கலப்பு மணங்களில் சரியான புள்ளி விபரம் தெரியவில்லை.எந்த வகுப்பைச் சார்ந்த பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.நான் பார்த்த பெரும்பாலான திருமணங்களில் பெண்கள் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.அவர்கள் தைரியமாகவே முடிவெடுத்தார்கள்.ஆனால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுதான்.
பெண் சாதியை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.சாதி தந்தையை சார்ந்து வருகிறது.ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது.அவனுக்கு பெருமையைத்தருகிறது.கௌரவத்திற்காக பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டார்கள்.பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிக கீழான நிலையில் இருக்கிறாள்.இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் ஜாதிதான் .
குழந்தையிலிருந்தே துவங்கி விடுகிறது.எந்த வீட்டிலும் ஆண் குழந்தைக்கு கிடைக்கும் மரியாதை ஒரு பெண்ணுக்கு கிடைப்பதே இல்லை.பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கு மனக்குறையையும் சுமையையும் தரும் பொருளாகவே பெண் பார்க்கப்படுகிறாள்.கருவில் சிதைக்க சட்டத்திற்கு அப்பாற்பட்டு முயற்சி செய்யப்படுகிறது.தப்பிப் பிறந்தால் பிறந்தவுடன் வெறுக்கப்படுகிறாள்.
வரதட்சணை சேர்க்கவேண்டும்.அதற்காக கூடுதலாக உழைக்கவேண்டும்.பெற்றோருக்குமனதில் வெறுப்பு ஏற்பட்டு சொல்லிலும் செயலிலும் வெளியே வருகிறது.கல்யாணம் செய்து கொடுத்தாலும் கஷ்டம்தான்.கணவன் அமையாவிட்டால் அடிக்கடி பிறந்த வீட்டுக்கு ஓடிவரவேண்டியிருக்கிறது.பெற்றோ ர் பெண்குழந்தையை சுமையாக நினைக்கும்போது அவர்களது செயல்களிலும் எதிரொலிக்கிறது.பெற்றோர் என்று சொல்லிவிட்டேன்.உண்மையில் தந்தையை மட்டுமே சொல்லவேண்டும்.
பேருந்து நிலையத்தில் உள்ள செருப்பு கடை ஒன்றில் அமர்ந்திருந்தேன்.புதிதாக திருமணம் ஆன மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு ஒரு தாய் வந்தார்."எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை.உனக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மருமகனிடம் சொல்கிறார்.சிறிய பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.பெரும்பாலானவை எட்டாக மடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்.கடைக்காரர் கேட்டார்," எத்தனை வருஷமா சேர்த்து வச்சிருந்தீங்க?"" என்ன பண்றது பொண்ண பார்க்கணுமே?" என்று பதில் வருகிறது.இதெல்லாம் ஆணுக்கு தொடர்பில்லாத விஷயங்கள்.
பெண்கள் என் அழுகாச்சி தொலைக் காட்சித் தொடர்களை அப்படி உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நகைச்சுவை காட்சிகளை பார்த்து சந்தோஷமாக சிரிக்கலாமே? நாம் மனக்கஷ்டத்தில் இருக்கும்போது சோகப்பாடல்களை விரும்புகிறோம் இல்லையா?.உள்ளே துக்கம்தான் பொங்கிக் கொண்டிருக்கிறது.ஆண்களைவிட பெண்கள் அதிகம் கோயிலுக்குப் போவதையும் கவனிக்கவேண்டும்.கஷ்டத்தைக் கேட்க யாரும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.
உலகில் ஏராளமான உயிர்கள் இருக்கின்றன.கொசு,ஈ ,நாய்,பூனை எல்லாமும் சந்தோஷமாகத்தான் இருக்கின்றன.ஆனால் பல இடங்களில் பெண்ணுக்கு மட்டும் அப்படி இல்லை.தனது பயன்பாட்டுக்காக மட்டுமே ஒரு பெண் கவனிக்கப்படுகிறாள்.இருப்பதிலே
யே மிகவும் ஒடுக்கப்பட்ட சாதி பெண்சாதி.நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் சாதிஎல்லாம் பெண்ணுக்கு இல்லை.
No comments:
Post a Comment