தான் தகுதி

வேலைக்குத் தேடுவோரை எப்படித்தான் தேர்ந்தெடுப்பது? ஹயர்ஆர்ட் நிறுவனம் அதற்கொரு வழிமுறை வைத்திருக்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்தில் அந்த வேலையிலேயே சேர்ந்துவிட்டதாக நடிக்கச் சொல்கிறது. இணையதளத்தில் வரும் தகவல்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய வேலை என்று வைத்துக்கொள்வோம். ஹயர்ஆர்ட் நிறுவனம், விண்ணப்பதாரரை அழைத்து, “சரி, உங்களை அந்த நிறுவனத்தின் விற்பனை மேலாளராகவே நியமித்துவிட்டோம் என்று கற்பனை செய்துகொள்வோம்… இப்போது நாங்கள் தரும் புள்ளிவிவரங்களை எப்படிப் பரிசீலிப்பீர்கள், இவை மேம்பட என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்” என்று கேட்பார்கள். இப்படித்தான் அந்த வேலைக்கு அவர்களைத் தயார் செய்வார்கள்.

சமூக ஊடக மேலாளராக விரும்பினால், டுவிட்டர், ஃபேஸ்புக், பின்டெரஸ்ட், கூகுள், எச்டிஎம்எல், ஆன் பேஜ் எஸ்இஓ கீ வேர்ட் அனாலிசஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் இருக்க வேண்டும். கேன்யி வெஸ்ட் நிறுவனம் இந்த ஃபேஷன் ஆடைகளைப் புதிதாக வடிவமைத்திருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் வாங்க ட்வீட் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும், என்ன வாசகத்தைச் சொல்லி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் என்று ஹயர்ஆர்ட் நிறுவனம் கேட்கும். விண்ணப்பதாரர் அதற்குச் சரியான பதிலைச் சொல்வார். அப்படி முடியாவிட்டால், நிறுவனம் அவருக்கு உணர்த்தி அவரைத் தயார் செய்யும்.

இதைத் தெரிவித்த ஷரேப் ஓர் உதாரணத்தையும் சுட்டிக்காட்டினார். “பார்டர்ஸ் என்ற நிறுவனத்தில் காசாளராகப் பணிபுரிந்தார் ஒரு பெண். தனக்கு எதிர்காலம் இல்லை என்று சிறிது காலத்துக்குப் பிறகு உணர்ந்தார். அவர் தானாகவே எக்செலைக் கற்றுக்கொண்டு தேர்ந்தார். அவர் எங்களிடம் சேர்ந்தபோது எக்செலில் அவருக்குக் கடுமையான பயிற்சிகளை அளித்தோம். ஸ்டான்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களைவிட அவர் சிறந்து விளங்கினார். பிறகு, அதற்கான வேலைவாய்ப்புத் தேர்வில் அவர்தான் முதலிடம் பெற்று உயர் பதவியில் சேர்ந்துவிட்டார். கல்வித் தகுதி என்று பார்த்தால் அவரிடம் ஏதுமி்ல்லை. கடுமையான முயற்சியும் பயிற்சியும்தான் அவரைத் தகுதியுள்ளவராக்கியது.

“வேலைக்குத் தகுதியில்லாதவர் என்று ஒருவர் நிராகரிக்கப்பட இரண்டு காரணங்கள்தான் உள்ளன. உங்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டால், எப்படி உதவிகரமாக இருப்பீர்கள் என்று வேலை தருவோருக்குத் தெளிவாக உணர்த்தத் தவறுகிறீர்கள். அடுத்தது, நீங்கள் பார்க்கப்போகும் வேலைக்கு உங்களுக்கு என்ன திறமைகள் தேவை என்று உங்களுக்கே தெரிவதில்லை. இந்தக் காரணங்களால்தான் வேலை கிடைப்பதில்லை” - ஹயர்ஆர்ட் நிறுவனத்தை நடத்தும் இருவரும் கூறுகின்றனர்.

புதிதாகச் சிந்திப்பவர்கள், தீர்வுகளைக் காண்பவர்கள்தான் உடனுக்குடன் வேலைகளைப் பெறுகிறார்கள். நீங்கள் படித்த படிப்போ, உங்கள் திறமைகளை நீங்கள் வளர்த்துக்கொண்ட முறைகளோ வேலை தருகிறவர்களுக்கு முக்கியமே இல்லை. அவர்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தை முன்னுக்குக் கொண்டுவர, அவர்கள் லாபம் சம்பாதிக்க நீங்கள் எப்படி உதவியாக இருப்பீர்கள் என்பதுதான் அவர்களுடைய அக்கறை என்பதே நாம் பெற வேண்டிய பாடம்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

No comments: