Blogger Widgets

Total Page visits

Saturday, October 4, 2014

தப்பு செய்கிறதா தமிழ் சினிமா?

ஓர் ஆட்டோ வாசகம்: நீ வாழ பிறரைக் கெடுக்காதே. சற்றே திரும்பிப் பார்த்தால் இடதுபுறம் தெரியும் சுவரில் ஒட்டப்பட்டிருக்கிறது சதுரங்க வேட்டை வெற்றிகரமான 10- ம் நாள் போஸ்டர், ஏமாறாதே...ஏமாற்றாதே கேப்ஷனுடன். ஏமாற ஒருவன் தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை ஏமாற்றுவதில் தப்பில்லை என்பதை அனுதினமும் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துகொண்டிருக்கும் மக்களிடம் அதன் நெளிவு சுளிவுகளுடன் கொண்டு சேர்க்கும் படம் பேசப்படுகிறது.  
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் இறுதியில் தர்மம் வெல்லும். இது நமக்கு வழங்கப்பட்ட பாலபாடம். தர்மம் வெல்லும் என்பதெல்லாம் போலீஸ் விஜயகாந்த் சுவரில் கால் வைத்து சுற்றி அடியாட்களை அடித்த காலம். இப்போது சூது கவ்வும். அவ்வளவுதான். 
 
நான் என்பது  சுயநலம். நாம் என்பதே பொதுநலம். நாலு பேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் சரிதான் என்று நாயகன் பேசிய வசனத்தை இன்று வேறொரு நாயகன் வேறு மாதிரிப் பேசுகிறான். தப்பை நீ சரியாய் செய்தால் தப்பு இல்லை என்கிறான். இப்போது நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்கிற நீதிபோதனைகளுக்கெல்லாம் தமிழ் சினிமாவில் இடமில்லை. அது போகோ சேனலின் சோட்டாபீம் வாழும் டோலக்பூர் நகரில் மட்டும் மிச்சமிருக்கிறது. கைதட்டி ரசிக்கும் குழந்தைகள் போகோ சேனல் மட்டும் பார்ப்பதில்லை, பிற சேனல்களையும் பார்க்கிறார்கள். உள்ளங்கையில் உலகம் வைத்து நடைபோடும் இன்றைய தலைமுறை எதை கற்றுக்கொள்கிறது. 
 
உருவாக்கத்தில் மிரட்டல், திரைக்கதை அட்டகாசம் எல்லாம் ஓ.கே. தமிழ் சினிமா தன் அடுத்த கட்டத்தை அடைகிறது என்ற உற்சாக தோள் தட்டலுடன் பல விருதுகளைப் பெற்றுக்கொள்ளும் இந்திய அளவில் பேசப்படும் படைப்புகள் தரும் இயக்குநர்கள் தங்கள் படைப்புகள் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள். ' நாங்கள் ஒன்றும் உலகில் நடக்காத ஒன்றை சொல்லவில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் ப்ரச்னைகளைத்தான் பேசுகிறோம்' என்னும் இயக்குநர்களே...எல்லாம் சரிதான். ஆனால் நாம் தவறான உலகில் வாழ்கிறோம் என்பதான பிம்பத்தை உங்கள் படங்கள் இன்றைய தலைமுறைக்கு வழங்குகிறது என்பதை உணர்கிறீகளா? 
 
 
நான் ஒருவன் மிகச்சரியாய் இருப்பதால் இந்த உலகம் சுபிட்சமடையப் போவதில்லை, எனவே நான் நன்றாக இருக்க தவறுகள் புரிகிறேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்' என்னும் 'நான்' படத்தின் கதாநாயகன் நமக்கு சொல்வது என்ன? கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். இந்த உலகத்தினை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி வாழலாம் என்பதைத்தானே. 
 
கேமரா. இசை, நடிப்பு, வசனம். திரைக்கதை என்று எல்லா இடங்களிலும் டிஸ்டிங்ஷன் தட்டிய ஆரண்ய காண்டமும் கடைசியில் எது தேவையோ அதுவே தர்மம் என்று பல கொலைகளுடன் மனிதர்களின் துரோகத்தினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது. நாம் கற்பனை செய்ய முடியாத உலகுக்குள் நம்மைக் கொண்டு சென்று பயமுறுத்தி ரசிக்க வைத்த பீட்ஸாவும் இறுதியில் இதுவே சொல்கிறது.
 
 
 
சினிமா பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை...அதுபோல் சினிமா பார்த்து யாரும் திருந்தவும் போவதில்லை என்றெல்லாம் மொட்டை சமாதானம் சொல்லி விலக முடியாது இயக்குநர்களே... நூறாவது நாள் படம் பார்த்துதான் நான் 9 கொலைகளையும் செய்தேன் என்ற ஜெயப்ரகாஷ் நம்மில் ஒருவனாய் வாழ்ந்து வந்தவன்தான். 'நான் ஏமாறவில்லை. அவன் என்னை ஏமாற்ற ஒரு சந்தர்ப்பம் தந்தேன்.' என்பதெல்லாம் ரசிக்க நன்றாக இருக்கும். நிஜமாய் ஏமாந்தவனின் துயரத்தினை ஒருபோதும் ஆற்றாது. கெட்டவன் இறுதியில் அழிவான். நல்லவன் வாழ்வான் என்ற ஒன்லைன் ஸ்டோரிக்கு ஏகப்பட்ட கோடிகளை செலவழித்து கடைசியில் கருத்து சொல்லும் ஷங்கர் போன்றவர்கள். சொல்லிவிட்டுப் போகட்டுமே. அதனால் என்ன?
 
- கணேசகுமாரன்.    
-நன்றி சினிமா விகடன் 

No comments: