சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர்கூட அந்த வீடியோவில் இல்லை. ஆனால் இப்போது வைரலில் உலாவுகிறது அந்த வீடியோ.
இந்தியாவில் 636 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 614 மில்லியன் பெண்களுக்கு முறையான பப்ளிக் டாய்லெட் வசதி இல்லை என முகத்தில் அறையும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தோடு அந்த மூன்று நிமிட வீடியோ ஓடத் துவங்குகிறது. ஒரு பொது இடத்தில் சிறுநீர் கழிக்க ஒரு பெண் அவஸ்தைப்படும் காட்சிகள் முகத்தில் அறைகின்றன. ஒவ்வொருவரிடம் அவர் 'ஒதுங்க’ இடம் கேட்கும்போதும் சரியான இடத்தை யாரும் சொல்வதில்லை. அலட்சியமாகக் கடந்து செல்கிறார்கள். தவறான இடத்தைக் காட்டுகிறார்கள். கார் ஏறி பப்ளிக் டாய்லெட்டைக் கண்டுபிடிக்க யோசனை சொல்கிறார்கள். காருக்குப் பின்னால் போய் சிறுநீர் கழிக்கச் சொல்கிறார்கள். புதர் தெரிகிறதா பாருங்கள் என்கிறார்கள். கடற்கரைக்குப் போய் கடலுக்குள் இருங்கள் என்கிறார்கள். பொறுப்பாக யாரும் பதில் சொல்லவே இல்லை. சிலர் 'ஆமா இங்கெல்லாம் ஏன் பப்ளிக் டாய்லெட்ஸ் இல்லை?’ என அவரிடமே கேட்கிறார்கள். சில பேர் ரோட்டோரம் போகச் சொல்கிறார்கள். அதையும் கடைசியாக அந்தப் பெண் முயற்சி செய்கிறார். அந்த இடத்தில் கூலாக இரண்டு ஆண்கள் முதுகு காட்டி ஏற்கெனவே சிறுநீர் கழித்தபடி இருக்கிறார்கள். இவரைப் பார்த்ததும் அவசரகதியில் பாதியில் ஓடுகிறார்கள். ஒரு பெண் ஒதுங்க இடம் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விட்டு என்ன பயன் என கேள்வி கேட்பதோடு பெண்களுக்கு உரிமை, பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கச் சொல்லி அறைகூவல் விடுகிறது இந்த வீடியோ.
இந்த வீடியோவை 'வீடியோ டாடி/வீடியோ மாமா’ என்ற யூடியூப் சேனல் மூலம் மும்பையைச் சேர்ந்த யூத் டீம் தயாரித்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் 11,000 பேர் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுவது இயற்கை உபாதைக்கான முறையான இடம் இல்லாததால்தான் என்கிறது ஒரு குறிப்பு. நம் நாட்டில் செல்போன்கள் வைத்திருப்போர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். ஆனால் டாய்லெட் வசதி ஒட்டுமொத்த இந்தியாவிலுமே குறைவு.
பெண்களை தைரியமாக இந்த அடிப்படை பிரச்னைக்கு எதிராக கூச்சப்படாமல் குரல் கொடுத்து இந்த வீடியோவை நாமும் நம் பங்குக்கு ஷேர் செய்யலாம். வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=pR5WNuo23Uk
No comments:
Post a Comment