Blogger Widgets

Total Page visits

Saturday, September 28, 2013

குற்றவாளிகள் இருவகை

''எங்கெங்கு காணினும் சக்தியடா...'' என்ற பாரதியின் கூற்றை சற்று மாற்றி ""எங்கெங்கு காணினும் கொள்ளையடா...'' என்றால் தற்காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும். அந்தளவுக்கு குற்றங்கள் மலிந்துவிட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. அவ்வாறு நாட்டில் நிகழும் குற்றங்களை ஆராயும் போது குற்றவாளிகளை கல்வியறிவு பெற்ற குற்றவாளிகள் என்றும், கல்வியறிவில்லாத குற்றவாளிகள் என்றும் வகைப்படுத்த முடிகிறது.

கல்வியறிவற்ற குற்றவாளிகள் பெரும்பாலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கொலை உள்ளிட்ட நேரடியான குற்றச் சம்பவங்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய குற்றங்களை அடையாளம் காண்பதும், தடயங்களை வைத்து குற்றவாளிகளைப் பிடிப்பதும் காவல் துறைக்கு எளிதான காரியமாகும். தவிர, தண்டனை பெற்று திரும்பும் அந்தக் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிப்பதிலும் அவ்வளவு சிரமம் இருப்பதில்லை.

ஆனால், கல்வியறிவு பெற்ற குற்றவாளிகள் மேற்கொள்ளும் குற்றங்களை அடையாளம் காண்பதே காவல் துறைக்கு சவாலாக உள்ளது.

குறிப்பாக, சமீபகாலமாக நடைபெற்று வரும் நெட் பேங்கிங் மோசடி, ஏடிஎம் கொள்ளை, அரசாங்க ஊழல்கள் போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.

இத்தகைய குற்றங்கள் அடையாளம் காணப்பட்டாலும் குற்றம் புரிந்தவர்களை கண்டுபிடிப்பதும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதும் மலையைக் கட்டி இழுப்பதற்குச் சமமான செயலாகும்.

காரணம், கல்வியறிவு பெற்ற அந்தக் குற்றவாளிகளுக்கு சட்ட நுணுக்கங்களும், சட்டத்திலுள்ள ஓட்டைகளும் தெரிந்திருப்பதுடன், அதிகாரம் படைத்தவர்களாக அல்லது அதிகார வரம்பில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பர்களாக உள்ளதால், சட்டத்திலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடிகிறது அல்லது சட்டத்தை வசப்படுத்தி வழக்குகளை காலம் கடத்துவதும் நடந்து வருகிறது.

அந்த வகையில், கல்வியறிவில்லாத குற்றவாளிகள் மேற்கொள்ளும் திருட்டு, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களைவிட கல்வியறிவு பெற்றவர்கள் மேற்கொள்ளும் பொருளாதாரக் குற்றங்களாலேயே மனித வளம் உள்பட நாட்டின் அனைத்து வளங்களும், எதிர்காலமும் சீரழிக்கப்படுகின்றன. இத்தகைய குற்றங்களைக் கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பைக் காவல் துறையிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வது என்பது சரியல்ல.

ஜனநாயக உரிமைப்படி இந்தியக் குடிமகன் ஒருவர் நாட்டின் எந்த மூலையிலும் வியாபாரம், தொழில் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தொழில்புரிபவர்கள் தனது எல்லையை மீறி பிறரின் செல்வத்தைச் சுரண்டும் போது மட்டுமே காவல் துறை உள்ளே வர முடிகிறது. அதுவரை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் அமைப்பாக மட்டுமே காவல் துறை இருக்க வேண்டியுள்ளது.

இதற்கு அண்மையில் நடைபெற்ற ஈமு கோழி பண்ணை மோசடியை உதாரணமாகக் கொள்ளலாம்.

அப்படியென்றால் இத்தகையக் குற்றங்களை எப்படித்தான் தடுப்பது? இந்தக் கேள்விக்கு "வருமுன் காப்போம்' என்ற வாசகமே சிறந்த பதிலாகும்.

கல்வியறிவு பெற்றவர்கள் குற்றங்கள் செய்த பிறகு அவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதைவிட அவர்களை குற்றம் செய்யவிடாமல் தடுப்பதே சாலச் சிறந்ததாகும். இதைச் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு ஆசிரியரிடமும், பெற்றோரிடமுமே உள்ளது.

தங்களது குழந்தைகள் மற்றும் தங்களிடம் படிக்கும் குழந்தைகள் வளர்ந்து நாட்டுக்கு உரிய பங்களிப்பை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்களும், பெற்றோரும் முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வளரும் போதே நாட்டில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், அதனால் மனித வளம் உள்பட நாட்டின் வளங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதன் பின்விளைவுகள் குறித்து மிகத் தெளிவான அறிவை ஏற்படுத்திட வேண்டியது அவசியம்.

தவிர, உழைப்பு, சேமிப்பு, குடும்ப முறைகளின் மகத்துவத்தையும் சொல்லி வளர்ப்பதால் மட்டுமே படித்த குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியும்.

No comments: