Blogger Widgets

Total Page visits

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்


எவனென்று நினைத்தாய்? 
எதைக்கண்டு சிரித்தாய்? 
விதை ஒன்று முளைக்கையில், 
வெளிப்படும் சுய ரூபம், 
யாரென்று தெரிகிறதா? 
இவன் தீயென்று புரிகிறதா? 
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன், ஞாபகம் வருகிறதா?

சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை இன்று தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இரவு 10 மணியளவில் நீதிபதி தீர்ப்பை அறிவித்தார். அதில்,விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள் விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது. . இன்று நடந்த பல கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், கலெக்டர்கள் விதித்த 144 தடை உத்தரவுக்குநீதிபதி தடை விதித்தார். வழக்கின் மீதான இறுதி விசாரணை பின்னர் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

இதனிடையே ,தீர்ப்பை காலை 10.30 மணி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனை நீதிபதி நிராகரித்தார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: