Blogger Widgets

Total Page visits

Tuesday, September 3, 2013

சும்மா நச்சுன்னு இருக்கு விமர்சனம்

‘மகாபிரபு’, ‘பகவதி’, ‘ஏய்’ போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களின் இயக்குனர் ‘ஏ’ வெங்கடேஷ், அதிரடி, காமெடி என களமிறங்கியிருக்கும் திரைப்படம்தான் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’. தன் பாணியில் இருந்து விலகி ‘சாக்லெட்’ எனும் காதல் படத்தில் ஜெயித்த வெங்கடேஷ், இந்தகாமெடி படத்தில் கோட்டை விட்டாரா? கோட்டையை பிடித்திருக்கிறாரா? பார்ப்போம்!

25 லட்ச ரூபாய் அவசர, அவசிய தேவை பணத்திற்காக லட்சியம் எதுவுமில்லாமல் புதுக்கோட்‌டையில் இருந்து சென்னை வந்து ஆட்டோ ஓட்டுகிறார் ஹீரோ தமன்! ஓர் நாள் இரவு ஐந்தாறு இளைஞர்கள் துரத்த ஓடிவரும் ஒரு நாயகி விபா, அவரது ஆட்டோ முன் விழுந்து காப்பாற்ற சொல்லி கதறுகிறார்.விடுவாரா ஹீரோ? வித்தியாசமான(!) ஸ்டைலில் துரத்தி வந்தவர்களை விரட்டி அடிக்கிறார். ஆனால், அதில் ஒருவன் விட்டெறிந்த கல், ஹீரோயின் விபாவின் மண்டையை பதம் பார்க்க, வழிந்தோடு்ம் ரத்தத்துடன் அம்மணியை அலேக்காக தூக்கி ஆட்டோவில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப்போய் ‘அட்மிட்’ செய்கிறார். தவிர்க்க இயலாத சூழலில் விபாவின் கணவர் என்னும் இடத்தில் கையெழுத்தும் போடுகிறார். சுயவினைவின்றி விபா படுத்த படுக்கையாக இருக்கிறார். அப்புறம்? அப்புறமென்ன., விஷயம் கேள்விப்பட்டு விபாவின் மலேசிய கோடீஸ்வரர் ‘டத்தோ’ அப்பா ஏ.வெங்கடேஷ், குடும்ப சகிதமாக தனி விமானத்தில் சென்னை வந்து மகளையும் மகளது காதல் கணவனாக நடிக்கும் தமனையும் அவரது நண்பர்களையும் அதே விமானத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு மலேசியா திரும்புகிறார். அங்கு ராஜ வாழ்க்‌கை வாழும் தமன் அண்ட் கோவினர் யார்? என்னும் உண்மை தெரியவந்ததா? இதில் இன்னொரு நாயகி அர்ச்சனாவின் ரோல் என்ன? ‘பவர்’ சீனிவாசனின் பங்கென்ன? ‘பவர்’ என்ன? தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ் போன்றவர்களின் வேலை என்ன? என்பதற்கெல்லாம் காமெடி என்னும் பெயரில் அடித்து, பிடித்து, கடித்து விடை சொல்கிறது ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ படத்தின் வழவழ... கொழ,கொழ... மீதிக்கதை!

தமன் ஹேண்ட்ஸமான ஹீரோவாக தெரிகிறார். ஆனால், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ இப்படி அடுத்தடுத்து படு லோக்கலான கதைகளை தேர்ந்தெடுத்து படுகுழியில் விழுவதை தவிர்ப்பது நலம் பயக்கும்! ப்ளாஷ்பேக்காக இவர் ரஜினியின் ‘பாட்ஷா’ கதையை சொல்வதும், ‘பவர்’ சீனிவாசன் மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ கதையை அளப்பதும், ‘எத்தினி படத்தில...?! இன்னும் நல்லா யோசித்திருக்கலாம் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்! அவர் எங்கே?      யோசிக்க? அவர்தான் கோடீஸ்வர டத்தோவாக தனி ஹெலிகாப்டர்ல பறக்கிறதும், இவர் கீழே நிக்கிறப்போ பேக்-ரவுண்டில் ஹெலிகாப்டர் பறக்கிறதுமா... இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டிருக்கிறாரே பாவம் (நமக்கெல்லாம் வெங்கடேஷ் சார்., ‘அங்காடிதெரு’ அண்ணாச்சி கடை காரியதரிசி கேரக்டருதாங்க கச்சிதம்‌, என்பதை கவனத்தில் கொள்ளவும்‌)!

தமன், தம்பி ராமைய்யா, ஈரோடு மகேஷ், ‘பவர்’ சீனி எல்லோரையும் காட்டிலும் ஹீரோயின்கள் விபா, அர்ச்சனா, இசையமைப்பாளர் அச்சு, ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், படத்தொகுப்பாளர்கள் வி.டி.விஜயன் - என்.கணேஷ்குமார் எல்லோரும் இருந்தும், ஏ.வெங்கடேஷின் எழுத்து இயக்கத்தில் ‘சும்மா நச்சுன்னு இருக்கு’  - ‘சுமாராத்தான்’ இருக்கு!.

No comments: