Blogger Widgets

Total Page visits

Saturday, October 25, 2014

பெற்றோரும் வளர்ப்போரும்

உங்களுடைய பிள்ளைகள் உங்கள் வழியாக வந்தவர்கள் தானே தவிர, அவர்கள் உங்களுடையவர்கள் அல்ல' என்றார் பெருங்கவிஞர் கலீல் ஜிப்ரான். நமது பிள்ளைகளின் சிந்தனைகள் நமது சிந்தனைகளைக் காட்டிலும் சிறந்தவையாக இருக்கும். எனவே, நமது பழைய சிந்தனைகளால் அவர்களைப் பின்னுக்கு இழுக்காமல் சுயமான முடிவுகளை எடுப்பதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே அந்த கவிதைக்கான விளக்கம். இது அறிவியல் பூர்வமான ஒரு பார்வை.
ஆனால், இன்றைய நமது சமூகத்தில் பிள்ளைகளுக்கு நேர்ந்திருக்கும் பெருந்துயரம் என்னவென்றால், அவர்களின் சிந்தனைகளை எங்கெங்கோ இருந்து யார் யாரோ வடிவமைக்கிறார்கள் என்பதும், அதன் விளைவாக அவர்கள் சுயமற்றுப் போகிறார்கள் என்பதும்தான்.
இன்றைய அதிநவீனத் தகவல் தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் நம் பிள்ளைகளை எந்த அளவுக்குச் சமூகத்துடன் இறுகப் பிணைத்திருக்கிறதோ அந்த அளவுக்கு அவரவர்களின் குடும்பங்களில் இருந்து அவர்களைப் பிரித்தும் வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தார்கள், உடை கொடுத்தார்கள், நல்ல பண்புகளைக் கற்றுக் கொடுத்தார்கள், பள்ளிகளில் சேர்த்துக் கல்வியைக் கொடுத்தார்கள்.
இப்போதெல்லாம் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குப் பணம் மட்டுமே கொடுக்கிறார்கள். பிள்ளைகளும் பணத்தை மட்டுமே கேட்கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவு, உடை, தகவல் தொடர்புச் சாதனங்கள், பொழுதுபோக்குக் கூறுகள் என எல்லாவற்றையும் வாங்குகிறார்கள். பெற்றேர்களிடம் இருந்து எவ்வகையான அறிவுரைகளையும் அவர்கள் விரும்புவதில்லை.
இன்றைய பிள்ளைகள் எதை எதையெல்லாம் எந்த அளவுக்கு நுகர வேண்டும் என்பதை பெற்றவர்கள் அல்ல, எங்கெங்கோ இருக்கும் மற்றவர்கள்தான் தீர்மானிக்கிறர்கள். இன்றைய பிள்ளைகள், எத்தகைய இருசக்கர வாகனங்களை வாங்கி, அதை எந்த அளவு வேகத்தில் ஓட்டவேண்டும் என்பதை தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. அவர்களது நண்பர்கள் தீர்மானிக்கிறார்கள்.
அவர்கள் எத்தகைய உடைகளை அணியவேண்டும், எப்படி அணிய வேண்டும் என்பதெல்லாம் கூட ஊடக விளம்பரங்களாலும், நண்பர்களாலும், திரைப்படங்களாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றன.
எத்தகைய உணவு வகைகளை எங்கெங்கே இருந்து எந்தெந்த விலைக்கு வாங்கி உண்ண வேண்டும் என்பதெல்லாம்கூட வணிகக் கூச்சல்களால் தீர்மானிக்கப்படுபவைதான்.
தன்னுடைய ஒரு பிள்ளையை நெறிப்படுத்த முடியாமல் பெற்றோர்கள் இன்றைக்கு திணறும் நிலையில், ஒரே ஒரு விளம்பரத்தால் ஓராயிரம் பிள்ளைகளை, அந்தப் பிள்ளைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாத யார் யாரோ வளைத்து வழிக்குக் கொண்டு வந்து தங்களது வணிகங்களைச் செழுமைப்படுத்திக் கொள்கின்றனர்.
இருசக்கர வாகனத்தைக் கையாளும்போது போக்குவரத்து நெரிசல், வேகத்தடைகள், மேடுபள்ளங்கள், முறையற்ற குறுக்கீடுகள் பற்றியெல்லாம் தன் மகனுக்குச் சொல்லி எச்சரிக்கை செய்யும் ஒரு தந்தை, புதிய வருகையான இருசக்கர வாகனம் ஒன்று ஒரே சக்கரத்தில் பின்னணி இசையோடு சாகசமாகச் சீறிப்பாய்கிற விளம்பரத்தின் முன்பாக பரிதாபமாகத் தோற்றுப் போகிறார்.
அலைபேசிகளில் பேசுவதற்கும், அவற்றில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டுள்ள வசதிகளைத் தெரிந்து கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்வதற்கும் பழக்கப்பட்டுப்போன இன்றைய பிள்ளைகள், தங்களது வீட்டில் இருக்கவேண்டிய நேரங்களில்கூட மனதளவில் எங்கேயோ யாருடனோ சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யார் யாருடனோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையோருக்கு குடும்ப உறவுகளின் முகம் பார்த்து உரையாடுகிற பண்பும் பழக்கமும் அருகிக் கொண்டேயிருக்கின்றன.
மிதிவண்டி என்பது எந்த அளவுக்குக் கையாள்வதற்குப் பாதுகாப்பானது. சுற்றுச் சூழல் நலனுக்கும், பொருளாதார நலனுக்கும் உகந்தது. உடல் உறுதிக்கும், உடற்பயிற்சிக்கும் எப்படி எப்படியெல்லாம் அது வித்திடுகிறது.
முன்னேறிய நாடுகளில்கூட மிதிவண்டிகள் எத்தகையச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன என்பன போன்ற உண்மைச் செய்திகளை விளம்பரமாகச் சொல்வதற்கு நம்மில் எவரும் தயாராக இல்லை. தப்பித்தவறி யாராவது எங்கேயாவது அப்படிச் சொன்னாலும் பிள்ளைகளிடம் அதெல்லாம் எடுபடுவதில்லை.
ஏனெனில், மிதிவண்டி என்பது ஏழ்மை மற்றும் இயலாமையின் வடிவமாக பிள்ளைகள் மற்றும் நமது சமூகத்தின் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் சீறிப்பாய்கிற, கவர்ச்சிகரமான, விசேஷ அம்சங்களைக் கொண்ட இருசக்கர வாகனங்கள் மட்டும்தான்.
கணிப்பொறி மற்றும் இணையத்தின் பிள்ளைகளாகவே மாற்றப்பட்டுவிட்ட பிள்ளைகளுக்கு சமூகத்தின் பிற கூறுகள் எதுவும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்குத் தென்படுவதெல்லாம், தேவையானதெல்லாம் ஓர் அடி தூரத்தில் இருக்கும் கணிப்பொறித் திரைகள் மட்டுமேயாகும்.
அந்தத் திரையின் வழியாகவே அவர்கள் குழந்தைகள், செடிகள், பறவைகள், மலைகள், கடல் எல்லாவற்றையும் பார்த்துப் பரவசமடைகிறார்கள். இவ்வகையில் உண்மைகளில் இருந்து வெகுதூரம் அவர்கள் விலகிப் போயிருக்கும் இத்தகைய போக்கு, அவர்களுக்கு உரிய மண், மக்கள், மொழி, கலாசாரம், கலைகள் உள்ளிட்டப் பல கூறுகளில் இருந்து தனித்துப் பிரித்தெடுத்து சொந்த மண்ணிலேயே வேரற்றவர்களாக அவர்களை மாற்றியிருக்கிறது.
கோடிக்கணக்கான பிள்ளைகளைக் குறிவைத்து புதிதாக கண்டுபிடித்துக் கடைவிரிக்கப்பட்ட புதிய புதிய நுகர்பொருள்களை, காலப்போக்கில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாகக் கூச்சல்போட்டு அப்பொருள்களின் சந்தையை விரிவுபடுத்திக் கொள்கிற உத்தி பெருமளவில் வெற்றிபெற்றிருக்கிறது.
யாரும் விரும்பிக் கேட்காத ஏதோ ஒன்றை முன்வைத்து, அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டதாக வெளியிடப்படுகிற விளம்பரக் கூச்சல்கள் மட்டுமீறிவிட்டன. பெற்றவர்களிடம் நேரடியாகக் கறக்க முடியாதவற்றை அவர்களது பிள்ளைகளின் வாயிலாகக் கறந்துவிடுகிற நுட்பமான வணிக உத்தி நமது சமூகத்தில் எடுபட்டுவிட்டது.
ஒரு சில பெற்றோர்கள் ஆண்டுக்கு ஒரு நாள் தங்களது பணப் பெருமை அல்லது அறியாமையினால் எதையோ வாங்கிக் கொடுத்துத் தங்களது பிள்ளைகளைத் தாற்காலிகமாகக் கெடுக்கலாம்.
ஆனால், அதே செயலைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிற நிரந்தரமான வலிமையான நிறுவனங்களுக்கு முன்பாக அத்தகையப் பெற்றோர்கள் எம்மாத்திரம்?
எந்தப் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு துரித உணவு வகைகள்தான் வேண்டும் என்று உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிடம் மனுக்கொடுத்தார்கள்? எந்தப் பெற்றோர், பொட்டலப் பெருந்தீனிகள் குறித்து கவர்ச்சிகரமான முறையில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று கொடி பிடித்தார்கள்?
எந்தப் பெற்றோர், என் பிள்ளை விரும்புகிற வேகத்துக்கு இந்த இருசக்கர வாகனம் ஈடுகொடுக்காது என்று வருத்தப்பட்டார்கள்? அவ்வளவு ஏன்? எந்தப் பெற்றோர், திரைக் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகளைத் தெளிவாகக் காட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்?
ஊரான்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது முதுமொழி. ஆனால், ஊரான்தான் நமது பிள்ளைகளுக்கு (வேண்டாததையெல்லாம் திணித்து) ஊட்டியும், மது, குளிர்பானங்கள் போன்றவற்றை ஊற்றியும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் என்கிற அமைப்பு கடந்த ஆண்டு சென்னையில் இருக்கும் 400 பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளிடம் நடத்திய ஓர் ஆய்வில், 21.5 சதவீதம் பிள்ளைகளுக்கு, அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகம் கொண்ட பிள்ளைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கழிவு உணவுகளில் (Junk Food) 50 சதவீதம் உப்பும், இனிப்பும் கூடுதலாக இருப்பதும், அவற்றில் பல்வேறு சாயங்களும், ரசாயனங்களும் கலந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நமது பிள்ளைகள் தங்களது தொன்மையான மரபு உணவுகள், மொழி, கலை, இலக்கியம், உறவுமுறைகள், சுற்றுச்சூழல் போன்றவற்றில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கணிப்பொறி, அலைபேசி, இணையம் போன்ற தகவல் தொடர்புச் சாதனங்களோடும், பொருந்தா உணவுப் பொருள்களோடும், மிஞ்சிப்போனால் இருசக்கர வாகனபயணங்களோடும் குறுகிப்போய்க் கிடக்கிறது அவர்களது வாழ்க்கை.
ஏராளமான மரபுப் பெருமைகள் மிக்க நமது வரலாற்றுச் சிறப்புகள் எதையும் கற்க முடியாதவர்களாகவும் கற்க விரும்பாதவர்களாகவும் மாற்றப்பட்டுவிட்ட நமது பிள்ளைகள், தங்களது மண்ணின் மரபுப் பெருமைகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விழுதுகளைப் பிடித்து ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
என்றேனும் ஒருநாள் அவர்கள் தங்கள் பூமியில் கால் பதிக்கும்போது அந்தப் பூமி அவர்களது முன்னோரின் பூமியாக இருக்குமா என்பது ஐயத்திற்குரியதே.

By ஜெயபாஸ்கரன், தினமணி

No comments: