சாம்பியன்ஸ் லீக் போட்டியில், கேப்டன் தோனியின் அதிவேக அரைசதம்
கைகொடுக்க, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
டேரன் சமியின் அரைசதம் வீணானது.
ராஞ்சியில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'
தொடருக்கான "பி' பிரிவு லீக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த சென்னை,
ஐதராபாத் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் ஷிகர் தவான்,
"பீல்டிங்' தேர்வு செய்தார்.
ரெய்னா அபாரம்: சென்னை அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி
காத்திருந்தது. ஸ்டைன் "வேகத்தில்' முரளி விஜய் "டக்-அவுட்' ஆனார்.
மைக்கேல் ஹசி (23) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த பத்ரிநாத்
(13) ஏமாற்றினார். பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஜோடி ஆட்டத்தை
கையில் எடுத்துக் கொண்டது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய ரெய்னா,
38வது பந்தில் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 60 ரன்கள்
சேர்த்த போது, ஸ்டைன் பந்தில் ரெய்னா (84 ரன், 57 பந்து, ஒரு சிக்சர், 9
பவுண்டரி) வெளியேறினார்.
தோனி அதிரடி: மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, பெரேரா
வீசிய 18வது ஓவரில் 5 சிக்சர் உட்பட 34 ரன்கள் எடுத்து, 16 பந்தில்
அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அசத்திய இவர், டேரன் சமி வீசிய கடைசி
ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார்.
சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தோனி (63
ரன், 19 பந்து, 8 சிக்சர், ஒரு பவுண்டரி), டுவைன் பிராவோ (6) அவுட்டாகாமல்
இருந்தனர். ஐதராபாத் சார்பில் ஸ்டைன், டுமினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்: சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத்
அணிக்கு பார்த்திவ் படேல், கேப்டன் ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம்
கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த போது, பார்த்திவ் படேல்
(38) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த டுமினி, ரெய்னா பந்தில் "டக்-அவுட்'
ஆனார். பொறுப்பாக ஆடிய ஷிகர் தவான் (48), அஷ்வின் "சுழலில்' அரைசத
வாய்ப்பை இழந்தார். டுவைன் பிராவோ "வேகத்தில்' திசாரா பெரேரா (12), ஆஷிஸ்
ரெட்டி (3) நடையை கட்டினர்.
அபாரமாக ஆடிய டேரன் சமி, ரவிந்திர ஜடேஜா வீசிய 15வது ஓவரில் மூன்று
சிக்சர் விளாசினார். இரண்டு முறை கண்டம் தப்பிய கரண் சர்மா (11), ஜாசன்
ஹோல்டர் பந்தில் சிக்கினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சமி,
24வது பந்தில் அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டன.
மோகித் சர்மா வீசிய 20வது ஓவரில், 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஐதராபாத்
அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஹனுமா
விஹாரி (5), ஸ்டைன் (10) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில்
ஹோல்டர், பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரெய்னா "500'
அபாரமாக ஆடிய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, 84 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் இவர், சாம்பியன்ஸ் லீக் அரங்கில் 500 ரன்களை கடந்த மூன்றாவது
வீரரானார். இதுவரை இவர், 16 போட்டியில் 4 அரைசதம் உட்பட 518 ரன்கள்
எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் டில்லி, நியூ சவுத் வேல்ஸ்
அணிகளுக்காக விளையாடிய டேவிட் வார்னர் (13 போட்டி, 556 ரன்கள், 2 சதம், ஒரு
அரைசதம்) மற்றும் மும்பை, டிரினிடாட் அணிகளுக்காக விளையாடிய போலார்டு (21
போட்டி, 521 ரன்கள், 3 அரைசதம்) உள்ளனர்.
16 பந்தில்
அதிரடியாக ஆடிய சென்னை அணி கேப்டன் தோனி, 16 பந்தில் அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' வரலாற்றில் அதிவேக அரைசதம்
அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக டிரினிடாட் அன்டு டுபாகோ
அணியின் போலார்டு, 2009ல் ஐதராபாத்தில் நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு
எதிராக 18 பந்தில் அரைசதம் அடித்தார்.
இரண்டாவது முறை
மொத்தம் 202 ரன்கள் குவித்த சென்னை அணி, சாம்பியன்ஸ் லீக் அரங்கில்,
இரண்டாவது முறையாக 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்தது. முன்னதாக 2010ல்
செஞ்சுரியனில் நடந்த வயம்பா அணிக்கு (200 ரன்கள்) எதிராக இந்த இலக்கை
எட்டியது. தவிர இம்முறை, 200 அல்லது அதற்கு மேல் ரன் எடுத்த இரண்டாவது அணி
என்ற பெருமை பெற்றது. முன்னதாக, ஒடாகோ வோல்ட்ஸ் அணி 242 ரன்கள்
(எதிர்-பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) எடுத்தது.
பீல்டிங் சொதப்பல்
நேற்று சென்னை அணியின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது. சுலப கேட்ச்
வாய்ப்புகளை சுரேஷ் ரெய்னா, மைக்கேல் ஹசி, ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ
உள்ளிட்டோர் கோட்டைவிட்டனர்.
No comments:
Post a Comment