Blogger Widgets

Total Page visits

Tuesday, January 22, 2013

வேலை வேண்டுமா???


இப்படி ஒரு கேள்வி கேட்டால் எல்லோரும் ஆம், ஆம் என்று தானே சொல்வார்கள்? அதுவும் எடுத்த எடுப்பில் நாற்பது, ஐம்பது ஆயிரம் சம்பளம் கிடைத்தால்??? எல்லோருமே சரி என்பார்கள் தானே?

இந்த வேலைக்காகத் தானே சிறுவயதில் இருந்து நாம் அன்றாடம் உழைத்து வருகிறோம், படித்து வருகிறோம்?

இப்போதெல்லாம் பொறியியல், அதுவும் கணிப்பொறியியல் என்றால் தனி ஆசை, இல்லை, மோகம் என்று கூட சொல்லலாம். காரணம், படித்து முடிக்கும் முன் வேலை கையில் இருக்கும்.

கல்லூரி இறுதி ஆண்டிலேயே வேலை கிடைத்து விடும். ஆனால், இந்த வேலைக்காக இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதை நீங்கள் பார்த்தால், பரிதாபமாகத் தான் இருக்கும். வேலை, வேலை, வேலை... இது ஒன்று மட்டும் தான் அவர்களுக்கு கண்ணில் தென்படும் போலும்!?

இந்த வேலை, கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைக்க வேண்டும் என்றால், என்ன எல்லாம் வேண்டும்?

ஆங்கிலம், கணிதம் இது தான் மிகவும் முக்கியம், அடிப்படையாக இருக்கிறது. இவை இரண்டும் முதல் கட்டமாக நடக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற உதவும். இதில் வென்றுவிட்டால், அடுத்து குழு விவாதம், நேர்முகத் தேர்வு இப்படி இருக்கும் அடுத்தடுத்த சுற்றுகள்.

இவற்றில் வெற்றி பெற்றுவிட்டால், வேலை கிடைத்து விடும்! நிம்மதியாக இருக்கலாம் அடுத்து!

நிம்மதியாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள்.

வேலையில் சேர்ந்ததும் உங்களின் நிம்மதி பறிக்கப்படும், இல்லையில்லை வேலைக்கு அழைப்பே வராமல், உங்கள் நிம்மதி பறிக்கப்படும்!

உண்மை, இன்று நிறைய கணிப்பொறி, ப்ரோக்ராமிங் சார்ந்த நிறுவனங்கள் வேலைக்குக் கல்லூரி வளாகத்தில் வந்து தேர்வு செய்கிறார்கள், இருநூறு முன்னூறு என்றெல்லாம் மாணவர்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால், வேலைக்கு அழைப்பு காள் லெட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள், அது மட்டும் ஏனோ வருவதில்லையாம்!

கணிப்பொறியியல் படித்து விட்டாலே நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இன்று கணிப்பொறியியல் சேரும் மாணவர்கள் தான் அதிகமே தவிர, ஆர்வம் கொண்டு சேர்பவர்கள் வெகு சிலரே!

கணிப்பொறியியல் மட்டும் அல்லாமல், மற்ற துறை பொறியியல் மாணவர்களையும் இந்த கணிப்பொறி சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இதனால், எந்தத் துறை மாணவனாக இருந்தாலும், அவர்களது துறையில் வேலைக்குச் செல்வதைக் காட்டிலும் அதிகம் கணிப்பொறி சார்ந்த நிறுவனங்களையே நாடுகிறார்கள்.

பொறியியல் சேர்ந்து விட்டாலே, அது எந்தத் துறையாக இருந்தாலும் பரவாயில்லை பொறியியலில், உதாரணமாக நான் உயிரியல் தொழில் நுட்பம் பயில்கிறேன் பொறியியல் கல்லூரியில் தான், இப்போது நான் நினைத்தால் கூட ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கொள்ள இயலும். ஆனால், எனக்கு ப்ரோக்ராம்மிங் என்றால் என்ன என்று மட்டும் தான் தெரியும், தவிர்த்து சிறு சிறு ப்ரோக்ராம் எழுதுவேன்.

ஏன்? உயிரியல் தொழில் நுட்பம் போன்று கணிப்பொறி அல்லாத ஒரு துறையில் இருக்கும் மாணவர்கள் கூட, கணிப்பொறி சார்ந்த துறைக்கே வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள்?

கணிப்பொறி அல்லாது வேறு எந்தத் துறை சார்ந்த பொறியியல் படிப்பாக இருப்பினும், வேலையில் சேர்ந்ததும் ஒரு பெரிய தொகை சம்பளமாகக் கிடைக்காது. வேலையில் அனுபவம் அதிகமாக அதிகமாக தான் சம்பளமும் அதிகரிக்கும்.

இது தான் காரணம் இந்தப் பெரிய கணினி மோகம் இன்று மாணவர்களிடம் உண்டானதற்கு. சிறிது சிறிதாக முன்னேற இங்கு பெற்றோருக்கும் பொறுமை இல்லை, பிள்ளைகளுக்கும் வேறு வழி இல்லை!

என் மகன் ஒரு லட்சம் சம்பாதிக்கிறான்”, என்று சொல்லத் தான் எல்லாப் பெற்றோரும் விரும்புகிறார்கள்.

ஏழையாக இருக்கும் ஒரு குடும்பம் சட்டென்று உயர வழி வகுப்பது இந்தத் துறை தான். ஆனால், இன்று இது தவிர்த்து வேறு துறையில் நாட்டம், வேலை தேடும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து வருகிறது!

சட்டென்று கிடைக்கும் இந்தப் பணமும் வேலையும், சட்டேன்று போகவும் வாய்ப்புகள் அதிகம், ஆர்வம் இல்லாது வேலைக்காக மட்டுமே இந்தத் துறையினுள் நுழைந்திருந்தால்.

ஒரு மாணவர் கல்லூரியில் படிக்கும் போதே, இறுதி ஆண்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தேர்வாகி இருக்கிறார். அவரது தந்தை பெருமையாக எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார், தனது மகனுக்கு வேலை கிடைத்து விட்டது என்று. கல்லூரி முடிந்தது, ஆனால், இன்னும் காள் லெட்டர் வரவே இல்லை அந்த மாணவனுக்கு.

காத்திருந்திருக்கிறார் அந்த மாணவர், ஒரு மாதம், இரண்டு, மூன்று... ஐந்து... ஆறு மாதம் ஆகியும் வேலைக்கு அழைப்பு வரவே இல்லை.

பொறுமை இழந்த மாணவர் அந்த நிறுவனத்திற்கே மின்னஞ்சல் செய்து கேட்டிருக்கிறார். எனக்கு வேலைக்கு அழைப்பே அனுப்பவில்லை என்று. நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் பொறுப்பானவர்கள், இவருக்கு உடனே பதில் அனுப்பி இருக்கிறார்கள், பதில் மின்னஞ்சல் என்ன என்றால், ஒரு கேள்வித் தாள், அந்தக் கேள்வித் தாளுக்கு விடை அனுப்பச் சொல்லி இருக்கிறார்கள், இவரும் அனுப்பி இருக்கிறார்.

அதற்கு ஒரு பதில் வந்தது, மன்னிக்கவும் நீங்கள் இந்த வேலைக்கு தேர்ச்சி பெறவில்லை என்று!

இந்த மாணவர் ஏற்கனவே வேலைக்கு தேர்வானவர் தான். ஆனால் இப்போது வேலை இல்லை!??


முதலில் தெரியவில்லையா இவர் தகுதி இல்லாதவர் என்று? இப்படி தேவைக்கு அதிகமாக வேலைக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதால் என்ன லாபம்?

ஒப்பந்தம் போடுகிறார்கள், கல்லூரிகளுடன் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஒபந்தம் போடுகிறார்கள். நிறைய நிறுவனங்கள் கல்லூரி வளாகத்திற்கு வருகின்றன, இதில் அந்த நிறுவனங்களுக்குள் போட்டி இருக்கும், யார் முதலில் வந்து அதிபுத்திசாலிகளை தங்கள் நிறுவனத்திற்காக தேர்ச்சி செய்வது என்று. இரண்டாவதாக வந்தால், இதற்கு முந்தைய நிறுவனம் வேண்டாம் என்று விட்டவர்களை இவர்கள் வேலைக்கு எடுப்பது போல் ஆகிவிடுமாம். இதனால் முதலில் யார் வருவது என்பதில் போட்டி!

இதைத் தவிர்க்க, இந்த நிறுவனங்கள் கல்லூரிகளோடு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். என்னை முதலில் வர நீங்கள் அனுமதித்தால் நான் உங்கள் மாணவர்களில் இருநூறு பேரை தேர்வு செய்கிறேன் என்று ஒரு நிறுவனம் சொல்லும், இதே இன்னொரு நிறுவனம் நான் நானூறு மாணவர்களை எடுக்கிறேன் என்று சொல்கிறது என்றால், கல்லூரி எந்த நிறுவனம் நானூறு பேரை எடுக்கிறேன் என்று சொல்கிறதோ அந்த நிறுவனத்தை தான் அனுமதிக்கும்.

இருநூறு என்று சொன்ன நிறுவனம் நானூறு என்று சொன்ன நிறுவனத்தை விட பெரிய நிறுவனமாகவோ, சமமான நிறுவனமாக இருந்தாலோ, அந்த நிறுவனம் அந்தக் கல்லூரிக்குச் செல்லாது.

ஆனால், நானூறு பேரைத் தேர்வு செய்தாலும் அவர்கள் எல்லோரையும் அந்த நிறுவனம் வேலைக்கு அழைக்கப் போவதில்லை!கல்லூரியோ எல்லா மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்திலேயே வேலை கிடைத்துவிட்டது என்று இன்றும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பாவம், மேலே குறிப்பிட்ட மாணவர் போல தேர்வானவர்கள் பலரும் இன்றும் அழைப்பு வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!

பிறகு இது போன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கல்லூரியில் பயிற்சி தருகிறார்கள் இப்போதெல்லாம். இதற்கென பயிற்சி வழங்கவே பல நிறுவனங்கள் இருக்கின்றன இன்று.

இந்த பயிற்சியில் இவர்கள் முதலில் சொல்வதே, நீங்கள் உங்களது கலாச்சாரம், மொழி இவற்றை விட்டு வெளிவரத் தயாராக இருக்க வேண்டும். தலையில் என்னை வைக்காதீர்கள்!!! (என் அம்மா என்னை எப்போதும் என்னை வை வை என்று தான் சொல்வார், ஆனால் கல்லூரியில் வைக்காதே என்கிறார்கள், யார் ஒல்வதைக் கேட்பது?!) பெண் என்றால், தலை பின்னி, பூ வைக்காதீர்கள்!! இப்படி தொடங்கி, நாளை நிறுவனத்தில் நீங்கள் எந்த வகையான உடை அணியவேண்டும், என்பது, பிறரை மரியாதை இல்லாமல் பெயர் சொல்லி அழைப்பது, அது உங்களை விட முப்பது வயது பெரியவராக இருப்பினும்,பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டும்.

உதாரணத்திற்கு உங்களுடன் வேலை செய்பவரது பெயர், முபாஷிர் அஹமெத் கான் என்றால், நீங்கள் அவரை மேக் என்று தான் அழைக்க வேண்டும்!!!

இதை எல்லாம் நமது ஊரில் இருந்துவிட்டு, மாற்றிக் கொள்ள சற்று சிரமமாகத் தான் இருக்கும், ஆனாலும் மாற்றிக் கொண்டால் தான் வேலை!

பொறியியல் சேர்ந்தாலே வேலைக்குச் சென்றுவிடலாம் என்று இப்போது கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. திறமை இருப்பவர் எதைப் படித்தாலும், விருப்பமான எதைப் படித்தாலும் சிறப்பான வேலையில் சேரலாம். முதலில் குறைந்த ஊதியம் தான் கிடைக்கிறது என்று கிடைக்கும் வேலையை எல்லாம் காற்றில் விட்டவர்கள் பலர் இருக்கிறார்கள், அந்தப் பட்டியலில் நீங்களும் சேர்ந்துவிடாதீர்கள், உங்களது பிள்ளைகளையும் சேரவிடாதீர்கள்.

உயிரியல், வேதியல், இயற்பியல் போன்ற அறிவியல் பாடங்களை எல்லாம் விரும்பிப் படிக்கும் மாணவர்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள்.

பொறியியல் மட்டும் தான் அடிப்பா? மருத்துவம் மட்டும் தான் மகத்தானதா? இல்லை, ஒவ்வொரு படிப்பும், ஒவ்வொரு துறையும் அதன் வகையில் சிறந்தது தான். பெற்றோர்கள் இன்றெல்லாம், தங்களது பிள்ளைகள் பொறியியல், மருத்துவம் இதில் தான் சேர்க்க விழைகிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்கிறேன், பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன் நானும், என் உடன் படிப்பவர்கள், மற்றும் என் அனுபவம், நான் அறிந்தவற்றை வைத்துச் சொல்கிறேன், உங்கள் பிள்ளைக்கோ, உங்களுக்கோ வேலை வேண்டுமா???

பொறியியல் பட்டம் வேண்டாம், ஆர்வம், ஆர்வம், ஆர்வம், அது இருந்தால் மட்டும் வேலை தேடுங்கள் எந்தத் துறையாக இருந்தாலும்.

செய்யும் தொழில் இருதொழிலாக இருப்பினும் தெய்வம் தான்! தெய்வங்களில் உயர்வு தாழ்வு இல்லை தானே?

உங்களுக்கு வேலை கிடைக்கட்டும்! உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறையில், உங்களுக்கு வேலை கிடைக்கட்டும்!  

------------
கண்மணி அன்போடு!

No comments: