Blogger Widgets

Total Page visits

Saturday, November 22, 2014

பாதுகாப்புக்கு முன்னுரிமை!

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் கார்களுக்கு சில அடிப்படை பாதுகாப்பு அம்சங்களைக் கட்டாயம் ஆக்குவது என்று அரசு தீர்மானித்திருக்கிறது. எப்போதோ எடுத்திருக்க வேண்டிய முடிவு, என்றைக்கோ நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய நடவடிக்கை இது!
புதிய கார்களின் சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கைதான் இந்த முடிவு எடுக்க அரசை தூண்டியிருக்கிறது. உலகில் தயாரிக்கப்படும் கார்களை அதிவேகத்தில் ஏதாவது ஒன்றின் மீது மோதவிட்டு, அதன் தாக்குப் பிடிக்கும் சக்தி பரிசோதிக்கப்படுகிறது. அந்த முறையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்திய, கொரிய, ஜப்பானிய, அமெரிக்க நிறுவனங்களின் மோட்டார் கார்களும் மோதல் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. ஆனால், ஒரு கார்கூட அந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பது புதிய கார்களின் தர நிர்ணயத் திட்டத்தின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.
நமது இந்திய கார்களை மனிதர்கள் ஓட்டிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவர்கள் பலத்த காயம் அடைந்திருப்பார்கள் அல்லது மடிந்திருப்பார்கள் என்கிறது அறிக்கை. அந்தச் சோதனைகளின் ஒளிப்படம் வெளியிடப்பட்டு அதைப் பார்க்கிறவர்கள், இந்தியாவில் தயாரித்த கார்களில் ஏறுவதற்கேகூட பயப்படுவார்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய கார்களின் சந்தையாக மாறிவிட்டிருக்கிறது. உலகிலுள்ள குறிப்பிடத்தக்க எல்லா மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இப்போது இந்தியாவில் கார்களைத் தயாரிக்கின்றன. ஆனால், அவர்கள் வெளிநாடுகளிலும், தங்களது தாய்நாட்டிலும் கடைப்பிடிக்கும் விதிமுறைகளையும், தரக் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் இந்தியாவில் தயாரிக்கும் கார்களில் கடைப்பிடிப்பதில்லை. எரிபொருள் சிக்கனத்திலும்கூட இந்தியக் கார்கள் தரம் தாழ்ந்தவையாகவே இருக்கின்றன.
இதற்கு கார் தயாரிப்பாளர்கள் கூறும் காரணம் விசித்திரமானது. இந்தியர்கள் விதியில் நம்பிக்கை உடையவர்கள் என்பதால், அவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை என்பது முதல் காரணம். இரண்டாவதாக, இந்தியர்கள் விலை பற்றிய சபலத்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் குறைந்த விலைக்குக் கார்கள் கிடைக்குமானால் அதைத்தான் விரும்புவார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 55 லட்சம் பேர் பலத்த காயம் அடைந்து ஊனமுற்றவர்களாகவும், செயலிழந்த நிலையிலும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், கார்கள் தரமானவையாக இல்லாமல் இருப்பதும், பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படாமல் இருப்பதும்தான்.
இந்தியாவில் மிகுந்த வரவேற்புப் பெற்றிருக்கும் ஐந்தில் மூன்று பிரபலமான கார்கள், சர்வதேச தர நிர்ணயத் திட்டத்தில் நேரடி மோதல் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நொறுங்கி விட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அந்தக் கார்களின் தயாரிப்புத் தரம்தான் என்று கூறப்படுகிறது. இதே தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாடு
களில் விற்பனை செய்வதற்காக இந்தியாவில் தயாரிக்கும் கார்கள், தர நிர்ணய சோதனையில் சிறப்பானதாகத் தேர்ச்சி பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய அரசின் இப்போதைய சட்டதிட்டப்படி ஐரோப்பா, அமெரிக்காவில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகளின் அடிப்படை மோதல் சோதனைகூட இந்தியாவில் கார் தயாரிப்பாளர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தனியார் மோதல் சோதனைத் திட்டத்தின் அடிப்படையில் மோட்டார் கார்களின் பாதுகாப்பு நிர்ணயிக்கப்பட்டால் மட்டுமே, நுகர்வோர் கார்களின் தரத்தை எடை போட முடியும்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள், நடுத்தர மக்கள் கார்களை வாங்க முடியாத அளவுக்கு விலையை அதிகரிக்க வைத்து விடும் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்களின் விற்பனையையும், லாபத்தையும் உறுதிப்படுத்துவதைவிட, பொதுமக்களின் பாதுகாப்புதான் அரசுக்கு முன்னுரிமையாக இருந்தாக வேண்டும்.
அரசு கொண்டு வர இருக்கும் "சாலை வாகனம், பாதுகாப்பு மசோதா - 2014' என்பது பழைய 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு மாற்றாக இருக்கும். இது நடைமுறைக்கு வரும்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்திலான அடிப்படைப் பாதுகாப்பு அம்சங்களை அவர்களது கார் தயாரிப்பில் உறுதிப்படுத்தியாக வேண்டும். இப்போதாவது விழித்துக் கொள்கிறோமே, அந்த வரைக்கும் மகிழ்ச்சி!

No comments: