மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார்.
ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடர் வரும்
ஏப்., 3 முதல் மே 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் மும்பை
இந்தியன்ஸ் அணியின், கேப்டனாக கடந்த முறை ஹர்பஜன் சிங் இருந்தார். தற்போது,
இவருக்குப்பதில் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்
பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டுதான், இவர் சர்வதேச
போட்டிகளிலிருந்து, ஓய்வு பெற்றார். இவர், ஏலத்தில் ரூ. 2.12 கோடிக்கு
எடுக்கப்பட்டார். இவருக்கு இந்த பதவி, அணி ஆலோசகர் அனில் கும்ளே,
பயிற்சியாளர் ஜான் ரைட், நட்சத்திர வீரர் சச்சின் ஆகியோரின் பரிந்துரைப்படி
கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கும்ளே கூறுகையில்,"" பாண்டிங், அதிக அனுபவம் கொண்டவர்.
தவிர, இவருக்கு கேப்டன் பதவி கொடுப்பதால், சச்சினின் சுமை சிறிதளவு
குறையும். இந்த யோசனையை, சச்சினும் ஏற்றுக்கொண்டார். நாங்கள் இருவரும்
சேர்ந்து எடுத்த முடிவுதான் இது,'' என்றார்.
பாண்டிங் கூறுகையில்,"" எனக்கு கேப்டன் பதவி கொடுத்தது, மிகப்பெரிய
மரியாதை. உரிமையாளர் நீட்டா அம்பானிக்கும், அணி நிர்வாகத்திற்கும் என்
நன்றி. என் முழுத்திறமையை வெளிப்படுத்தி, அணியை வழிநடத்துவேன்,'' என்றார்.
நீட்டா அம்பானி கூறுகையில்,"" எங்கள் அணியை வழிநடத்த வரும், பாண்டிங்கை
வரவேற்கிறேன். உலகத்தின் மிகப்பெரிய வீரர்களான சச்சின், பாண்டிங்கை, மும்பை
அணி கொண்டுள்ளது. இது இளைஞர்களுக்கு, ஊக்கம் கொடுப்பதாக அமையும்,''
என்றார்.
No comments:
Post a Comment