Blogger Widgets

Total Page visits

Friday, November 21, 2014

நல்ல பிள்ளைகளே நல்ல பிரஜைகள்!

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வெளிநாடுகளுடனான நமது உறவு, நமது நாட்டின் தூய்மை எனப் பல அம்சங்களிலும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த முயற்சிகள் பலனளிக்குமா அல்லது தோல்வியைத் தழுவுமா என விவாதங்கள் உருவாகியுள்ளன.
மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால், அரசுத் திட்டங்கள் பல பலனளிக்காமல் போனது நமது நாட்டில் நடந்துள்ளது. வளர்ந்துவிட்ட மேலை நாடுகளின் முன்னேற்றத்திற்கு அடிப்படையே மக்களின் பங்களிப்புதான்.
அதற்குக் காரணம், அரசியல், ஆட்சிமுறை, அரசுத் துறைகள், பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்துவது மட்டுமன்றி, அந்த நாடுகளில் சமூக அமைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகளின் வளர்ச்சி, கல்விக் கூடங்களில் அவர்களுக்குத் தரமான வாழ்க்கை நடைமுறைகளைப் போதிப்பது போன்ற நடவடிக்கைகளில் பெற்றோர், ஆசிரியர்கள் கட்டுக்கோப்பான நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
ஆனால், நம்நாட்டில் இதுபோன்ற விவரங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதுகூட இல்லை எனலாம். எடுத்துக்காட்டாக, மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ள ஜப்பானில் இந்த அம்சம் எப்படி நடைமுறையில் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
ஜப்பானியப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தினமும் 15 நிமிடங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து பள்ளியின் எல்லா இடங்களையும் பெருக்கியும், தண்ணீரால் கழுவியும் சுத்தம் செய்கிறார்கள். இந்தக் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும்போது, தங்களின் இருப்பிடத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விரும்பத்தக்க நடைமுறை ஆகிவிடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அந்நாட்டில் நாய்கள், பூனைகள், பறவைகளை வளர்ப்பவர்கள் அந்தப் பிராணிகளை பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது, ஒரு கைப்பையையும் கொண்டு செல்ல வேண்டும் என்பது விதி. அந்தப் பிராணியின் கழிவுகளை அந்தப் பைகளில் நிரப்பி குறிப்பிட்ட கழிவுக் கூடங்களில் போடுவது சாதாரணமானவர்கள் முதல் மிக உயரிய பதவிகளில் இருப்போர் வரை மிகவும் விரும்பிச் செய்யும் சுத்த நடவடிக்கை.
சுத்தம், சுகாதாரத்தின் அடிப்படை என்பதை சிறிய பருவத்திலேயே பெற்றோராலும், ஆசிரியர்களாலும் சிறு வயதிலேயே பயிற்றுவிக்கப்பட்ட ஜப்பானிய மக்களுக்கு சுத்தமான சூழ்நிலை ஒரு சமூக நீதி ஆகிவிடுகிறது.
தனி மனிதர்களின் இதுபோன்ற சுகாதார நடவடிக்கைகள் போக, அரசின் சுகாதாரத் துறை ஊழியர்கள் பொது இடங்களைத் துப்புரவு செய்யும் நடைமுறையும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
சுகாதாரத் துறையின் ஓர் ஊழியருக்கு ஜப்பானில் "சுகாதாரப் பொறியாளர்' என்ற உயரிய பட்டம் உள்ளது. சுத்தம் செய்யும் இந்த ஊழியருக்கு மாதச் சம்பளம் சுமார் 8,000 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) இருக்கும். ஒரு கல்லூரி ஆசிரியருக்கு இதே அளவு சம்பளம் எனும்போது, அந்நாட்டில் சுத்தம், சுகாதாரத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நமக்குப் புரியும்.
இதுபோன்ற வேலைக்கு எடுக்கப்படும் ஆள்கள் சுத்தம், சுகாதாரம் ஆகிய விவரங்களைப் பாடங்களாக எடுத்துப் படித்து தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. நவீன நடைமுறைகளைப் பயன்படுத்தி, சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது முதல் சுகாதாரமான நடைமுறைகளை எல்லா இடங்களிலும் பின்பற்றுவது வரை ஆராய்ச்சிகள் அந்நாட்டில் சர்வசாதாரணமாகச் செய்யப்படுகிறது.
அந்நாட்டில் ஒரு நடவடிக்கையில் சமூகத்தின் பங்களிப்பு எவ்வளவு தரமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் ஜப்பான் நாட்டின் மக்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடான விதிகள் சார்ந்த நடைமுறைகளுடனும் ஈடுபட்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
ஜப்பானில் இயற்கை வளங்களோ, விவசாயம் செய்ய நிலங்களோ கிடையாது. அங்கே பூமி அதிர்ச்சி, கடல் சீற்றம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவது இயல்பானது.
ஆனால், இவை எல்லாம் இருந்தும் மக்களின் கட்டுக்கோப்பான உழைப்பினாலும், தரமான அரசியல் மற்றும் அரசு நடவடிக்கைகளாலும், உலகின் நான்காவது சிறந்த பொருளாதார நாடாக உருவாகியுள்ளது ஜப்பான். இரண்டாம் உலகப் போரின் கடைசிக் கட்டத்தில் உலகமே அதிர்ந்து போகும் வகையில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் முதன்முதலாக அணுகுண்டு வீசப்பட்டது.
அதனால் விளைந்த அழிவுகளிலிருந்தும், பாதிப்பிலிருந்தும் ஹிரோஷிமா நகர் பத்து ஆண்டுகளில் சரிசெய்யப்பட்டு, பழைய பொருளாதார செழிப்பிற்கு திரும்பியதை கண்டு உலகமே அந்நாட்டின் உழைப்பு, பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளை தெரிவித்தது.
விதிமுறைகளைப் பின்பற்றுவதில் ஜப்பானியர்கள் எந்த அளவிற்கு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, அந்நாட்டில் ரயில்களிலும், ஓட்டல்களிலும் கைப்பேசிகளை உபயோகிக்கக் கூடாது எனும் விதியைக் கூறலாம். விதிகளை மீறி, ரகசியமான சில இடங்களில் நின்று கொண்டு கைப்பேசிகளை உபயோகிக்காமல், எல்லோருக்கும் உபயோகமான அமைதியான ஒரு சூழ்நிலை உருவாவதை மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஜப்பான் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரையிலும் நீதிபோதனை எனும் பாடம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. அந்தப் பாடத்தில் பெரியவர்களுடனும், சக மாணவர்களுடனும் நல்ல முறையில் ஒழுக்கமான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி மையப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் மிகவும் வசதி உள்ளவர்கள்கூட தங்கள் வீடுகளில் வேலைக்கு ஆள்கள் வைத்துக் கொள்வதில்லை. எல்லா வேலைகளையும் தாயும், தந்தையும் செய்வதை குழந்தைகள் தங்கள் சிறுவயது முதலே கவனித்து அதே கலாசாரத்தை தங்களுக்குள் கிரகித்துக் கொள்வது அங்கே நடந்து வருகிறது.
உணவு விடுதிகளிலோ, பொது இடங்களில் பந்திகளிலோ உணவு அருந்தும்போது சிறிதளவுகூட உணவை வீணடிக்காத நடைமுறை அந்நாட்டில் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் ஏழை மக்கள் ஒரு வேளைக்கு தரமான முழுஅளவிலான உணவில்லாமல் வாடும்போது, நாம் உணவை வீணடிக்கக்கூடாது எனச் சிறுவர்களுக்கு பெரியவர்கள் கூறுவார்கள்.
அந்நாட்டில் எல்லோரும் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்வதனால் எந்தத் தாமதமும் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் எல்லா நடவடிக்கைகளும் நடந்தேறுகின்றன. ரயில்கள் சரியான நேரத்திற்கு வருகின்றன, புறப்படுகின்றன. ஓர் ஆண்டில் ஜப்பானில் ஓடும் ரயில்கள் தாமதமாக வந்தது 7 வினாடிகள் மட்டுமே என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
மாணவர்கள் ஒவ்வொரு முறை உணவு அருந்திய பின்னரும் பல் துலக்குவது அந்நாட்டின் நடைமுறை. அது அங்கே இளம் வயதிலேயே போதிக்கப்படுகிறது. அதுபோலவே அரை மணி நேரத்திற்குள் உணவு அருந்தி முடிக்க வேண்டும் என்ற பழக்கமும் பள்ளி மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.
உணவு சரியான வகையில் ஜீரணமாகும் என்பது தனிமனிதனின் சுகாதாரம் பற்றிய நம்பிக்கை. மாணவப் பருவத்தில் பின்பற்றப்படும் உணவு உண்ணும் நடைமுறை அவர்கள் பெரியவர்களான பின்னரும் பின்பற்றப்படுகிறது.
மாணவர்களுக்கு இதுபோன்ற நடைமுறை ஒழுக்கங்கள் பலவற்றையும் மிகுந்த சிரத்தையுடன் பல்லாண்டு காலமாக ஏன் நடத்துகிறார்கள் ஜப்பானியர்கள்? "இன்றைய குழந்தைகளே நாளைய மக்கள். அவர்களது குணாதிசயங்கள், பழக்க வழக்கங்களில்தான் எங்கள் நாட்டின் முன்னேற்றம் அடங்கியுள்ளது' எனக் கூறுகிறார்கள் அந்நாட்டினர்.
இதுபோன்று சமூக நலனில் பெரியவர்கள் அக்கறை கொண்டிருப்பதுடன், பல முன்னேறிய நாடுகளில் குழந்தைகளின் தரமான வளர்ச்சியை பூரணமாகக் கவனிக்கும் வகையில் அரசின் குழந்தைகள் நலத் துறை இயங்குகிறது.
2012-ஆம் ஆண்டில் நார்வே நாட்டில் குடியேறிய ஓர் இந்தியத் தம்பதியின் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, குழந்தைகளை அரசின் குழந்தைகள் நல விடுதிக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, குழந்தைகளின் தாய் நார்வே நாட்டின் விதிகளின்படி சிறை செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவானது.
இந்திய அரசின் வெளியுறவுத் துறையினரிடம் "இந்தியாவின் குழந்தைகள் வளர்ப்பு நடைமுறைகளை எங்கள் நாட்டில் பிறந்த இந்தக் குழந்தைகள் மீது சுமத்தியது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம். இங்கு பிறந்த குழந்தைகள் எங்கள் நாட்டின் பிரஜைகள். நன்றாக வளர்க்கப்படும் குழந்தைகள்தான், நல்ல பிரஜைகளாக உருவாவார்கள்' என கூறியுள்ளனர் நார்வேயின் அதிகாரிகள்.
ஆக, நமது நாட்டிலும் நமது குழந்தைகளை தரமான முறையில் பெற்றோர் வளர்த்து, பள்ளிகளில் நல்ல பழக்க வழக்கங்களை ஆசிரியர்கள் உருவாக்கி, நல்ல இந்தியர்களை உருவாக்க வகை செய்யும் நடைமுறைகள் உடனடித் தேவை.

By என். முருகன்

No comments: