Blogger Widgets

Total Page visits

Sunday, October 19, 2014

கலாசாரம் காப்போம்

ஒரு நாடும், அதன் மக்களும் மதிக்கப்படுவது அந்நாட்டின் உயரிய கலாசாரம் மற்றும் பண்பாட்டினால்தான். இன்று விஞ்ஞான வளர்ச்சியில் செழித்தோங்கியுள்ள அண்டை, அந்நிய நாட்டு மக்கள் எல்லாம் நாகரிகமற்ற நாடோடிகளாக வாழ்ந்து வந்தபோது, இந்தியாவில் மட்டும் மிகச் சிறந்த கலாசார, பண்பாட்டோடு மக்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
இத்தகைய, சிறப்பு மிகுந்த நமது நாட்டில் அந்நிய நாகரிக மோகம் எனும் விஷ விருட்சத்தின் வளர்ச்சியால் நமது கலாசாரம் அழிந்து மண்ணோடு மண்ணாகி வருவது வருத்தத்துக்குரியது.
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு நமது பாரம்பரிய உடையாக வேட்டி, சேலை இருந்து வந்தது. அவர்களின் வருகைக்குப்பின் நமது நடை, உடை, பாவனை என அனைத்திலும் அவர்களின் தாக்கம் அதிகரித்து, இன்று நாம் நம் சுயத்தை இழந்து அவர்களாகவே மாற முயற்சிக்கிறோம்.
நுனி நாக்கு ஆங்கிலம், கோட், சூட், டை என வலம் வரும் நம்மவர்கள், தமிழில் பேசுவதையும், பாரம்பரிய ஆடைகள் அணிவதையும்கூட கௌரவக் குறைவாக எண்ணுகின்றனர்.
ஆனால், அவர்களோ இன்று நமது கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆங்கிலேயப் பெண்கள் சேலை உடுத்தி வருவதும், ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்து வருவதையும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய வாழ்வியல் கோட்பாடு, யோகா, பிராணயாமம், தியானம் என நம் நாட்டின் சிறந்த வாழும் வழிமுறைகளை நம்மைவிட அதிகமாக அவர்கள் பின்பற்றத் தொடங்கி விட்டதைப் பார்க்கும்போது நமக்குச் சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது.
இதில், நாகரிகத்தின் பெயரால் பெண்கள் ஆண்களைப்போல பேண்ட், சர்ட் அணிவதும், ஆண்கள், பெண்களைப்போல முடி வளர்ப்பதும், காதுகளில் தோடு அணுவதும் என யார் ஆண், யார் பெண் எனக் கணிக்க இயலாத அளவிலேயே நமது கலாசாரம் போய்க் கொண்டிருக்கிறது.
வெப்ப பிரதேசமான நமது நாட்டுக்கு பருத்தி ஆடையே சிறந்தது. ஆனால், நாம் குளிர் பிரசேதசங்கில் பயன்படுத்தும் கோட், சூட் அணிந்து வருகிறோம்.
வெளிநாடுகளில் குளிர்பிரதேசத்தில் தங்களது உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் அருந்தும் மதுவை, இங்கே நாமும் அருந்தி போதை தலைக்கேறி சாலைகளில் உருள்வதைக் காணமுடிகிறது.
மேலும், இந்த மோகம், ஆடை, அணிகலனோடு நின்றுவிடாமல், நடன அரங்குகளில் ஆணும், பெண்ணும் இணைந்து குடித்து, கும்மாளமிட்டுவது, திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தல், ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளுதல் என புதுப்புது கலாசாரத்தில் புகுந்து, சமுதாயக் கட்டமைப்பைச் சீர்குலைத்து, குழப்பங்களை உருவாக்கி, சமூக சீர்கேடுகளுக்குத்தான் வழிவகுக்கிறோம்.
இதற்கு திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், பல்வேறு ஊடகங்களும் துணை நிற்கின்றன. மாறி வரும் நாகரிகத்துக்குகேற்ப தாங்களும் மாற வேண்டும் என சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
உணவு விஷயத்தில் இந்த நாகரிக மோகம் மிக மோசமாக இருக்கிறது. உடலுக்கு வலிமையையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் கம்பு, கேள்வரகு, தினை உள்ளிட்ட சத்தான் உணவுப் பொருள்களை விட்டுவிட்டு, நாம் வெகுகாலத்துக்கு முன்பே அரிசி சாதத்துக்கு மாறிவிட்டோம்.
இன்று அதுவும்போய், பிரட் டோஸ்ட், பீட்சா, பர்கர் என பல்வேறு வாயிலேயே நுழையாத பெயருள்ள அரைகுறையாக வேகவைத்த, டின்களில் அடைத்த உணவுகளையும், குளிர்பானங்களையும் உண்டும், பருகியும் நமது உடலையும் குப்பைத் தொட்டியாக மாற்றி வருகிறோம்.
இதில் பெண்கள் "சைஸ் ஜீரோ' என்றழைக்கப்படும் மிக மெலிந்த உடல்வாகைப் பெறவேண்டுமென்பதற்காக சரியாக உணவு உண்ணாமலும், சில நேரங்களில் பட்டினி கிடந்தும் தங்கள் உடல் நலத்தைச் சீரழித்துக் கொள்கின்றனர்.
நமது கலாசாரம், நம்மை உணவு, உடை, ஆரோக்கியம், நல்வாழ்வு என அனைத்து விஷயத்திலும் முழுக் கவனம் செலுத்தி, நம்மை சிறப்புற வாழச் செய்தது.
ஆனால், நாம் நமது கலாசாரத்துக்கு கல்லறை கட்டிவிட்டு, இப்போது நமக்கு நாமே தீங்கிழைத்து வாழ்ந்து வருகிறோம்.
உண்மையான கலாசாரம் என்பது ஒழுக்கமான வாழ்க்கையும், அண்டை அயலாருடன் இணக்கமான உறவும், முதியோரை மதித்தலும், குழந்தைகளை நேசித்தலும் அனைவரிடமும் அன்பு செலுத்துதலுமே என்பதை இந்த நாகரிக சமுதாயம் மறந்துவிட்டதே!

By இராம. பரணீதரன்,தினமணி 

No comments: