Blogger Widgets

Total Page visits

Monday, September 16, 2013

யுவராஜ் ராஜ்யம்: அசத்தல் சதம் விளாசினார் : இந்தியா ஏ அணி வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, இளம் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில், கேப்டன் யுவராஜ் சிங் சதம் அடித்து கைகொடுக்க, 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது.

மழையால் ஆடுகளத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக போட்டி துவங்குவதில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பாவெல், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

மன்தீப் அரைசதம்:

இந்திய அணிக்கு உன்முக்த் சந்த் (1), ராபின் உத்தப்பா (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த மன்தீப் சிங், கேப்டன் யுவராஜ் சிங் ஜோடி பொறுப்பாக ஆடியது. மில்லர் பந்தில் மன்தீப் சிங் (67) போல்டானார்.

யுவராஜ் அபாரம்:

அடுத்து வந்த யூசுப் பதானுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். மில்லர் வீசிய 35வது ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த இவர், "ஏ' பிரிவு போட்டியில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். 89 பந்தில் 123 ரன்கள் (7 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்த யுவராஜ், பானர் பந்தில் வெளியேறினார்.

யூசுப் அதிரடி:

பின் யூசுப் பதான் தன்பங்கிற்கு அதிரடி காட்டினார். ஆஷ்லே நர்ஸ் வீசிய 37வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்த இவர், 27 பந்தில் அரைசதம் அடித்தார். பானர் வீசிய 42வது ஓவரில் மூன்று சிக்சர் விளாசிய இவர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். இந்திய "ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்தது. யூசுப் பதான் (70 ரன்கள், 32 பந்து, 6 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். 

டியோனரின் ஆறுதல்:

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பந்துவீச்சில் திணறியது. பானர் (16), கேப்டன் பாவெல் (17), கிர்க் எட்வர்ட்ஸ் (19) நிலைக்கவில்லை. யூசுப் பதான் "சுழலில்' பிளட்சர் (29) சிக்கினார். பொறுப்பாக ஆடிய டியோனரின் அரைசதம்(57) அடித்தார். 

நர்ஸ் அரைசதம்:

சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஆஷ்லே நர்ஸ்(57) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணி 39.1 ஓவரில் 235 ரன்களுக்கு "ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி பெங்களூருவில் நாளை நடக்கிறது.


No comments: