Blogger Widgets

Total Page visits

Saturday, April 27, 2013

என்று தணியும் இந்த ஐ.பி.எல். மோகம்?

கிரிக்கெட் என்றாலே ரசிகர்கள் அதிகம்; அதுவும் விவரம் தெரிந்த ரசிகர்கள்! கிரிக்கெட் ரசிகர்களைப் பைத்தியங்கள் என்று அழைப்பதில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் மற்றெந்த விளையாட்டுகளில் இல்லாத சில தனித்துவம் கிரிக்கெட்டுக்கு இருப்பதுதான் அதன் கவர்ச்சி.

கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மட்டுமே தொடர்ந்து சிந்தித்து அந்த விளையாட்டில் புதுமைகளைப் புகுத்திக்கொண்டே வருகிறார்கள். 5 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆதரவு குறைகிறது என்றதும் ""ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்'' என்ற பெயரில் தலா 50 ஓவர்கள் பந்து வீசும் ஆட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அந்த 50 ஓவர்கள் போட்டிக்கும் ஈர்ப்பு குறைகிறது என்றதும் இப்போது தலா 20 ஓவர்கள் வீசும் ஐ.பி.எல். போட்டிகளைக் கொண்டுவந்துவிட்டார்கள். 

கிரிக்கெட்டில் மட்டும்தான் ஓய்வும் - பரபரப்பும் ஒருசேரத் தொடரும் புதுமையான அமைப்பு அமைந்திருக்கிறது. பந்து வீசப்பட்டு அதை பேட்ஸ்மன் தடுத்துவிட்டாலோ அடித்து எல்லைக்கோட்டுக்கு அப்பால் அனுப்பிவிட்டாலோ அத்துடன் அந்த செயல் முடிகிறது. அடுத்த பந்து வீசப்படும்வரை ரசிகர்களுக்கு மைதானத்தில் நடப்பதைப் பார்க்கவும் ரசிக்கவும் நேரம் இருக்கிறது. கால்பந்து, வாலிபால், பூப்பந்து, வளைபந்து என்று எல்லா போட்டிகளிலும் ஆட்டம் தொடங்கியது முதல் முடிவுவரை பந்தின்மீதுதான் ரசிகர்கள் கவனம் செலுத்த முடியும்.

கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மன் ஆட்டம் இழந்து அடுத்தவர் வரும் வரையிலும், ஓவர்கள் மாறும்போதும், பந்து திரட்டப்படும் வரையிலும், பந்து மாற்றும்போதும் என்று பல இடைவேளைகள் வந்துகொண்டே இருப்பதால் தொலைக்காட்சியில் விளம்பர ஒளிபரப்பாளர்களுக்கு வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் ரன் அவுட்டா, கேட்சா, எல்பிடபிள்யூவா என்ற கேள்விகள் வரும்போதெல்லாம் தனி விளம்பரங்கள். இந்தக் காரணங்களால்தான் கிரிக்கெட் போட்டிகளை தொழில் நிறுவனங்கள் பெரிதும் ஊக்குவிக்கின்றன.

கடைசி பந்தில்தான் ஆட்டத்தின் முடிவே தீர்மானிக்கப்படுகிறது என்பது பல போட்டிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டிவிடுகின்றன என்பதை மறுக்க முடியாது.

கிரிக்கெட் போட்டியை நடத்துவதால், ஒளிபரப்புவதால், பத்திரிகைகளில் பிரசுரிப்பதால் பணம் கிடைக்கிறது என்பதால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், செய்தி ஊடகங்கள் என்று அனைவருமே ஆர்வம் செலுத்துகின்றனர். இவ்வளவு இருக்கும்போது ஐ.பி.எல். மோகம் தணியும் என்று நம்புவதோ தணியவேண்டும் என்று விரும்புவதோ கூட பைத்தியக்காரத்தனமாகவே பார்க்கப்படும்.

இருந்தாலும், ஐ.பி.எல். போட்டிகளால் கிரிக்கெட்டுக்கே சில தீமைகள் வந்து சேரும் என்ற எண்ணத்தையும் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைவிட ஐ.பி.எல்.லுக்கு அதிகப்பணம் தரப்படுவதால் ஆட்டக்காரர்கள் தங்களுடைய உடல் நலனைக்கூடப் பொருள்படுத்தாமல் அல்லது உடலில் காயம்படும் அளவுக்கு விளையாடுகிறார்கள். இதில் நிரந்தர ஊனமோ காயமோ ஏற்பட்டால் கிரிக்கெட் போட்டியிலிருந்தே அவர்கள் விலக நேரிடலாம்.  ஐ.பி.எல். அணிகளின் பெயர்களில் வேண்டுமானால் சென்னை, தில்லி, மும்பை, புணே, கொல்கத்தா என்று இருக்கலாம். எந்த அணியிலுமே அந்த நகர அல்லது மாநில வீரர்கள் மட்டுமே கிடையாது. அணித்தலைவர் வேறு ஊரை அல்லது நாட்டைச் சேர்ந்தவராகக்கூட இருக்கிறார்கள். எதற்கு இந்த ஊர் பெயர்? ஊர் விசுவாசம்?

தேசிய அணியில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை, ஐ.பி.எல்.லில் இடம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு வரத் தொடங்கிவிட்டது.

ஐ.பி.எல். போட்டிகள் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் நடக்கிறது. இது பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களின் கவனத்தைச் சிதைக்கிறது. பலருடைய படிப்பு பாழாகி ஓராண்டு படிப்பே வீணாகிறது.

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் ஆட்ட - பாட்ட நிகழ்ச்சிகள் விளையாட்டு வீரர்களுக்கு நல்லதல்ல. கலாசார சீர்கேடு என்று நாசூக்காக இதைக் குறிப்பிடுவதே போதுமானது.

 விவசாயத்துக்கும் வீட்டுத் தேவைக்கும் தொழிற்சாலைகளுக்கும் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை, பணம் தருகிறார்கள் என்பதற்காக கிரிக்கெட் ஆட்டகளத்துக்கு வழங்கி இரவைப் பகலாக்கும் விரயம் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.

 எத்தனை முறை சொன்னாலும் ஐ.பி.எல். போட்டிகளை இப்போதைக்கு தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாதுதான். ஆனால் இதை ஆதரிக்கக் கூடாது என்ற உணர்வு பரவினால் அதுவே இப்போதைக்கு போதும்.

Thanks dinamani

No comments: