ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையே மலருவதாகச்  சொல்லப்படும் காதல் என்பதைப் பற்றி, இது நாள் வரை எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது; சொல்லப்பட்டு  விட்டது. மனித இனம், காடுகளிலும்
 மலைகளிலும் விலங்குகளாய் வாழ்ந்து  கொண்டிருந்த புராதன பொதுவுடமைக் 
காலத்தில் காதல் என்பது  எப்படியிருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது நிலைமையே  வேறு. அது அனைத்துத் தரப்பு மனிதர்களுக்கும், மனுஷிகளுக்குமான  கட்டாயப் பாடமாகிவிட்டது. காதல் புரிகிறவர்கள், காதலைப்  புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் எனும் அவசியம் அற்றுப் போய், தான் புரிவதுதான்  காதல், தான் புரிந்துகொண்டதுதான் காதல் என்று பறைசாற்றும்  போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
“நான் உன்னை  உயிருக்குயிராகக் காதலிக்கிறேன்” என்கிற
 எப்போதோ யாருக்கோ எழுதப்பட்ட வசனம்தான்  தற்போதைய தமிழ் காதல் உலகின் தாரக
 மந்திரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.  தாம் கொண்டிருக்கும் காதல் மட்டுமே
 புனிதமானது. அடுத்தவரின் காதலை விடவும்  உயர்ந்தது எனும் எண்ணம் அனைத்துக்
 காதலர்களின் மனத்திலும் நங்கூரம்  பாய்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.
வாழ்க்கையைப் பற்றியும், நடைமுறை  எதார்த்தங்களைப் பற்றியும் இரு மனங்களின் மனோபாவம் பற்றியும் கவலைப்படாமல், வெறும்
  கற்பனைகளையும் கனவுகளையும் மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குவதால் இன்றைய
  காதலர்கள் பரவலாகத் தோல்வியைச் சந்திக்கிறார்கள். வாழ்வின் ஓர் அங்கமாக  
மட்டுமே காதலைப் புரிந்து கொண்டவர்கள் அதில் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை 
 என்பதே நூறு சதவிகிதம் காதல் மயமானதுதான் என்று நம்பியவர்கள் அதில்  
தோல்வியடைகிறார்கள்.
காதல்
 என்பது நெருங்கி வரும்போது முகமூடிகளைப்  பரஸ்பரம் கிழித்துக் கொள்ளும் 
தன்மை கொண்டதாகும். அதனால்தான் தனித்தனி  வீடுகளில் இனிய காதலர்களாக 
வாழ்ந்தவர்கள்,  ஒரே
 வீட்டில் தம்பதிகளாகச் சேரும்போது  தாறுமாறாகித் தகராறு செய்து கொண்டு 
பிரிவதை நாம் நிறையவே காணமுடிகிறது.  உலகப் புகழ் பெற்ற எத்தனையோ காதல் 
ஜோடிகள் ‘பிரிவதற்காகவே’ திருமணம்
 செய்து  கொண்டிருக்கிறார்கள். காவியக் காதலர்களான அம்பிகாபதியும் 
அமராவதியும்  திருமணம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பிரிந்திருப்பார்கள்
 என்று ‘விவாக ரத்து’ பெற்றவர்கள்  வாதிடுவதுண்டு.
காதலில் தெய்வீகக் காதல், புனிதமான
 காதல்  என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே  
திரும்பியிருக்கின்றன என்று சொல்லப்படுவது போலவே எல்லாக் காதல்களும்  
பாலுறவையும் பால் ஈர்ப்பையுமே மையக் கருவாகக் கொண்டு பல்வேறு முகமூடிகளுடன்
  பவனி வருகின்றன. அதில் வெற்றி கிட்டிய பிறகு அதன் போக்கில் ஒரு மந்தமும், சலிப்பும்  மேலிட்டு விடுகிறது. நினைக்கும்போது இனித்த காதல், கிடைக்கும்போது  கசந்து விடுகிறது.
காதல் தோல்வி, காதல் மோசடி, காதல்
 கொலை என்பன போன்ற நிலைகளில் காதல் உலகில்  நிலவுகிற பல்வேறு 
குளறுபடிகளுக்கும் காரணம் அது இங்கே தவறாகப் புரிந்து  
கொள்ளப்பட்டிருப்பதுதான். தூரத்தில் இருந்து கண்ணோடு கண் நோக்கும்போதே  
மலர்ந்துவிடுகிற காதல் நெருங்கிப் பழகும்போது பரஸ்பரம் முகமூடியைக்  
கிழித்துக் கொண்டு கோரமாக வெளிப்பட்டுச் செயலாற்றுகிறது. ஆயிரக்கணக்கான  
திரைப்படங்களாலும், பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களாலும்  நாடகங்களாலும், கவிதைகளாலும்
 காதலைப் பற்றிய கணிப்புகள் இங்கே  தாறுமாறாகப் பரப்பி 
விடப்பட்டிருக்கிறது. அதிலும் இன்றைய பெரும்பாலான  திரைப்படங்கள் காதலையே 
முதுகெலும்பாகக் கொண்டு நடமாடிக் கொண்டிருக்கின்றன.
திரைப்படத் தத்துவங்கள் போலியானவை; பொய்யானவை.
  தமிழ்த் திரைப்படங்களில் ஆண்-பெண் இருவரிடையே காதல் மலருவதற்கான 
காரணங்கள்  மிகவும் அற்பமாகவும் அவலமாகவும் காட்டப்படுகின்றன. நண்பர்களுடன்
 சேர்ந்து  கொண்டு தான் காதலிக்கும் பெண்ணைப் பாட்டுப் பாடி கேலி செய்வது 
முதற் கொண்டு  அவளின் தொப்புளில் ‘ஆம்லெட்’ போடுவது வரை ஏராளமான அசிங்கங்கள் காதலின்  வெளிப்பாடாகக் காட்டப் படுகின்றன. “ஒருத்தனை மனசுல நெனச்சிகிட்டு நான் இன்னொருத்தன் கூட  எப்படி வாழ முடியும்?” என்பதுதான்
 திரைப்படக் காதலிகளின் கவலை தோய்ந்த காதல்  வசனமாக இருக்கிறது. அந்தக் 
கவலையில் துளியளவும் உண்மையில்லை என்பதுதான்  நடைமுறை வாழ்வில் நாம் காணும்
 காட்சிகளாக இருக்கின்றன. தமிழ்த்  திரைப்படங்களின் வாயிலாக, இதுதான் காதல் என்று எதையெதையோ கூவி விற்கிறார்கள்.
சாதி, மதம், இனம், மொழி, பணம்
 போன்ற எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது காதல்  என்று தத்துவம் சொல்லி 
காதலர்களைச் சேர்த்து வைக்கிற வேலையைக் காலங்  காலமாகச் செய்து வருகிற 
இவர்கள், இவையெல்லாம் உங்கள் வாழ்வில் குறுக்கிடும்போதும்  உங்களிடமிருந்தே முளைக்கும் போதும் எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? என்று
 கேள்வி  கேட்பதில்லை. இப்படியெல்லாம் சமாளியுங்கள் என்று பதில் 
சொல்வதுமில்லை.  ஏனெனில் இத்தகைய விவாதங்கள் வியாபாரத்துக்கு உகந்தவை அல்ல 
என்கிற முடிவு  இங்கே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. விரசத்தில் விம்முகிற 
கதாநாயகியின்  மார்புகள்தான் இங்கே காண்பதற்கினிய காதல் காட்சிகளாக 
அடையாளம் காட்டப்பட்டு  வருகிறது.
‘காதல் என்பது  நெருப்பு’, ‘காதல் என்பது இருட்டு’  என்பன போன்று காதலைப் பற்றி எத்தனையோ  பேர் ஏதேதோ புலம்பினார்கள். ஆனால், மார்க்ஸ் மட்டும்தான் ‘காதல் என்பது மனித  நேயம்’ என்று
  தெள்ளத் தெளிவாகச் சொன்னார். அதன்படி ஜென்னியுடன் அவர் வாழ்ந்தும்  
காட்டினார். ஆழ்ந்த மனித நேயத்தின் வெளிப்பாடாக இருவரிடையே காதல்  
மலரும்போது வாழ்க்கை அவர்களைப் புரட்டிப் போடுவதில்லை.  
பிரித்துவிடுவதுமில்லை.
Thanks
Thanks
 
No comments:
Post a Comment