Blogger Widgets

Total Page visits

Sunday, April 28, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்


கல்லூரி படிப்பையே முழுமையாக முடிக்காத ஒருவன் காதல்வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு, பிள்ளையையும் பெற்றுவிட்ட பின்பும் பொறுப்பு வராமல் தேமே என்று திரிகிறான். அவனுக்கு புத்தி வருவதற்காக மனைவியின் சகோதரரான ஒரு மனநல மருத்துவர் போடும் நாடகம்.. கடைசியில் அந்தக் குடும்பத்தையே பிரிக்க நினைக்கிறது.. அவனது குழந்தை அவனுக்குப் பிறக்கவில்லை.. யாரோ ஒரு மகேஷ் என்பவனுக்கு பிறந்திருக்கிறது என்று மனைவியே சொல்வது போல டிராமா போட.. கணவன் அதை நம்பி ரொம்ப சீரியஸாக அந்த மகேஷை தேடி, தேடி அலைவதுதான் படம்..! ம்ஹும்.. புதிய சிந்தனைகள் தேவைதான்.. ஆனால் அதற்காக இந்த அளவுக்கு இறங்கணுமா என்ன..?

அத்தோடு படம் முழுவதும் விரவியிருக்கும் டபிள், டிரிபிள் மீனிங் டயலாக்குகளை நினைத்தால் இதன் இயக்குநரை உச்சி முகிர்ந்து பாராட்ட தோன்றுகிறது.. எப்படியும் ஏ சர்டிபிகேட்டுதான்.. டிவியில் காட்ட முடியாது.. குழந்தைகளுடன் வர மாட்டார்கள்.. வரிவிலக்கு கிடைக்காது.. எல்லாம் தெரிந்தும் ஏ படம்தான் எடுத்திருக்கிறேன் என்று தைரியமாக இதன் இயக்குநர் சொல்கிறார்.. இதன் பாதிப்பு சத்தியமாக இவருக்கு இல்லை. ஆனால் சினிமாவுலகத்துக்கு நிச்சயமாக கிடைக்கும்..! ஏற்கெனவே சேட்டை படம் பார்த்து பேஸ்த்தடித்துப் போன குடும்பஸ்தர்கள் இன்னும் 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கம் வரப் போவதில்லை.. இப்போது இந்தப் படம்.. இதையும் பார்த்துவிட்டு ஓடுபவர்களால் அடுத்து வரவிருக்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்..! இது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது..? 

அப்பாவும், மகனும் ஆபாச படம் பார்க்க அலைவது.. ஹீரோ, ஹீரோயினில் துவங்கி படத்தின் அனைத்து கேரக்டர்களும் ஆளுக்கொரு வசனமாக டபுள் மீனிங்கை அள்ளி வீசியிருக்கிறார்கள்..! வழக்கம்போல கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை சம்பந்தப்படுத்தி ஒரு ஆபாச திரைக்கதை..! கல்லூரி ஆசிரியரும் அப்படியே வசனங்களை பேசுகிறாராம்..! ரோபா சங்கர்-அரவாணி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் தேவைதானா..? யாரைத் திருப்திப்படுத்த இப்படியெல்லாம் சீன் வைக்கிறார்கள்..? இப்படி எடுத்தால் இளைஞர் கூட்டம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..! நல்ல நினைப்புதான்..!

ஹீரோ சந்தீப்.. திரும்பிப் பார்க்க வைக்காத முகம்.. இது மாதிரியான சப்பையான கேரக்டர்களுக்கு தோதானவர்.. உண்மையாகவே நடித்திருக்கிறார் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் மட்டும்..! மச்சி மச்சி என்று அலையும் ஜெகனின் பல கமெண்ட்டுகள் ஆபாசமாகவே இருந்தாலும் தியேட்டரில் கை தட்டல்கள் ஒலிக்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது.. எப்படி ரசிக்கிறார்கள் இதையெல்லாம்..? இவரும், இவரது மனைவியும் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிஜமாகவே நடப்பது போல அழகாக எடுக்கப்பட்டிருக்கிறது..! 

அதேபோல் அந்த டிரெம் செட் மகேஷின் ட்ரூப் ஸாங் சீனும் ரசிக்கும்படியிருந்தது..! சிங்கமுத்து காமெடி வழக்கம்போல வழவழவென்றாலும் அந்த இரவு நேர கல்யாணத்தின்போது தியேட்டரே அதிர்ந்தது..!   சிற்சில இடங்களில் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதால் இந்த மாதிரியான வசனங்களையும் மீறி ரசிக்க முடிகிறது..!

ஹீரோவுக்கு நேரெதிராக ஹீரோயின் டிம்பிள்.. அழகோ அழகு.. சின்னப் பொண்ணு.. பாடல் காட்சிகளிலும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார்.. காட்டியிருக்கிறார்.. இப்போது வாரத்திற்கு 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள் என்பதால், இப்படி எல்லாவற்றுக்கும் முந்தினால்தான் நிலைக்க முடியுமென்று யாரோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலும்..! 

கோபிசந்தரின் இசையில் பாடல்கள் ஒலித்தன. எதுவும் காதில் விழுகவில்லை.. ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடிய அம்மணியை வலைவீசித் தேட வேண்டும்.. என்னவொரு ஸ்டிரெச்சர்..? எங்கேயிருந்து பிடித்தார்கள் என்று தெரியலையே..? டூயட் பாடல்களைத் தவிர சோகப் பாடல்களில் இசை மட்டுமே பிரதானமாக இருக்க.. பாவம் ஹீரோ.. கத்தி, கத்தி பாடி தன் தொண்டைத் தண்ணியை வற்ற வைத்திருக்கிறார்..!

நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில் ஹீரோயின் சுய இன்பம் அனுபவிப்பதை நுட்பமாண காட்சியாக திணித்திருந்தார்கள். அடுத்தது இந்தப் படம்.. ஏற்கெனவே தெலுங்கில் இதேபோல பல சின்ன ஹீரோக்களும் நடித்துக் காட்டிவிட்டார்கள். இதில் இந்த ஹீரோ..! இது இப்படியே எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை..!

அந்த டிரெயின் காட்சிகள்.. சுவாமிநாதனும், பெண் ஆசிரியையும் சம்பந்தப்பட்ட காட்சிகள்.. டிரெயினில் முதல் இரவு செட்டப்பு.. காண்டம் வாங்கி தயாராவது.. என்றெல்லாம் இன்றைய யூத்துகளுக்கான காட்சிகளாக நினைத்து வைத்திருந்தால்.. ஸாரி.. இதன் இயக்குநர் ரொம்பவே பின்னாளில் கண்டிப்பாக ஃபீல் செய்ய வேண்டி வரும்..!  

கல்லூரி, படிப்பு, காதல், கல்யாணம் என்று வரிசையாக வந்திருக்க வேண்டியதற்கு முன்பேயே காதல், உடல்சுகம், கல்யாணம் என்று மாற்றியெடுத்து கல்லூரியையும், படிப்பையும் அப்படியே அந்தரத்தில் தொங்க விட்டதில் படத்தின் தன்மையே மாறிவிட்டது.. 

காதல், கல்யாணம், சந்தேகம் என்றாவது வந்திருந்தால் ஒரு வழக்கமான சினிமாவாக வந்திருக்கும்.. இப்படி ரெண்டுங்கெட்டானாக எடுத்துத் தொலைத்திருப்பதால் இதனை பிட்டு படமாகவும் பார்க்க முடியவில்லை. தியேட்டரில் தைரியமாக முகத்தைக் காட்டி பார்க்க வேண்டிய சினிமாவாகவும் நினைக்க முடியவில்லை..!  இதன் இயக்குநர் மதன்குமார், அடுத்த படத்தில் தன்னைத் திருத்திக் கொண்டால் திரையுலகத்துக்கு பெரிதும் நல்லது.

No comments: