அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்” (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
சிபிஎஸ்இ
ஸ்லெட் தேர்வில் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், நெட் தேர்ச்சி பெறுவோர் தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த மாநிலத்திலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேரும் தகுதியைப் பெறுவார்கள். பி.எச்டி. பட்டம் பெற்றிருந்தால் நெட், ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை.
தேசிய அளவிலான “நெட்” தகுதித்தேர்வு ஆண்டுக்கு இரண்டு தடவை அதாவது ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வரையிலும் நெட் தேர்வினைப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)தான் நடத்தி வந்தது. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வில் இருந்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இத்தேர்வை நடத்தவுள்ளது.
வயது வரம்பு
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வெழுதலாம். (அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வு சிஎஸ்ஐஆர் மூலம் தனியே நடத்தப்படுகிறது). முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்போரும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நெட் தேர்வில் உதவி பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், ஜெஆர்எப் எனப்படும் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் தகுதிக்கு வயது வரம்பு 28 ஆகும். இதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.
மூன்று தேர்வுகள்
நெட் தேர்வு, 3 துணைத் தேர்வுகளை உள்ளடக்கியது ஆகும். மூன்று தேர்வுகளுமே அப்ஜெக்டிவ் முறையிலானதுதான். முதல் தேர்வில் விண்ணப்பதாரரின் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைச் சோதிக்கும் வகையில் 60 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் பிடித்தமான ஏதேனும் 50 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். 2-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 50 கேள்விகள் கேட்டிருப்பார்கள். 3-வது தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 75 வினாக்கள் இடம்பெற்றிருக்கும். முதல் இரு தேர்வுகளுக்கும் தலா ஒன்றே கால் மணி நேரம், மதிப்பெண்ணும் தலா 100. மூன்றாவது தேர்வுக்கு இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள். ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டியது முக்கியம்.
கடைசி நாள்
இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பினைச் சிபிஎஸ்இ வெளியிட்டிருக்கிறது. தகுதியுடைய முதுகலை பட்டதாரிகள் cbsenet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை ஆன்லைனில் அல்லது வங்கிச் செலான் மூலம் குறிப்பிட்ட வங்கியில் செலுத்த வேண்டும். அதன் பின்பு பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தைத் தாங்கள் தேர்வுசெய்யும் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment