Blogger Widgets

Total Page visits

Monday, September 16, 2013

மொபைல்போன் கொண்டு வந்தால் இடைநீக்கம்: மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிகளவில் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால், படிப்பில் கவனம் சிதறி அக்கறை குறைகிறது; வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது சில மாணவர்கள் எஸ்.எம்.எஸ். பரிமாற்றம் மற்றும் போனில் உள்ள விளையாட்டுக்களை விளையாடுகின்றனர்.

கடந்த 2009ல் இதுதொடர்பான புகார் எழுந்தபோது, கல்வித்துறை வெளியிட்ட சுற்றிக்கையில், "பள்ளிகளுக்கு மாணவர்கள் மொபைல்போன் கொண்டு வரக்கூடாது; பயன்படுத்தக் கூடாது," என அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்ததால், பள்ளிகளில் மொபைல்போன் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

அதனால், கல்வித்துறை இயக்குனரகம் பள்ளிகளுக்கு மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், "பள்ளியில் மாணவர்கள் மொபைல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர், அதை வாங்கி வைத்திருக்க வேண்டும். மாணவன் அல்லது மாணவி, வகுப்பு முடிந்து செல்லும்போது எச்சரித்து போனை கொடுக்க வேண்டும். 

மீண்டும் அதே மாணவன் அல்லது மாணவி மொபைல்போன் பயன்படுத்தினால், பெற்றோரை அழைத்து கண்டித்து நடவடிக்கை எடுக்கலாம்" என தெரிவித்துள்ளது.

கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மொபைல்போன் வாங்கி தரும் பெற்றோர், அதை பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது என பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மொபைல் போன் பிடிபட்டால், பாதுகாப்பு கருதி வாங்கிக் கொடுத்ததாக, பெற்றோர் கூறுகின்றனர். 

கேமரா, "புளூடூத்" வசதி கொண்ட மொபைல்போன், தவறான பழக்கங்களை கற்றுத்தருகின்றன. மொபைல்போன் வைத்திருக்கும் மாணவர், முதல் முறை எச்சரிக்கப்படுவார். மீண்டும் அதே தவறு செய்தால், உயரதிகாரிகள் அனுமதியுடன் "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

No comments: