Blogger Widgets

Total Page visits

Saturday, September 14, 2013

பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி!

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, சாதாரண டீக்கடையில், தன் வாழ்க்கைப் பயணத்தை துவங்கியவர். இன்று, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின், முக்கிய கட்சியின், பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

எந்த ஊர்?

குஜராத் மாநிலம், மேஹ்சனா மாவட்டம், வத் நகரில், 1950 செப்டம்பர், 17ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, குஜராத் பல்கலைக் கழகத்தில், அரசியல் அறிவியலில், முதுகலை பட்டம் பெற்றார்.பள்ளிப் பருவத்திலேயே, அகில பாரதிய வித்யா பரிஷத் அமைப்பில் இணைந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட அவர்,பட்டப் படிப்பு முடித்த பின், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், தன்னை இணைத்துக் கொண்டார். தன் சகோதரருடன், டீக்கடை நடத்தி வந்த மோடி, பா.ஜ.,வில், அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றினார். பா.ஜ., கட்சியில், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல் தலைவர் மோடி.

உழைப்பு:

திருமணம் புரியாமல் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிய இவர், பல்வேறு மூத்த தலைவர்களின் கவனத்தை கவர்ந்தார். அதனால், 1995ல், ஐந்து மாநில பொறுப்புகளை கவனிக்கும், கட்சியின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய கட்சித் தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், மோடி தன் பணியை திறம்படச் செய்து, கட்சியில் தன் முக்கியத்துவத்தை நிரூபித்தார். 2001ல், குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, அப்போது, எம்.எல்.ஏ.,வாக இல்லாத மோடி, மேலிடத் தலைவர்களால் நேரடியாக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியில் இவரைப் போன்ற ஏழ்மையான பின்னணி கொண்ட தலைவர் இல்லை. மோடி ஆளும் குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக வகுப்புவாத கலவரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயம், சிறு தொழில் மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சியையே முக்கிய நோக்கமாக கொண்டவர் மோடி.சமூகத்தின் அனைத்து பிரிவினரினரும் வளர்ச்சி அடைய உழைத்து வருகிறார்.மற்ற கட்சிகளைப் போல், போலி மதச்சார்பின்மை பேசி நடிக்கவில்லை.அதே போல், என்றுமே தான் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்துள்ளதாகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் விளம்பரப்படுத்தாதவர் மோடி.அனைவரும் சமம் என்பதே மோடியின் தாரக மந்திரம்.இதன் காரணமாக, யாரையும் சரிகட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் மோடி.

ஹாட்ரிக் வெற்றி:

முதல்வரான பின், கட்சி வளர்ச்சி மட்டுமின்றி, மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்திய மோடி, 2002, 2007 மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், அடுத்தடுத்து, ஹாட்ரிக் வெற்றி பெற்றார். குஜராத் வரலாற்றிலேயே, நீண்ட காலம் முதல்வராக இருக்கும் பெருமையையும் பெற்றுள்ளார். நாட்டு மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள மோடியை, சமூக வலைதளமான, டுவிட்டரில் 16 லட்சத்து, 94 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

விருதுகள்:

குஜராத்தில் கம்ப்யூட்டர் துறையில், இவர் ஏற்படுத்திய வளர்ச்சியின் காரணமாக, கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு, இ - ரத்னா விருதை வழங்கியது. 2009ம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ., பெர்சனாலிட்டி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார். சீனா, சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ள மோடி, அங்கு பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். நாட்டு மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள மோடிக்கு, கட்சியிலும் செல்வாக்கு பெருகியது. ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கட்சியின் உயர் மட்ட பொறுப்புகளில், பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதம், கோவாவில் நடைபெற்ற, கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், நரேந்திர மோடியை, பா.ஜ.,வின், தேசிய தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமித்தார். இந்த அறிவிப்புக்கு, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், அனைத்து தடைகளையும் மீறி, நேற்று, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி நியமிக்கப்பட்டுள்ளார். சாதாரண டீக்கடையில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த மோடி, நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின், பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படும் வகையில் உயர்ந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், அவர் பிரதமராகி மேலும் பெருமை சேர்ப்பார்.

மோடி வந்தால் பா.ஜ., வாய்ப்பு எப்படி?

எதிர்பார்க்கப்பட்டது போலவே, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் பயணத்தை பா.ஜ., இப்போதே தொடங்கி விட்டது. ஏற்கனவே, மத்தியில் 6 ஆண்டு, பா.ஜ., ஆட்சி செய்துள்ளது. பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்தார். அத்வானி, துணைப் பிரதமராக இருந்தார். 2014 தேர்தலுக்கு, புது முகம்; ஆனால், நாட்டில் பல இளைஞர்களின் விருப்ப முகமாக இருக்கும் மோடி, முன்னிறுத்தப்பட்டுள்ளார். மோடி தலைமையில் களமிறங்கும் பா.ஜ., மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருமா; மோடி பிரதமர் ஆவாரா? என்ற பல கேள்விகள், அரசியல் ஆர்வலர்களால் எழுப்பப்படுகின்றன. தேசிய அளவில், பா.ஜ., செல்வாக்கு, வட இந்தியாவில் பசுமை; தென் இந்தியாவில் வறட்சி என்ற நிலை தான். நம்நாட்டில் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, லோக்சபாவுக்கு 543 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 272 எம்.பி., க்களின் ஆதரவு பெறும் கட்சி, ஆட்சிக்கு வரும். காங்., மற்றும் பா.ஜ., மட்டுமே, தேசிய கட்சிகள். இவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இதன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்ற இரண்டு வாய்ப்புகள் தான்.

எத்தனை மாநிலங்களில்பா.ஜ., ஆட்சி

1) குஜராத்
2) மத்திய பிரதேசம்
3) சத்தீஸ்கர்
4) கோவா
5) பஞ்சாப் (கூட்டணி)
6) நாகலாந்து (கூட்டணி)

இதைத் தவிர்த்து, கடந்த காலங்களில் உ.பி., டில்லி, ராஜஸ்தான், அருணாச்சல், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியில் இருந்துள்ளது.

எத்தனை மாநிலங்களில்எதிர்க்கட்சி

1) ராஜஸ்தான்
2) இமாச்சல பிரதேசம்
3) ஜார்க்கண்ட்
4) மகாராஷ்டிரா
5) பீகார்
6) உத்தரகண்ட்
7) டில்லி
இதிலிருந்து பா.ஜ., வுக்கு, வட இந்தியாவில் ஆதரவு இருப்பது தெரிகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆதரவு குறைவு.

ஜெயிக்கப்போவது யாரு?: 

பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி, பா.ஜ., வின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகவும் பதவி வகிக்கிறார். இதனால், தலைவர்களை அனுசரிக்கும் தன்மை, கூட்டணி முடிவு, பிரசார யுக்தி என.. இவர் முன் சவால்கள் உள்ளன. இதை மீறி, மோடி மந்திரம் எந்தளவுக்கு பா.ஜ., வுக்கு ஓட்டுகளை பெற்று தரும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

No comments: