Blogger Widgets

Total Page visits

Saturday, February 23, 2013

ஹரிதாஸ்


காவல்துறையில் தரப்படும் கடின பணிகளுக்கு நடுவே 10 ஆண்டுகள் பாட்டியிடம் வளரும் மகன் ஹரிதாஸைப்பற்றி பெரிதாக கவனம் எடுத்து கொள்ளும் வாய்ப்பு சிவதாசுக்கு(கிஷோர்)  இல்லாமல் போகிறது. பாட்டியின் இறப்பிற்கு பிறகு தாயில்லா மகனை தனது முழு கவனிப்பில் வைத்துக்கொள்ள முடிவு செய்கிறார் சிவதாஸ். ஆடிசம் குறைபாட்டால் அவதிப்படும் மகனை வைத்துக்கொண்டு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன தந்தை எப்படி சமுதாயத்தில் இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான்  மையம். ஒருபக்கம் என்கவுன்டர் துரத்தல்கள், மறுபக்கம் தந்தைப்பாசம், கொஞ்சம் நகைச்சுவை என கலந்து கட்டி அசத்தி இருக்கிறார் இயக்குனர் குமரவேலன்.    

தந்தையாக கிஷோர். பிரகாஷ்ராஜுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் ஆல்ரவுண்ட் நடிகர் என ஆணித்தரமாக நிரூபித்து இருக்கிறார் இப்படத்தின் மூலம். ரவுடிகளை கட்டம் கட்ட திட்டம் போடும்போதும் சரி, ஹரிதாஸ் மீது காட்டும் பாசத்திலும் சரி..என்ன நடிப்புய்யா!! குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று மழையில் நனையும் மகனிடம் 'உன்னை எப்படி புரிந்து கொள்வது..' என அழும்போதும், பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் மீண்டும் அவன் தொலையும் போது கண்ணாடியை கழற்றி விட்டு சிவந்த கண்களுடன் வெம்பும்போதும்...பிரமாதமான நடிப்பு.  

டீச்சராக ஸ்னேஹா சரியான சாய்ஸ். ஓரிரு காட்சிகளில் வந்தாலும் மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியை கேரக்டர் கோபமாக பேசுமிடம் நடிப்பாகவே தெரியவில்லை. வெகு இயல்பு. கொஞ்சமே கொஞ்சம் 'கடி'த்தாலும் சூரியின் காமடி பெரிய இடையூறாக இல்லாதது ஆறுதல். போலீஸ் அதிகாரிகள், பள்ளி சிறுவர்கள் என கிட்டத்தட்ட அனைவரும் நடிப்பும் படத்தின் பலம். டாக்டராக யூஹி சேது சில நிமிடங்களே வந்து சென்றாலும் தனது பாணியில் முத்திரை பதிக்கிறார். 

திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தாமல் சமபவங்கள் நடந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வை தந்ததற்கு கேமராமேன் ராண்டியை பாராட்டலாம். 'நல்லத மட்டுமே நெனைக்கணும்னு சொல்லிட்டு நீங்க ஏன் சார்..?' என பள்ளிச்சிறுவன் கிஷோரை கேட்குமிடம் என ஆங்காங்கே நறுக் வசனங்கள். 'வெள்ள குதிர', 'அன்னையின் கருவில்' ஆகிய இரண்டு பாடல்களும் கதையோட்டத்தின் ஆணிவேர்கள். என்னதான் கமர்ஷியல் காரணம் சொன்னாலும் இப்படி ஒரு தரமான படைப்பில் எதற்கு அந்த 'போலீஸ் கானா' பாடல்? குத்துப்பாட்டு ரசிகர்களே குத்தப்பாட்டு என்று சொல்லுமளவிற்கு  புஸ்வானம் ஆகிப்போனது. ஓமக்குச்சி எனும் பெயருடன் பருமனான சிறுவன் அறிமுகம் ஆகும் காட்சியில் யானை பிளிரும் ஒலி பின்னணியில். பருமனான  நபர்களை இதேபோன்று இன்னும் எத்தனை ஆண்டுகள் நம் சினிமாக்கள் அறிமுகம் செய்து கழுத்தை அறுக்குமோ?   ஆடிசம் மற்றும் இதர குறைபாடுகள்   உள்ள குழந்தைகளை ஒதுக்கக்கூடாது என்பதை முக்கிய அம்சமாக வைத்து கதை பண்ணும் இயக்குனர்கள் இது போன்ற காட்சிகளை வைப்பது கண்டிக்கத்தக்கது. 

  
கதையின் நாயகன் ப்ரித்விராஜ் தாஸ் மொத்தப்படத்தில் 'அப்பா' என்றொரு வசனம் மட்டுமே பேசுகிறான். ஆனால் ஆடிசத்தால் பாதிக்கப்பட்டவனாக வந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் தத்ரூப நடிப்பு. மராத்தான் போட்டியில் அவன் பங்கேற்கும் காட்சியின்போது கூடுமானவரை உணர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும் மனதை அசைத்துப்பார்த்து கண்ணோரம் நீர்த்துளியை எட்டிப்பார்க்க செய்துவிடுகிறான். எல்லாப்புகழும் குமாரவேலுக்கே. மணமாகாத ஆண்கள், பெண்கள் அனைவரையும் தந்தையின் ஸ்தானத்தில் இரண்டரை மணிநேரம் கூடுவிட்டு கூடுபாய வைத்திருக்கும் கிஷோரை இதற்கு மேல் என்ன சொல்லி புகழ்வதென்றே தெரியவில்லை. தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சில படங்கள் தந்தையை மையமாக வைத்து தமிழ் சினிமா வரலாற்றில் வந்திருப்பினும் 'ஹரிதாஸ்'தான் ஆல்டைம் பெஸ்ட் என்பதில் துளிகூட எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. 

No comments: