தற்போது கணினி உலகம், செல்போன்களிலேயே வந்துவிட்டது. தனக்குப் பிடித்தமான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு மகிழ்வதுடன், விடியோ மற்றும் வலைதளத்தைக் காண்பது, வலைதளம் மூலம் உரையாடல்களைப் பகிர்ந்துகொள்வது, விளையாட்டு உள்ளிட்ட தேவைக்கேற்ற மென்பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற வசதிகள் முன்பு கணினியில் மட்டுமே சாத்தியம்.
ஆனால், செல்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயன்பாடு வந்ததையடுத்து, இந்த வசதிகள் அனைத்தும் செல்போன்களிலேயே சாத்தியமாகியுள்ளன. இதனால், பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு இயங்குதள செல்போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளாக்பெர்ரி, ஆப்பிள் போன்ற செல்போன்களுக்கென தனி இயங்குதளம் உள்ளது. சோனி உள்ளிட்ட ஒரு சில நிறுவன செல்போன் நிறுவனங்கள் மட்டுமே மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தின.
ஆனால், சாதாரண மக்களால் எட்டாத உயரத்தில் அவற்றின் விலை உள்ளதால் ஆண்ட்ராய்டு இயங்குதளப் பயனீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. மேலும், விண்டோஸ் இயங்குதள செல்போன்களில் அப்ளிகேஷன் எனப்படும் மென்பொருள்களையும் இலவசமாகப் பெற முடியவில்லை என்ற ஏக்கமும் விண்டோஸ் இயங்குதள உபயோகிப்பாளர்களிடையே உள்ளது.
இதனால், விலை குறைவாக உள்ளதால் மைக்ரோமேக்ஸ், ஜியோனி மற்றும் சாம்சங் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட் போன்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆனால், செல்போன் விற்பனையில் முதலிடம் வகித்த நோக்கியா நிறுவனம் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யாமல் தனது "எக்ஸ்' இயங்குதளத்தை நம்பி இருந்தது. இதனால், ஸ்மார்ட் போன் சந்தையில் நோக்கியா செல்போன் நிறுவனம் சரிவை சந்தித்தது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா செல்போன் நிறுவனத்தை ரூ.46 ஆயிரம் கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
இதன்மூலம் தனது நிறுவன மென்பொருள்களை கணினி மட்டுமன்றி செல்போன்களிலும் கோலோச்ச செய்ய வேண்டும் எனும் நோக்கில், வாங்கிய வுடன் நோக்கியா செல்போன்களில் ஏற்கெனவே இருந்த "எக்ஸ்' இயங்குதளத்திற்கு பதிலாக விண்டோஸ் இயங்குதளத்தையும் புகுத்தியுள்ளது.
ஆனால், மென்பொருள் துறையில் கோலோச்சும் அளவிற்கு மைக்ரோசாப்ட் இதர துறைகளில் முதலிடம் பிடிக்குமா என்பதே கேள்வி.
உதாரணமாக இணையதளத்தில் தேடுபொறி என்றாலே "கூகுள்'தான் என அனைவரும் கூறிவிடும் அளவில் அது முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக முதலிடம் பிடிக்கும் வகையில் "பிங்' என்ற தேடுபொறியை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், முடியவில்லை.
அதுபோல சமூக வலைதளம் என்றாலே "ஃபேஸ்புக்'தான் என்ற நிலையுள்ளது. உலக அளவில் செல்போன் மூலமாக மட்டுமே தினசரி 100 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக் உபயோகின்றனர்.
இதிலும் கால்பதிக்கும் வகையில் வெளிவந்ததுதான் மைக்ரோசாப்ட்டின் "யம்மர்' சமூக வலைதளம். இதிலும் மைக்ரோசாப்ட்டால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.
முகநூல் சமூக வலைதளம் விளம்பர வருவாயை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், யம்மர் சமூக வலைதளம் உறுப்பினர்களின் கட்டணத்தைச் சார்ந்துள்ளது. மேலும், இதில் தகவல்கள் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதப்படுவதால், உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இந்தத் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளன.
ஆக, மைக்ரோசாப்ட் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற நிலை தொடர்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு செல்போன்கள் மூலம் இணையதளத்தை தொடர்புகொள்ளும்போது அவரைப் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு உண்டு.
இதை சாதகமாகப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் இயங்குதள நோக்கியா செல்போன்களில் தகவல் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், குறைந்த விலையில் வெளியிட்டு ஆண்ட்ராய்டின் போட்டியைச் சமாளிக்குமா அல்லது ஆண்ட்ராய்டை ஆளவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
No comments:
Post a Comment