Blogger Widgets

Total Page visits

Monday, September 30, 2013

இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு வேலை:தமிழக அரசு வகுக்குமா?

குஜராத், கர்நாடகா, கேரள மாநில அரசுகளைப் போல, இளம் தொழில்நுட்பவியலர்களை ஊக்குவிக்கும், ‘இன்குபேட்டர் சென்டர்களை’ தமிழக அரசு அமைக்க வேண்டும் என, பொறியியல் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஐ.டி., தொழில் துறை:

தமிழகத்தில், 20 அரசு, 29 தனியார் பல்கலைகள், 570 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் இருந்து, ஆண்டுதோறும், 2 லட்சம் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். உலக பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட மந்தநிலை, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட தேக்கம் ஆகியவற்றால், இரண்டு ஆண்டுகளாக, பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. ‘கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்த முன்னணி நிறுவனங்கள், கல்லுாரிகளுக்கு வருவதும் குறைந்து விட்டது.

இதுகுறித்து, முன்னணி ஐ.டி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு புறம் தகவல் தொழில்நுட்பத் துறை, ‘டல்’ அடிக்கிறது. மறுபுறம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளுடன், மாணவர்கள் வருவதும் குறைந்து வருகிறது. இதனால், கேம்பஸ் இன்டர்வியூ நடத்துவதை முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் குறைத்து விட்டன. தனியார் கல்வி நிறுவனங்கள், பி.இ., - பி.டெக்., படிப்பை நடத்தவே விரும்புகின்றன.
‘இன்குபேட்டர்’ சென்டர் :

இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, அதிக பணம் சம்பாதிக்க விரும்புகின்றன. ஆய்வாளர்களை உருவாக்குவதில் ஆர்வம் இல்லை. பி.இ., - பி.டெக்., முடித்த பின், புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உருவாக்கும் திறனை, மாணவர்களிடம் உருவாக்க வேண்டும். இதற்கு, ‘இன்குபேட்டர்’ சென்டர் உதவும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை பி.எஸ்.ஜி கல்லுாரி, திருச்சி என்.ஐ.டி., மதுரை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில், இன்குபேட்டர் சென்டர் என்ற பெயரில், சிறிய அளவிலான பயிற்சி மையங்கள் உள்ளன. இவை, தொழில்நுட்பம் சார்ந்த, இன்குபேட்டர் சென்டராக உருவாக்கப்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள, ஸ்டாண்போர்டு பல்கலை தரத்திற்கு இணையாக, பெங்களூருவில், இன்குபேட்டர் சென்டர் அமைக்க, கர்நாடக அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளித்துள்ளது. கேரளாவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், இன்குபேட்டர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும்...:

ஐதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போதே, இளம் பொறியாளர்களை ஊக்குவிக்க, அறிவியல் நகர் உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு சார்பில், இளம் தொழில்நுட்பவியலர்களை ஊக்குவிக்கும் இன்குபேட்டர் சென்டர் இல்லை.இவற்றை உருவாக்க, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, 5 கோடி ரூபாய் வரை வழங்க தயாராக உள்ளது. தமிழகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தவும், புது கொள்கைகளை வகுத்து, அரசுக்கு சிபாரிசு செய்யவும், ‘தமிழ்நாடு ஸ்டேட் கவுன்சில் பார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி‘ உருவாக்கப்பட்டது.
பாதிக்காத துறை:

இதன் தலைவர், மாநில உயர்கல்விஅமைச்சர். துணைத் தலைவராக, முன்னாள் துணைவேந்தர் பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். 

அவரது பதவிக் காலம் முடிந்து, கடந்த, 2 ஆண்டுகளாகியும், துணைத் தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது. கொள்கைகளை வகுக்க வேண்டிய கவுன்சிலே, வழி நடத்த ஆள் இல்லாமல் தவிக்கிறது.சினிமா துறையினரை கவுரவிக்க, முதல்வர் ஜெயலலிதா, அவ்விழாவில் பங்கேற்றதுடன், தமிழக அரசு சார்பில், 10 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

உலகம் முழுவதும், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், பாதிக்காத துறை, சினிமா துறை தான்.அத்துறையை ஊக்குவித்த அரசு, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும், இளம் தொழில்நுட்பவியலர்களை ஊக்குவிக்க வேண்டும். ‘தமிழகத்தின் முக்கிய நகரங்களில்,இன்குபேட்டர் சென்டர் ஏற்படுத்த வேண்டும்’ என்பது, கல்வியாளர்கள் கருத்து.

No comments: