Blogger Widgets

Total Page visits

Sunday, October 19, 2014

பிள்ளைகளின் பொறுப்பு

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. தங்களது கடமையிலிருந்து பலரும் தவறுகின்றனர். காரணம் இயலாமை. அதனால் ஏற்படும் கோபம்.
அண்மைக்காலமாக குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாகி வருகின்றன. கணவருடன் மோதல், வறுமை, நோயால் அவதி இப்படி பல்வேறு காரணங்கள் அவர்களின் தற்கொலைக்குக் கூறப்படுகின்றன.
எது எப்படி இருந்தாலும், குழந்தைகளைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய பிறகு அவர்களைக் கொல்வது எந்தவிதத்தில் நியாயம்?
தனக்குப் பிறகு பிள்ளைகளைக் கவனிக்க யாருமில்லை என்ற பயத்தில் தற்கொலை முயற்சி, கொலை என மனதைக் கல்லாக்கி சில பெற்றோர் இதுபோன்ற தவறான முடிவைக் கையாளத் தொடங்குகின்றனர்.
இப்படி செய்வது கோழைத்தனமானது என்றாலும், சில நொடிகளில் தங்களை மீறி இத்தகை விபரீத முடிவை எடுத்துவிடுகின்றனர்.
ஒரு சில தாய்மார்கள் இந்த முயற்சியின்போது உயிர்பிழைப்பதும் நிகழ்கிறது. அவ்வாறு பிழைப்பவர்கள் பிள்ளைகளை இழந்து எப்படி வாழ முடியும்?
அவருடைய ஒரு நிமிடத் தவறு வாழ்நாள் முழுவதும் அவரைக் கொன்றுவிடுமே. இதை ஏன் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை? இன்றைய காலகட்டத்தில் இப்படி தவறான முடிவை மேற்கொள்பவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துச் செயல்பட்டால் நன்மையாகவே இருக்கும்.
இறப்பவர்கள் பிள்ளைகளை யாரிடமாவது ஒப்படைக்காமலும், காப்பகங்களில் விடாமலும் அவர்களின் உயிரையும் பறித்துவிடுகின்றனர்.
முதலில் இப்படிப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை அவசியம். அவர்கள் தொடர் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும்போது, வழக்குரைஞர், மனநல மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், காவல் துறை, நீதித் துறை இப்படி சட்டம், சமுதாய நலன் கொண்டவர்களை அணுகலாம்.
அங்கு அவர்களுக்கு உடனடித் தீர்வு கிட்டாவிட்டாலும், குழந்தைகளுக்கான இலவசக் கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்ட பிற தேவைகளுக்கான உத்தரவாதம் கிடைத்துவிடும்.
அதன்பிறகு தனிமையில் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடலாம். சிந்தித்து நல்ல முடிவை எடுக்கலாம்.
அந்தக் காலத்தில், ஆண்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இன்று தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த நிமிடமே விவாகரத்து அல்லது பிரிதல் என்ற முடிவை எடுக்கிறார்கள்.
இதைவிடுத்து கணவரைப் பழிவாங்குவதாக நினைத்து ஏதுமறியாத பிஞ்சு உயிர்களையும் இழப்பதில் என்ன நியாயம் இருக்கிறதோ தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும்போது, பிள்ளைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் சிந்திக்கவும், ஆராயவும் இன்றைய உலகில் சுதந்திரம் உள்ளது.
பெற்றோர் சற்று நிலைதடுமாறினாலும் உடனே தட்டிக் கேட்க பிள்ளைகள் முன்வர வேண்டும். பெற்றோரைத் திருத்த வேண்டும்.
எந்த வீட்டிலாவது பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்போது அதை பிள்ளைகள் கவனமாக கையாள வேண்டும். பெற்றோரிடையே தகராறு ஏற்படும்போது இவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தாயோ, தந்தையோ விபரீத முடிவு எடுக்கப்போகிறார்கள் என தெரிய வந்தால் தயங்காமல் அருகில் இருப்பவர்களிடம் அதைக் கூறிவிடுவது நல்லது.
இப்படி பிள்ளைகள் விழிப்புடன் இருந்தால் தற்கொலை என்கிற தவறான நிகழ்வுகளைத் தடுக்கலாம்.

By எஸ். ரவீந்திரன்,தினமணி 

No comments: