ஒருநாள் பவுலர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1
என கைப்பற்றியது. இதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும்
வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று
வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான் பட்டியலில், இந்திய வீரர் விராத் கோஹ்லி (819
புள்ளி) நான்காவது இடம் பிடித்தார். இந்திய கேப்டன் தோனி (741) தனது 7வது
இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர்களை தவிர, மற்ற இந்திய வீரர் யாரும்
"டாப்-10ல்' இடம் பெறவில்லை. இந்திய வீரர் ரெய்னா (654) 16வது இடத்தை
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுடன் (654) பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு
இந்திய வீரர் ஷிகர் தவான் (628) 23வது இடம் பிடித்தார்.
தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (853), டிவிலியர்ஸ் (845), இலங்கையின் சங்ககரா (829) ஆகியோர் இப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (733),
முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் (733) பகிர்ந்து
கொண்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களான அஷ்வின் (621) 18வது இடத்திலும்,
புவனேஷ்வர் குமார் (608) 20 இடத்திலும் உள்ளனர். இவரை தவிர, இந்திய வீரர்
அமித் மிஸ்ரா (570) 30 இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (723), இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் (708) ஆகியோர் இப்பட்டியலில் 3வது, 4வது இடத்தை பிடித்தனர்.
சிறந்த "ஆல் ரவுண்டர்களுக்கான' பட்டியலில், இந்திய வீரர் ரவிந்திர
ஜடேஜாவை (377) பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் (384)
மூன்றாவது இடம் பிடித்தார். இப்பட்டியலில், பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ்
(438), வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (387) ஆகியோர் முதல் இரண்டு இடத்தில்
உள்ளனர்.
No comments:
Post a Comment