”கல்வியாளர்கள், கொடை வள்ளல்களின் கையில் இருந்த கல்வி, தற்போது 
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மதத் தலைமையிடங்கள், சினிமா நடிகர்களின் 
கைக்கு மாறிவிட்டது என்பதுதான் உண்மை. கல்வித்துறையில் தனியாரின் 
பங்களிப்பு இருக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டும் அனுமதித்துள்ளது. ஆனாலும்
 தொழில் கல்வி இடங்களை விலைக்கு விற்பது பற்றிய தகவல்களை பார்க்காமல் கண்ணை
 மூடிக்கொண்டு இருந்துவிட முடியாது.”என சென்னை ஹைகோர்ட் கடும் கண்டனம் 
தெரிவித்துள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் என்ஜினீயர் சி.நரேஷ்குமார் மனு ஒன்றை தாக்கல் 
செய்திருந்தார். அதில்,”2008-ம் ஆண்டு கோடம்பாக்கம் யுனைடட் இன்போலிங்க் 
என்ற நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில், ரூ.45 ஆயிரம் முன்தொகை 
செலுத்தினால், 6 மாத சாப்ட்வேர் பயிற்சி கொடுத்துவிட்டு, வேலை 
வாங்கித்தருவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அந்த தொகை 
திருப்பி செலுத்தப்பட்டுவிடும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. 
அந்த தொகையை செலுத்தியதும் எனக்கு அனுமதிக்கடிதம் தரப்பட்டது. ஆனால் 
முறையான பயிற்சியை வழங்கவில்லை. அதோடு, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 
எஸ்.சுப்பிரமணி மற்றும் குருபிரசன்னராஜ் ஆகியோர் கம்பெனியை மூடிவிட்டு 
சென்றுவிட்டனர். 
இதுபற்றி மோசடிக்குள்ளான 140 என்ஜினீயர்கள் கொடுத்த புகாரின் 
அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 அந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக ரூ.50 லட்சத்துக்கான சொத்து 
உத்தரவாதத்தை காட்டும்படி, கோர்ட்டு உத்தரவிட்டது. 
அதில் காட்டப்பட்ட சொத்து பத்திரங்கள் வேறொருவருக்குரியவை. எனவே 
அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 
உத்தரவிட வேண்டும். ”என்று அதில் கூறப்பட்டு இருந்தது. 
இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்த அவர் பிறப்பித்த உத்தரவில்,”வேலை
 கிடைக்காத என்ஜினீயர்களின் பரிதாப நிலையை இந்த சம்பவம் விளக்குகிறது. 
தமிழகத்தில் உள்ள 520 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து ஆண்டொன்றுக்கு 
ஆயிரக்கணக்கான என்ஜினீயர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் 
ஆண்டொன்றுக்கு எத்தனையோ என்ஜினீயர்கள் வெளியே வந்தாலும் அவர்கள் 
அனைவருக்கும் வேலை வாய்ப்புகள்தான் கிடைப்பதில்லை. ஆனாலும் மேலும் மேலும் 
என்ஜினீயரிங் கல்லூரிகள், காளான் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு
 ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) தான் காரணமாக 
உள்ளது. 
மேலும் மேலும் கல்லூரிகளை எந்திரத்தனமாக கூட்டக்கூடாது. ஏற்கனவே 
ஆண்டுதோறும் என்ஜினீயரிங் கல்வி இடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், புதிய
 கல்லூரிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு மேலும் பல கல்லூரிகளுக்கு 
ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளிக்கக்கூடும். இது பொது நலனுக்கு எதிரானதாகும். 
கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் முன்பு, சில கருத்துகளை ஏ.ஐ.சி.டி.இ. 
யோசிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள என்ஜினீயரிங் பட்டதாரிகளின் மொத்த 
எண்ணிக்கை, ஆண்டொன்றுக்கு வெளியே வரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளின் 
எண்ணிக்கை, அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நிச்சயம், ஆண்டொன்றுக்கு 
வேலைவாய்ப்பை பெறும் என்ஜினீயரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை பற்றி 
ஏ.ஐ.சி.டி.இ. யோசிக்க வேண்டும். 
இயல்பு நிலையை யோசிக்காமல், நிபந்தனைகளை பூர்த்தி செய்துவிட்டால் 
மட்டும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கிவிடக் கூடாது. கல்வியாளர்கள், 
கொடை வள்ளல்களின் கையில் இருந்த கல்வி, தற்போது அரசியல்வாதிகள், 
தொழிலதிபர்கள், மதத் தலைமையிடங்கள், சினிமா நடிகர்களின் கைக்கு மாறிவிட்டது
 என்பதுதான் உண்மை. 
கல்வித்துறையில் தனியாரின் பங்களிப்பு இருக்கலாம் என்று சுப்ரீம் 
கோர்ட்டும் அனுமதித்துள்ளது. ஆனாலும் தொழில்கல்வி இடங்களை விலைக்கு விற்பது
 பற்றிய தகவல்களை பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட முடியாது. 
தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்வதுபோல், என்ஜினீயர்களை 
தயாரிக்கும் இடமல்ல, கல்லூரிகள். அவர்கள் நமது தேசத்துக்கான ஆதாரமாகவும், 
சொத்தாகவும் இருப்பவர்கள். அவர்களின் சேவை, இந்தியாவுக்கு வெளியேயும் 
தேவைப்படுகிறது. 
ஆனால் வேலையின்மை காரணமாக, படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வங்கி போன்ற 
துறைகளில் வேலைக்கு என்ஜினீயர்கள் செல்கின்றனர். அதுவுமல்லாமல் இதுபோன்ற 
மோசடிகளினால் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. கேம்பஸ் இண்டர்வியூவில் 
தேர்வான பிறகும் வேலை அளிக்கப்படவில்லை என்ற நிலையும் உள்ளது. 
வேலை கிடைக்காததால் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் 
என்ஜினீயர்கள் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பல பெற்றோர் கடன் 
வாங்கி, பிள்ளைகளை இதுபோன்ற படிப்பில் சேர்க்கின்றனர். படிப்பை முடித்த 
பிறகோ கடனை அடைக்கும் வகையில்கூட வேலை கிடைப்பதில்லை. இது அந்த 
குடும்பத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகிறது. இதையெல்லாம் கொள்கையை 
உருவாக்கும் வர்க்கத்தினர் கருத்தில் கொள்ள வேண்டும். ஏமாற்றமடைந்துள்ள 
என்ஜினீயர்களின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு, அதை நீக்கும் வகையில் 
கொள்கைகளில் மாற்றம் செய்ய நிபுணர் குழுவை நியமித்து அரசு ஆலோசனை செய்ய 
வேண்டும். 
இந்த வழக்கில் மத்திய மற்றும் தமிழக அரசை பிரதிவாதியாக சேர்க்கிறேன். 10
 கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்தியாவில் 1980-ம் 
ஆண்டில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 2000-ம் 
ஆண்டில் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட கல்வி இடங்களின் எண்ணிக்கை, காலியாக 
இருந்த சீட்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை என்ஜினீயர்கள் வெளிவந்தனர்? 
அவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? ஏன் புதிய கல்லூரிகளுக்கு 
அனுமதி அளிப்பதை ஏ.ஐ.சி.டி.இ. நிறுத்திக் கொள்ளக்கூடாது? ஆகியவற்றுக்கு 
பதிலளிக்க வேண்டும். ”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks Aanthaireporter - Online Tamil Magazine
Thanks Aanthaireporter - Online Tamil Magazine
 
No comments:
Post a Comment