Blogger Widgets

Total Page visits

Sunday, September 22, 2013

மூடர்கூடம் விமர்சனம்

‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராக நடித்தும் இருக்கும் திரைப்படம்தான் மூடர்கூடம். சிஷ்யருக்காக இந்தப்படத்தை தனது ‘பசங்க’ புரடக்ஷன்ஸ் மூலம் வாங்கி வெளியிட்டும் இருக்கிறார் பாண்டிராஜ் என்பது சிறப்பு!

‘மூடர்கூடம்’ படத்தில் கதை என்று பார்த்தால் பெரிதாக எதுவும் கிடையாது... ‘நான்கு முட்டாள் திருடர்களும், வாழ்க்கையை தொலைத்ததாக சொல்லி வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக துடிக்கும் ஒரு வசதியான குடும்பமும்!’’ என்பது மாதிரியான ‘ஜென்’ குட்டி கதைகள் போன்றதொரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!. ஆனால், இந்த கதையில் ஏகப்பட்ட முன்கதைகள், முழுக்கதைகளை(?) கலந்துகட்டி காமெடியாக கலர்புல்லாக ‘மூடர்கூடம்’  படத்தை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி  இருக்கும் நவீன் ரொம்பவே துணிச்சல்காரர்தான்! ஆமாம் பின்னே, இதுமாதிரி இதுவரை தமிழ் ‌சினிமாவில் சொல்லப்படாத ஒரு புது மாதிரி கதையை தைரியமாக இயக்கி, தரமாக தந்திருப்பதற்கு அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்!

கரடு முரடான முகபாவங்கள், உருவ அமைப்புகள், சில்லறை சேட்டைகளைக் கொண்ட வெள்ளை ராஜாஜ், நவீன் என்னும் நவீன், குபேரன் மற்றும் சென்றாயன் நால்வரும் வெவ்வேறு சில்லறை நோய்களுக்காக போலீஸ் ‘லாக்-அப்’பிற்கு போக, அங்கு நண்பர்களாகின்றனர். நால்வரும் சேர்ந்து, வெளியூருக்கு போக இருக்கும் வெள்‌ளையின் பணக்கார மாமா ஜெ.பி.யின் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி உள்ளே போகின்றனர். தன் பைனான்ஸ் கம்பெனி திவாலாகிவிட்டதாக பொய் கணக்கு காட்டி ‌ஊரைவிட்டு குடும்பத்தோடு ‘எஸ்’ ஆக இருக்கும் ஜெயப்பிரகாஷ், சின்ன டைமிங் மிஸ்டேக்கால், இவர்களிடம் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பப்பா.... அதைத்தான் எத்தனை நகைச்சுவையாக சீன் பை சீன் பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குனர். இயக்குனரின் மூட் தெரிந்து ராஜாஜ், ஓவியா, குபேரன், சென்றாயன், சிந்துரெட்டி, ஜெயப்பிரகாஷ், அனுபமாகுமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. இயக்குனர் நவீனும் நான்கு திருடர்களில் ஒருவராக ‘நச்’சென்று ‘டச்’ செய்கிறார். படத்தின் கதையைவிட படத்தின் பாத்திரங்களுக்கு அதிலும் அந்த விளையாட்டு பொம்மை உள்ளிட்ட பாத்திரங்களுக்கு ‌சொல்லப்படும் முன்கதைகளும் முழு கதை(!)களும்தான் செம ஜோர்!

நடராஜன் சங்கரனின் மிரட்டலான பின்னணி இசையும், டோனிசேனின் பிரமாண்ட ஒளிப்பதிவும் நவீனின் ‘நச்-டச்’ வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்! நவீனின் எழுத்து, இயக்கத்தில் முன்கதை, பின்கதை, முழுக்கதை, கிளைக்கதை என்று ஏகப்பட்ட கதைகள் இடைச்செருகலாக படத்தில் இடம்பெறுவது என்னதான் சுவாரஸ்யம் என்றாலும் படத்தின் நீளத்தை வெகுவாக கூட்டிவிடுவதை மட்டும் இயக்குனர் நினைத்திருந்தால் தவிர்த்து மேலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம். மற்றபடி மனிதர்கள் நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மூடத்தனமாக, முட்டாள்களாக நடந்துகொள்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் ‘மூடர்கூடம்’ தமிழ் சினிமாவில் ‘புதிய பாடம்!’

No comments: