Blogger Widgets

Total Page visits

Friday, November 28, 2014

ஜெயித்துக் காட்டுவோம் - கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

இன்றைய சமூகத்தில், ஒவ்வொருவர் மனதையும், நான்கு விதமான பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அந்த பூச்சிகள், உங்கள் மனதையும் அரித்தபடி தான் இருக்கின்றன.சுயநலம், நன்றி கெட்டத்தனம், உணர்ச்சியற்ற தன்மை, எடை போடுதல் ஆகியவையே அவை.



சுயநலம்:நீங்கள் எல்லாம் வறுமையில் இருந்து வந்திருப்பீர்கள். உங்களால் சாதிக்க முடியாது என நினைத்துக் கொண்டிருப்பீர்கள். நானும், உங்களைப் போல, மாநகராட்சி பள்ளியில் படித்து தான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன். வறுமையில் முன்னேறுவது பெரிய விஷயம் இல்லை. சுயநலத்தால் தான் முன்னேற முடியாது.ஒரு கதை... வறுமையில் உள்ள, அப்பா இல்லாத ஒரு குடும்பத்தில், அம்மா தன் நிலத்தை விற்ற பணத்தில், மகளுக்குப் பிடித்த தங்க கம்மலை வாங்கிக் கொடுக்கிறார். அதன் பின்னும், அம்மாவிடம் பணம் இருப்பதை அறிந்து, மற்றொரு கம்மல் கேட்கிறாள் மகள்.இப்படித்தான், இன்றைய மாணவர்கள் சுயநலத்துடன் இருக்கின்றனர். ஆனால், அந்த தாய்க்கும் ஆசைகள் இருக்கும்.அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூட உங்களுக்கு தோன்றாது. அப்படி இருந்தால், கண்டிப்பாக, உங்களால் முன்னேற முடியாது.

நன்றி கெட்டத்தனம்:பெரும்பாலான அப்பாக்கள் குடிப்பதாகவும், அவர்களை வெறுப்பதாகவும், மாணவர்கள் கூறுகின்றனர். குடிப்பது தவறு தான். ஆனால், அந்த அப்பாக்கள் குடிப்பதற்கு பின்னால், பல பிரச்னைகள் இருக்கலாம்.அதைப் பற்றி ஆராய, யாருக்கும் மனம் வராது. பலர், உடல் உழைப்பின் களைப்பு தீரவும், பலர் ஏமாற்றங்களை மறக்கவும் என, பல்வேறு காரணங்களுக்காகவும் குடிக்கலாம். ஆனால், அந்த அப்பாக்கள் உங்களுக்கு செய்யும்

செயல்களை எண்ணிப் பார்த்தது உண்டா?இன்னொரு கதை... ஒரு அப்பா, ஒரு துணிக் கடைக்குச் செல்கிறார். அவருக்குப் பிடித்த சட்டையைப் பார்க்கிறார். அதை வாங்கப் போகும்போது, மகன் காலில் இருக்கும், பிய்ந்த செருப்பு ஞாபகம் வருகிறது. அவர், உடனே, செருப்பு வாங்கி வருகிறார். இப்படி, உள்ள அப்பாக்களை தான், நீங்கள் வெறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; படிக்க மறுக்கிறீர்கள்.

உணர்ச்சியற்ற தன்மை:உங்களுக்காக, இரண்டு ஜீவன்கள் உருகியபடி இருப்பதை, நீங்கள் உணர வேண்டும். இளமையில் வறுமையை விட, முதுமையில் வறுமையே கொடுமையானது. அந்த வறுமையை விரட்ட, நீங்கள் படிக்க வேண்டும்.இல்லையேல், உங்கள் தாயைப் போல, எங்கேனும் வீட்டு வேலை செய்து கொண்டோ, தந்தையை போல குடித்துக் கொண்டோ தான் இருப்பீர்கள் என்பதை உணருங்கள். உணராமல் இருப்பது தான், உணர்ச்சியற்ற தன்மை.

எடை போடுதல்

மாணவர்களே... இப்போது, நீங்கள் இருக்கும் சூழலையும், பின் இருக்கப்போகும் சூழலையும் எடை போடுங்கள். தியான நிலையில், கண்களை மூடிக்கொண்டு, மனதால், நான் சொல்லும்

இடங்களுக்கு வாருங்கள்.

இப்போது, உங்கள் வீட்டுக்கு போகிறீர்கள். அங்கு, வறுமையின் பிடியில் உங்கள் பெற்றோர், ஏதோ ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள், அவர்களை கவனிக்காமல், கிரிக்கெட் விளையாடவோ, திரைப்படம் பார்க்கவோ செல்கிறீர்கள். திரும்பி வந்து, உணவை குறை சொல்கிறீர்கள்.உங்களுக்கு 3 வயதாக இருக்கும் போது, உங்களுக்கு உடல் நலமில்லை. உங்களை துாக்கிக் கொண்டு, ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடுகின்றனர். அவர்களைத் தான், இப்போது நீங்கள் திட்டுகிறீர்கள்.

உங்கள் தவறுகளை உணராவிட்டால், உங்களால், எதையும் செய்ய முடியாது. இப்போது, காலங்கள் ஓடி விட்டன. நீங்கள், வசதியான வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள், பெற்றோரின் கால்களை, உங்கள் மடியில் வைத்துக் கொண்டு, நீங்கள் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறீர்கள். அவர்களும் மன்னித்து விடுகின்றனர்.

அதே போல், அவர்கள் சூழ்நிலையால் செய்த தவறுகளையும் நீங்களும் மன்னித்து விடுங்கள். இப்போது, ஆண்டவனிடம் வேண்டுங்கள். 'இறைவா, என் குடும்பத்தை காப்பாற்றி நல்ல நிலைக்கு வர, நான் தினமும், மூன்று மணி நேரம் படிக்க வேண்டும். அதை புரிந்து படிக்கும் மன நிலையை எனக்கு அருள வேண்டும். நான், பிளஸ் 2வில் ஜெயிப்பேன். அதற்கான, மன உறுதியை கொடு' என, வேண்டிக் கொள்ளுங்கள்.இப்போது, ஜெயித்து விட்டீர்கள். மெதுவாக, கண்களைத் திறந்து அருகில் இருப்பவர்களைப் பார்த்து 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி அணைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments: