சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர் தெரிவித்த கருத்துகள் மிகுந்த வேதனை அளித்தது.
இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பெற்றெடுத்த சில தாய்மார்கள் பெண் குழந்தை முகத்தை பார்க்க விரும்பவில்லை எனவும், தாய்ப்பால் கொடுக்க ஆர்வம் இல்லையெனவும், மாமியார் சில வருடங்கள் கழித்துதான் குழந்தையை பார்த்தார் எனவும், கணவனும் பார்க்க வரவில்லை எனவும், வயதான காலத்தில் கவனிக்க வாரிசு இல்லையெனவும், கொள்ளி வைக்க ஆண் வாரிசு இல்லையெனவும், குல தெய்வக் கோயிலுக்கு செல்வதே நின்று விடும் எனவும், நகர்ப்புறங்களில் வாழும் நாகரிகப் பெண்களும், ஆண்களும் கூறியது வியப்பளிப்பதாக இருந்தது.
பெண்ணை நாம் தெய்வமாக வணங்குகிறோம். குறிப்பாக சக்தியாகவும், அம்மனாகவும் வணங்குகிறோம். இவ்வுலகையே தாங்கி நிற்பது பூமி மாதா என்று வழிபடுகிறோம். நமது பாரத நாட்டையே பாரதத் தாய் என்று அழைக்கின்றோம். மேலும், "தாயிற் சிறந்ததோர் கோயில் இல்லை' என்றும் கூறுகின்றோம்.
ஆனால், நடப்பது என்ன? பெண் குழந்தையே வேண்டாம் என வெறுக்கின்றனர். இன்றைக்கு கருவில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்தால் அதனைக் கருவிலேயே அழித்து விடுகின்றனர்.
இதன் விளைவாக தற்சமயம் இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 940 பெண்களே உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதத்தை (0 - 6 Years) பார்த்தால் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர்.
பிறப்பும், இறப்பும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான். இதற்கிடைப்பட்ட வாழ்நாளில் பெண்களை நாம் சமமாக பாவிப்பதில்லை. எல்லாக் குழந்தைகளும் பிறந்தவுடன் அழுகிறது. சில மாதங்களுக்கு பால் மட்டும் குடிக்கிறது.
கைக் குழந்தையாக இருக்கிற வரைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினரும் குழந்தைகளிடம் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. குழந்தை வளர வளர எல்லாக் குடும்பங்களிலும் உடை, சிகை அலங்காரம், விளையாட்டுப் பொருள்கள் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் ஏற்படுகிறது.
ஆணுக்கு, தேவைக்குமேல் முக்கியத்துவம் கொடுப்பதும், பெண்ணைக் குறைவாக மதிப்பதும் பல சமுதாயங்களில் நிலவி வருகிறது.
ஆணோ, பெண்ணோ அது நம் குழந்தைதானே. இரண்டையும் சமமாக நேசிப்போம். ஆணும், பெண்ணும் இல்லையென்றால் மனித வாழ்வே இல்லை. பெண் குழந்தையே குடும்ப வாழ்வில் அடித்தளமாக அமைகிறாள்.
இன்றைய பெண் குழந்தை நாளைய தாயாகிறாள். பெண் குழந்தைகள் முறையாக வளர்க்கப்பட்டு கல்வி அளிக்கப்பட்டால், பெண்களின் வாழ்க்கை எல்லா வகையிலும் சிறப்பாக அமையும். ஆண்களை விட பெண்கள் பெற்றோரைச் சிறப்பாக காப்பாற்றி வருகிறார்கள்.
பெண்கள் அரசியலில் ஈடுபட்டு முதல்வர், பிரதமர் போன்ற உயர்ந்த பதவிகளை அடைந்து திறம்பட செயல்படவில்லையா? விளையாட்டுத் துறையிலும் பெண்கள் தங்கப் பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்கவில்லையா?
பன்னாட்டு நிறுவனங்களில் பெண்கள் உயர்ந்த பதவிகளை பெற்று ஆண்டு வருமானமாக கோடிக்கணக்கில் பெறவில்லையா? பெண் குழந்தைகளின் கல்விக்கு குரல் கொடுத்த 17 வயது பள்ளி மாணவி மலாலாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பது பெண் இனத்திற்கே பெருமையல்லவா?
திருமணம் செய்து கொள்வதிலும் ஆண்களை போல் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும். பெண்களுக்கு சொத்தில் சம பங்கு அளிக்கும் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
தாய், தந்தையருக்கு ஈமச்சடங்கு செய்வதிலும் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். கணவன் - மனைவி ஆகிய இரு வீட்டாரையும் சமமாக உபசரிக்கும் மனப்பக்குவம் இருவருக்கும் மிகவும் அவசியம்.
பாலினம் என்பது இயற்கையானது. அதை நாம் மாற்ற முடியாது. பாலின வேறுபாடு செயற்கையானது. அதை மாற்றவும் ஒழிக்கவும் முடியும்.
பெண் குழந்தைகளைப் பேணிக் காப்போம்.
By
By
No comments:
Post a Comment