ஆட்சிகள் மாறுகின்றபோது காட்சிகளும் மாறுகின்றன. கடந்த ஆட்சியில் கங்கை - காவிரி இணைப்பு என்றும், இந்திய நதிகளின் இணைப்பு என்றும் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு, அதற்காகக் குழுக்களும் அமைக்கப்பட்டு, திட்டங்களும் தீட்டப்பட்டன.
அப்போதைய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையிலேயே குறிப்பிடப்பட்டது. உச்சநீதிமன்றமும் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அறிவுரையும் கூறியது. நாட்டு நலனில் அக்கறை கொண்டோரும், மக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், மன்மோகன் சிங் காலத்தில் ஓசையில்லாமல் கைவிடப்பட்டது - பல கோடி ரூபாய் இழப்புடன். அதற்குரிய காரணத்தையும் மக்களுக்குக் கூறவில்லை. மக்களையும், ஜனநாயகத்தையும் மதிக்கும் லட்சணம் இதுதான்.
இப்போது கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் பற்றிப் பேசப்படுகிறது. "கங்கை நதியைத் தூய்மைப்படுத்தியே தீருவோம்' என்று பிரதமர் மோடியும், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியும் சூளுரை செய்கின்றனர்.
ஆனால், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், "இந்தத் தலைமுறையில் இது சாத்தியமாகுமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கங்கை நதியை தூய்மைப்படுத்தி, அதன் பழம்பெருமையை மீட்போம்' என்று மக்களவைத் தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது.
தங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, "கங்கை நதியைப் புதுப்பிக்கும் திட்டத் துறை' என்ற துறையைப் புதிதாக உருவாக்கி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி வசம் அரசு அதனை ஒப்படைத்துள்ளது.
நாட்டிலுள்ள 29 பெரு நகரங்கள், 48 நகரங்கள், 23 சிற்றூர்கள் வழியாக கங்கை நதி பாய்கிறது. "இந்த நதியை மாசற்றதாக மாற்றுவோம்' என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.
கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு அரசு தேசிய முன்னுரிமை அளித்துள்ளது. அதற்கேற்ப இத்திட்டத்தை நிறைவேற்ற பொருத்தமான உத்திகளும், முனைப்பான பல செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
கங்கையாற்றின் நீரோட்டத்தைப் பராமரிப்பது, அதிலுள்ள பல்வேறு வகையான மாசுகளைக் குறைப்பது, நதியைப் பாதுகாப்பது பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தத் திட்டத்தில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி செய்வது ஆகியவை முனைப்பான செயல் திட்டங்களில் அடங்கும்.
இத்திட்ட அமலாக்கத்தின் இலக்குகளை எட்டுவது தொடர்பான பிரச்னைகள் பற்றி ஆராய்வதற்கு மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கங்கை நதிப் படுகை மேலாண்மைத் திட்டத்தை இறுதி செய்வதற்கு ஏழு ஐ.ஐ.டி. நிறுவனங்கள் அடங்கிய கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை இந்த ஆண்டு டிசம்பருக்குள் கிடைக்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரத்தைப் பரிசீலித்த நீதிபதிகள், "உங்களுடைய செயல்திட்டத்தைப் பார்த்த பிறகு கங்கை நதி இன்னும் 200 ஆண்டுகளானாலும் தூய்மைப்படுத்தப்படாது என்று தோன்றுகிறது...'' என்று தெரிவித்துள்ளனர்.
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கடந்த 2003-இல் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
எனவே, கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கங்கை நதி பெருகி வரும் 135 கி.மீ. தொலைவு வரை அமைந்துள்ள சுற்றுச்சூழல் சிக்கல் சார்ந்த பகுதிகளில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
"கங்கை தனது பழம் பெருமையைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அந்த நதியை, அதன் அசல் வடிவத்தில் அடுத்தத் தலைமுறையினராவது பார்க்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள். நாம் அதைக் காண்போமா, இல்லையா என்பது தெரியாது...'' என்றும் ஐயத்தை எழுப்பியுள்ளனர்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவது பற்றியும் நீதிமன்றம் கவலைப்படவில்லை. ஆனால், 2,500 கி.மீ. நீளத்துக்குப் பாயும் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் பற்றி சாமானிய மக்களுக்கு எவ்வாறு விளக்கப்படும் என்பது பற்றியே நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவது என்ற பிரதமரின் கனவுத் திட்டம் நனவாக வேண்டும் என்றே அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகின்றனர். உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த முயற்சி கங்கை நதியோடு நின்றுவிடக் கூடாது; நாட்டிலுள்ள எல்லா ஆறுகளுக்கும் தொடர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருக்கிறது.
"காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு'
என்று தமிழ்நாட்டின் பெருமையை ஆறுகளைக் கொண்டு அளவிட்டுப் பாடினார் பாரதியார்.
தமிழ்நாட்டில் நீர்நிலைகளுக்குக் குறைவில்லை. குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், கண்மாய், ஆறுகள் என பல்வேறு பெயர்களால் இவை அழைக்கப்பட்டு வந்தன. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்கள் காலம் முதல் இவை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. "ஏரி வாரியம்' இவற்றைக் கவனித்து வந்ததாக சோழர் காலக் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
இந்த நீர்நிலைகள் பற்றி 1970-இல் பொதுப்பணித் துறை அளித்த புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் இருந்தன. இப்போது அவையெல்லாம் எங்கே போயின?
சிலரால் அபகரிக்கப்பட்டன. மற்ற குளம், குட்டை, ஏரி, வயல்கள் எல்லாம் "ரியல் எஸ்டேட்' என்ற பெயரால் வீட்டுமனைகளாக்கப்பட்டு கொள்ளை விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நீரும், மணலும், மலைகளும்கூட களவாடப்படுகின்றன.
இதனால் ஆறுகள் வறண்டு பாலைவனமாக மாறிவிட்டன. சாக்கடைகளாலும், சாயக் கழிவுகளாலும், தோல் தொழிற்சாலை வெளியிடும் நச்சு நீராலும், தொழிற்கூடங்களின் ரசாயனக் கழிவுகளாலும் பல ஆறுகள் செத்துப் போய்க் கொண்டிருக்கின்றன. அரசும், அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருக்கின்றனர்.
ஆறுகள் இல்லாமல் விவசாயம் ஏது? விவசாயம் பாழாகிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கே குளிக்கவும், குடிக்கவும் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய கட்டாயம். நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
"நதிகளின் தேசத்தின் ஆரோக்கியத்தைப் பிரதிபலிப்பவை. ஒரு நாட்டின் நதி வறண்டு போகும்போது, அந்நாட்டின் தலைவிதியும் வறண்டு போகும். இந்தியாவை உலகின் பொருளாதாரத் தலைநகராக மட்டுமின்றி, ஆன்மிகத் தலைநகராகவும் மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாகும்.
அதற்கு நதிகளின் தடையற்ற ஓட்டம், தூய்மை ஆகியவை அவசியமாகும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளவை உடனடியாக செயல்படுத்த வேண்டியவை.
"நடந்தாய் வாழி காவேரி' என்று இளங்கோவடிகளால் பாராட்டிப் பாடப்பட்ட காவிரி, இப்போது நடக்க முடியாமல் முடங்கிப் போய்விட்டது. "வையை என்னும் பொய்யாக் குலக்கொடி' என்று சிலப்பதிகாரம் பாராட்டிய வையை ஆறு வறண்டு போய்விட்டது.
காவிரி முதல் தாமிரவருணி வரை, வையை முதல் பாலாறு வரை எல்லா ஆறுகளும் பழம்பெருமையை இழந்தது மட்டுமல்ல, உயிருக்கே போராடிக் கொண்டிருக்கின்றன.
பொது மக்களும், தன்னார்வ அமைப்புகளும் போராடிப் பார்த்து அலுத்துப் போயினர். தொழிற்கூடங்கள் வெளியிடும் நச்சுக் கழிவுநீரை ஆற்றில் விடுவதை மத்திய - மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டில் தொழில்வளத்தை மேம்படுத்திடத் துடிக்கும் அரசுகள் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமா?
நதிகள் இல்லையேல் நாடு இல்லை.
By
No comments:
Post a Comment