முன்பெல்லாம் செல்வர்களின் வீட்டில் மட்டுமே போன் இருந்தது. அது தரைவழித் தொடர்புத் தொலைபேசி. இப்போது நிலைமை மாறிவிட்டது.
காய்கறி விற்பவர்கள், கால் டாக்சி ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஸ்திரிகள், வீட்டுக்கு வீடு பால் விநியோகம் செய்பவர்கள், பேப்பர் போடுபவர்கள் என்று எல்லோருடைய கையையும் செல்போன் அலங்கரிக்கிறது.
நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அறுபதாம் வயது வரை என்னிடம் செல்போன் இல்லை. அதற்குப் பின் நான்காண்டுகள் கழித்தே, நான் வேண்டாமென மறுத்தும் என் மகள் தன் செலவில் ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்து விட்டாள்.
நான் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பரபரப்பாக இருந்தபோது என்னிடம் செல் இல்லை. பணி ஓய்வு பெற்ற பிறகு, உறவினர்கள் நடுவே "வேலை வெட்டி இல்லாத மனுஷன்' என்ற விருதினைப் பெற்ற பிறகே, செல்போன் என்னைத் தேடி வந்தது.
என்னோடு மற்றவர்கள் தொடர்பு கொள்ளும்போது பேசுகிறேன். எனக்குத் தேவைப்படும் போது நானே தொடர்பு கொள்கிறேன். மிக அவசியமானால் சிலருக்கு அபூர்வமாகவே குறுஞ்செய்தி அனுப்புகிறேன்.
என் போனில் படம் எடுக்கும் வசதியுண்டு. இருப்பினும் எடுப்பதில்லை. ஸ்மார்ட் போன், ஆண்டிராய்டு என்றெல்லாம் சொல்கிறார்களே - அந்த அதி நவீன போன்களை எனக்கு இயக்கத் தெரியாது.
ஒரே வீட்டில் வாழ்கிற கணவன், மனைவி, கல்லூரிக்குப் போகும் பெண், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பாட்டி என எல்லாருமே ஆளுக்கொரு போன் வைத்திருக்கிறார்கள்.
வர்த்தக முதலைகள், பங்குச் சந்தைத் தரகர்கள், டாக்டர்கள், வழக்குரைஞர்கள், வங்கி அதிகாரிகள், காவல் துறையினர், பத்திரிகை நிருபர்கள் - இவர்களெல்லாம் பிறரோடு அடிக்கடி பேச வேண்டிய நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு அது தேவை.
நகரப் பேருந்தில் நான் நின்றவாறு பயணிக்கும் போதெல்லாம், பலர் செல்லில் பேசிக்கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். அவர்கள் யாரோடு பேசுவார்கள்? என்னதான் பேசுவார்கள்? சிலர் செல்லில் சத்தமாகப் பேசுவார்கள். குடும்பப் பூசல் உலகத்துக்கே தெரிய வேண்டுமா?'
நீண்டநேரம் பேசும்போது போனிலிருந்து புறப்படும் கதிரியக்க வீச்சு நம் செவிமடலைச் சுடும். அதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாவது பேச்சை முடிக்கலாமே! போன் என்பது தகவல் பரிமாற்றத்திற்கே. இதுவே அதன் அடிப்படைத் தத்துவம். அது இப்போது அடிபட்டுப் போய்விட்டது. வீண் வம்பு பேசவும், வெட்டியரட்டை அடிக்கவுமே இப்போது செல்போன் பயன்படுகிறது.
சிலர் தூங்கும் போதும் செல்போனை தலையணையருகே வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.
வெளியூரிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்ளோடு மணிக்கணக்காக பேசும் சிலர் சொந்த மனைவி மக்களோடு முகம்கொடுத்துப்பேசார். மூத்து முதிர்ந்த பெற்றோர்களோடு மௌனத்தால் உரையாடுவர்.
அண்மையில் உள்ளோரை அன்னியப்படுத்திவிட்டு, அயலாரை அண்மையராக ஆக்கும் இக்கலாசார மாற்றம் மனிதனை எங்கே கொண்டு போய் விடும்?
போதைகளில் பல வகை உண்டு. மக்கள், இப்போது செல்போன் போதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சிலர் உணவு உண்ணும் போதுகூட, தம் பார்வை படுகிறாற்போல் செல்போனை வைத்துக் கொள்கிறார்கள். அது சிணுங்க ஆரம்பித்தாலே இவர்கள் உணவை மறந்துவிட்டு எழுந்து நிற்கிறார்கள். தம் உணவு நாட்டத்தைத் துறந்து ஓடுகிறார்கள்; உரக்கப் பேசுகிறார்கள். நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு செல்போன் பேச்சும், அதனால் ஏற்படும் கவனச் சிதறலுந்தான் காரணம்.
சாலை விபத்து பற்றிய செய்திகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளிவந்தாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்களை மிகப்பெரிய சர்க்கஸ் வீரர்களாகவும் அஷ்டாவதானிகளாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.
செல்போனுக்கு எதிரியல்ல நான். காரை ஓட்டிச் செல்லும்போது, அது நடுவழியில் இடக்கு செய்தால் பழுது பார்ப்போரை உடனே அழைக்க வேண்டும். வீட்டிலுள்ள முதியோர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். கல்லூரிக்கோ பள்ளிக்கோ சென்ற குழந்தைகள் சரியான நேரத்துக்குத் திரும்பி வரவில்லை என்றால், அக்கல்வி நிலையத்துக்கு போன் செய்து விசாரிக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில் செல்போன் மட்டுமே உதவும்.
ஆனால், எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பும் நம் அன்றாட வசதிக்காகவே இருத்தல் வேண்டும். அதையே மிகையாகப் பயன்படுத்தினால் வேண்டாத சிக்கலில் சிக்கிக் கொள்வோம்.
By
1 comment:
Your Blog is fully informative thank you for the effort you took to make it ..For More Latest Tamilnadu Newspaper
Post a Comment