ஏழு ஐபிஎல்களில் ஆறு முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற அணி. ஏழாவதில் செமி பைனல் வரை வந்த அணி. இரண்டு முறை கோப்பையை வென்ற அணி. ‘சேம்பியன்ஸ் கோப்பை’யை இரண்டு முறை அள்ளிய அணி. நம்பர் ஒன் அணி என்று போட்டியாளர்களால் கூட போற்றப்படும் அணி. நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரை கண்டு குதூகலம் கொண்டு விசில் போடும் அணி நம்மூர் சென்னை சூப்பர் கிங்க்ஸ்!

இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கிரிக்கெட்டை விடுங்கள். அதை மற்ற டீம்கள் கற்றுக் கொள்ளட்டும். தொலைநோக்கு டீமிடம் நாம் தொழில் ரகசியம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் பிளேயர்களிடம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொள்வோம். விசில் போட வைப்பவர்களிடம் விஷயங்களைப் புரிந்துகொள்வோம்.

அடிப்படை ரகசியம்

20-20 ஓவர் ஆட்டமே ஒரு லாட்டரி. இன்று ஒரு கோடி வென்றவர் நாளை தெருக் கோடியில் கிடப்பார். இன்று சிக்ஸர் சிக்ஸராய் அடிப்பவர் நாளை சிங்கி அடிப்பார். ஒரு முறை விக்கெட் விக்கெட்டாய் எடுப்பவர் மறு முறை பக்கெட் பக்கெட்டாய் ரன்களை வாரி இறைப்பார். கன்சிஸ்டன்ஸி இம்மி அளவு கூட இல்லாத அணிகள் உள்ள ஆட்டம் இது. இதில் கன்ஸிஸ்டண்டாய் திகழ திறமை மட்டும் போதாது. ஆதார டீம் கல்ச்சர் அவசியம். கம்பெனியோ, கிரிக்கெட் டீமோ, பிரத்யேக கலாச்சாரம் வேண்டும். சிஎஸ்கே வெற்றியின் அடிப்படை ரகசியம் அதன் மாறாத கலாச்சாரம் தான்.

டீம் செலக்‌ஷன் முதலே இது முழுமையாய் பேணப்படுகிறது. யோசித்துப் பாருங்கள். மற்ற டீம்களில் இன்று ஆடியவர் நாளை வேறு டீமில் இருப்பார். எங்கு ஆடுகிறோம், யாருக்காக ஆடுகிறோம் என்பதே மாட்ச் அன்று மற்றவரிடம் விசாரித்துதான் பல பிளேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்!

குழு உணர்வு

ஆனால் சிஎஸ்கே அப்படியல்ல. இதன் பிரதான பிளேயர்கள் முதல் வருடம் முதல் மாறவே இல்லை. ஒரே டீமில் ஒற்றுமையாய் பல வருடம் சேர்ந்திருப்பதால் தான் டீமிற்குள் சிஎஸ்கே என்ற பிரத்யேக கலாச்சாரம் திகழ்கிறது. ஒருவருக்கொருவர் சேர்ந்து வெற்றி பெறத் தேவையான டீம் ஸ்பிரிட் அபரிமிதமாக இருக்கிறது.

சிஎஸ்கே கோச் ‘ஸ்டீஃபன் பிளெமிங்’ கூறினார். ‘நாங்கள் ஏலத்தில் பிளேயர்களை தேர்வு செய்யும் போது திறமையை விட சிஎஸ்கே கலாச்சாரத்துக்கு சரியாக வருவாரா என்று பார்க்கிறோம். அதனால் திறமை இருந்தும் சிலரை தேர்வு செய்வதில்லை’. கம்பெனிகளில் மனித வள மேம்பாட்டு நிபுணர்கள் அங்கீகரிக்கும் அருமையான அணுகுமுறை இது. அதனாலேயே ஊர் பெயர் தெரியாத பிளேயராக இருந்தாலும் திறமையும் சிஎஸ்கே கலாச்சாரத்துக்கு ஏற்றவர் என்றால் தேர்வு செய்யப்படுகிறார்கள். ‘மோஹித் ஷர்மா’, ‘பவன் நெகி’ இதற்கு உதாரணங்கள்.

முதலில் நேர்மை, பிறகு வேலை

உலகப் புகழ் பெற்ற விளம்பர மேதை ‘டேவிட் ஒகில்வி’ கூறினார்: ‘நேர்மையானவர்களா என்று மட்டும் பார்த்து வேலைக்கு ஆட்களை எடு. விளம்பர கலையை பிறகு கற்றுக் கொடு.’ இதை சிரமேற் கொண்டு செய்யும் அணி சிஎஸ்கே. இதனால் சிஎஸ்கே பிளேயர்களிடம் அழகான புரிதல் நிலவுவதைப் பார்க்கலாம். ஒருவர் வெற்றியில் மற்றவர் பங்கேற்று மகிழ்வதைக் கவனிக்கலாம். இதை சிஎஸ்கேவில் மட்டுமே காண முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

மகிழ்ச்சியான மன நிலை

சிஎஸ்கே கலாச்சாரத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிலவும் மகிழ்ச்சியான மனநிலை. செய்யும் எதையும் மனமுவந்து மகிழ்ச்சியுடன் செய்தால் எந்த செயலும் சக்சஸ்தான். கிரிக்கெட்டை அனுபவித்து ஆடு என்பது சிஎஸ்கே கொள்கை. என்ன டென்ஷன் சூழ்நிலையிலும் சிஎஸ்கே கலங்கி பார்க்க முடியாது. இறுதி போட்டி அன்றும் டீம் குழுமி சொல்வது ஒன்றையே: ‘இது இன்னொரு நாள் மட்டுமே. சிறந்ததை தருவோம். வருவதை ஏற்போம்’.

மற்ற டீம்கள் எதிராளி விக்கெட்டை வீழ்த்தினால், சிக்ஸர் அடித்தால் காணாததைக் கண்டது போல் கும்மாளம் போடுவார்கள். சிஎஸ்கே இதற்கு நேர் எதிர். விக்கெட் எடுத்தால் ‘ஓகே’. சிக்ஸர் அடித்தால் ‘பலே’. அதோடு சரி. மாட்சில் வெற்றி பெறுவதே முக்கியம், கோப்பையை வெல்வது அதை விட முக்கியம் என்பதை உணர்கிறார்கள். கோப்பையை வென்ற பிறகே சிஎஸ்கே டீம் க்ரவுண்டுக்கு ஓடி வந்து கட்டிப் பிடித்து, தட்டிக் கொடுத்து கொண்டாடுவதை பார்க்க முடியும்.

பல கம்பெனிகளில் ஒரு மாதம் சேல்ஸ் டார்கெட்டை அடைந்துவிட்டால் ஆஹோ ஓஹோ என்று கொண்டாடுவார்கள். இது தப்பாட்டம். ஆண்டு இலக்கை அடைந்த பின் சந்தோஷப்படுங்கள். விஷனை அடைந்தவுடன் கொண்டாடுங்கள்.

அதே போல் சின்ன சின்ன தோல்விகளாலும் சிஎஸ்கே மனம் தளர்வதில்லை. ``லூஸ் தி பாட்டிள், பட் வின் தி வார்’’. ஒரு மாதம் சேல்ஸ் குறைகிறதே என்று மனம் தளர்ந்தால், உடல் தளரும். ஊழியர் தளர்வார். உத்வேகம் தளர்ந்துவிடும்.

பாலிடிக்ஸ்

கம்பெனி விழ இன்னொரு ரீசன் பாலிடிக்ஸ். ‘நான் பெரியவனா நீ பெரியவனா’ என்ற சண்டை. ‘நீ என்ன சொல்லி நான் என்ன கேட்பது’ என்ற ஈகோ. இதனால் சிறந்த உத்திகள் அமைக்க முடிவதில்லை. அமைத்தாலும் செயல்படுத்த முடிவதில்லை.

இதுவும் சிஎஸ்கேவில் இல்லை. இத்தனைக்கும் மூன்று சர்வதேச காப்டன் உள்ள அணி இது. தென் ஆப்ரிக்க காப்டன் ‘ஃபேஃப் டூப்ளேசி’, ‘ நியூஸிலாந்து காப்டன் ‘ப்ரெண்டன் மெக்கல்லம்’, ‘மேற்கு இந்திய தீவுகள்’ காப்டன் ‘ட்வெயின் ப்ராவோ’. டீம் மீட்டிங்கில் இவர்களும் பங்கு கொள்கிறார்கள். ஐடியா தருகிறார்கள். ஆனால் காப்டன் ‘தோனி’ முடிவுக்கு கட்டுப்படுகிறார்கள். அதனால் சிஎஸ்கேவில் ஐடியாக்களுக்கு பஞ்சமில்லை. பாலிடிக்ஸ் கொஞ்சமுமில்லை!

தலைமை அவசியம்

கம்பெனி வளர திறமையான, தெளிவான, குழப்பமில்லாத தலைமையும் தேவை. சீஇஓ இஸ் தி காப்டன் ஆஃப் தி ஷிப். இதில் சென்னை சூப்பர்…….கிங்! எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காத, எந்த சூழ்நிலையிலும் கலங்காத, என்ன ஆனாலும் அசராத ‘மஹேந்திர சிங் தோனி’ சிஎஸ்கேயின் பலம். அவருக்கு உதவும் கோச் ‘ஸ்டீஃபன் பிளெமிங்’, பவுலிங் கோச் ‘ஏண்டி பிக்கெல்’, ஃபீல்டிங் கோச் ‘ஸ்டீவ் ரிக்ஸன்’. இவர்கள் அவரவர் துறையில் ஜாம்பவான்கள். ஆனால் திறமையை விட பெரியது இவர்கள் குணம். சிஎஸ்கே வெற்றி பெற்று கொண்டாடும் போது பின்னால் நின்று மகிழ்வார்கள். வென்றது டீம். அவர்களுக்கு உதவவே நாங்கள்’ என்பது போல். கம்பெனிநிர்வாகம் கற்க வேண்டிய இன்னொரு பாடம் இது.

கம்பெனியில் திறமையானவர் இருக்கலாம். அவர்களை உத்வேகத்துடன் உழைக்க தேவை பரந்த கலாச்சாரமும் சிறந்த தலைமையும். திறமை இருந்தால் மட்டும் போறாது. சிஎஸ்கேவில் ஆடி வேறு அணிக்கு சென்றவர் அங்கு சோபிக்கவில்லையே. உதாரணம் ‘முரளி விஜய்’, ‘மைக்கேல் ஹஸ்ஸி’. மற்ற டீமில் சுமாராய் ஆடி சிஎஸ்கே வந்து சிறப்பாய் ஆடுகிறார்களே. உதாரணம் ‘ட்வெயின் ப்ராவோ’.

நேர்மைக்கு பரிசு

கடுமையாக ஆடினாலும் நேர்மையாய் ஆடுகிறது சிஎஸ்கே. ‘ஃபேர் பிளே’ பரிசையும் தட்டிச் செல்கிறது. லாபத்துக்கு இயங்கினாலும் செய்யும் தொழிலை நேர்மையாக, நியாயமாக செய்யுங்கள் என்று கம்பெனிகளுக்கு கற்றுத் தருகிறது.

சிஎஸ்கே செய்த ஒன்றை கம்பெனிகள் செய்யாமல் இருப்பதும் முக்கியம். டீமோ, கம்பெனியோ திறமையான ஃப்ரொஃபெஷனல்ஸ் தான் நடத்தவேண்டும். ஓனர் குடும்பம் உள்ளே நுழைந்தால் பிரச்சினையும் உள்ளே நுழையும்!

‘சிறப்பாய் தேர்வு செய்யப்பட்டு, சூப்பராய் நேர்படுத்தப்பட்டு, சிறப்பாய் நடத்தப்படும், சிறந்த அணி சிஎஸ்கே’ என்று ‘ஹர்ஷா போக்லே’ கூறினார். அவர்களைப் போல் நடந்தால் உங்கள் கம்பெனியும் ஒரு சிஎஸ்கே தான்!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி,தி இந்து:
satheeshkrishnamurthy@gmail.com